Advertisement

பூவிலே சிறந்த பூ 'சிரிப்பூ'

இலக்கியச் சுவைகளுள் மோனையைப் போல் முதலில் நிற்பது நகைச்சுவை. “அது மனித குலத்திற்கு வாய்த்த வரம், அந்தரங்கத்தைப் புலப்படுத்தும் ஒளிச்சரம்” என்பார் தெலுங்குக் கவிஞர் சி.நாராயண ரெட்டி.“பற்கள் என்ற முட்களே பூக்கும் மலர் புன்னகை” என்று கவிக்கோ அப்துல் ரகுமானும், “பவளக் கொடியில் முத்துக்கள் பூத்தால் புன்னகை என்று பேராகும்” எனக் காவியக் கவிஞர் வாலியும் புன்னகையைச் சொல்லோவியமாக வடிப்பர். “ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் இதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது” எனச் சிரிப்புக்குப் புகழாரம் சூட்டுவார் கவிப்பேரரசு வைரமுத்து.“என்னைப் பொறுத்த வரை பிரார்த்தனை எவ்வளவு புனிதமானதோ அதே போல் சிரிப்பும் புனிதமானதாகும்” எனச் சிரிப்பின் சிறப்பினைப் பறைசாற்றுவார் ஓஷோ. “பொதுவாகவே, அறிவைத் துலக்க, ஆன்மாவை உயர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள, உடம்பில் வியாதிகள் வராமல் தடுத்துக் கொள்ள நகைத்தல் நல்லது” என மூதறிஞர் வெ.சாமிநாத சர்மா கூறியிருக்கிறார். நகைச்சுவையின் தனிச்சிறப்பு ஒரு கருத்தை நகைச்சுவையோடு சொல்லும் போது அந்தக் கருத்து கேட்பவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். நகைச்சுவைக்கு உள்ள தனிச்சிறப்பு அது. நேர்காணல் ஒன்றில் இக்கருத்தினை விளக்க எழுத்தாளர் சாவி காட்டிய உதாரணம்சாப்பிட வந்தவர் ஓட்டல் சர்வரிடம் கேட்கிறார். 'இதோ பார்! நீ கொண்டு வந்து வைத்த கோழி பிரியாணியில் ஒரு ஈ செத்துக் கிடக்குது!''இவ்வளவு பெரிய கோழி செத்துக் கிடக்குதே, அது உங்க கண்ணில் படலே. சின்ன ஈ செத்துக் கிடப்பது மட்டும் பெரிசாத் தெரியுதாக்கும்!' என்றார் சர்வர். 'எப்போதோ படித்த இந்த நகைச்சுவையைத் துணுக்கை நினைத்துச் சிரிக்கும் போதெல்லாம் கூடவே அதில் பொதிந்துள்ள கருத்தும் என்னைச் சிந்திக்க வைக்கும்' என்றார் சாவி. ஒரு தடவை திருக்குறளார் வீ.முனிசாமியும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு ரயில்வே 'கேட்'டருகே டிரைவர் காரை நிறுத்தினார். கலைவாணர், “என்னப்பா ஆச்சு?” என்று கேட்டார். “'கேட்டு' சாத்தியிருக்கிறான் ஐயா!” என்று டிரைவர் சொன்னார். உடனே கலைவாணர் திருக்குறளாரைப் பார்த்து, “பொய் சொல்லுகிறான், பார்த்தீர்களா? 'கேட்டு' சாத்தினான் என்று சொல்லுகிறானே, நம்மைக் கேட்டா சாத்தினான்?” இயல்பான நகைச்சுவை என்பது இது தான்! சொல் விளையாட்டின் மூலம் கலைவாணர் இங்கே நயமான நகைச்சுவையை தந்தார்.மூவகை நகைச்சுவைகள் நகைச்சுவையில் முறுவலித்தல், அளவே சிரித்தல், பெருகச் சிரித்தல் என மூன்று வகைகள் உண்டு. முதலாவது புன்முறுவல்; அதாவது, குமிண் சிரிப்பு. இடைப்பட்டது அளவான சிரிப்பு; மூன்றாவது வெடிச் சிரிப்பு. 1925-ல் பெர்னார்ட் ஷாவிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போதும் வழக்கமான நகைச்சுவை உணர்வோடு ஷா கூறினார் “இந்த ஆண்டில் நான் நுால் ஒன்றும் எழுதவில்லை. உலகம் அதைக் கண்டு மகிழ்ந்து, எனக்கு நன்றி பாராட்டிச் செய்த செயல் இது.” படிப்பவர் இதழ்களில் குமிண் சிரிப்பைத் தோற்றுவிக்கும் நகைச்சுவை இது. முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்து சொற்பொழிவின் இடையே சொன்ன நகைச்சுவை“ஒருவன் 'நான் என்ன பிராணி என்றே எனக்கு தெரியவில்லை' என்று நண்பனிடம் கூறினான். 'ஏன்?' என்று நண்பன் கேட்டான். அதற்கு அவன் சொன்ன பதில்... 'பூனையைப் பார்த்து எலி பயப்படுகிறது; எலியைப் பார்த்து கரப்பான் பூச்சி பயப்படுகிறது; கரப்பான் பூச்சியைப் பார்த்து என் மனைவி பயப்படுகிறாள்; மனைவியைப் பார்த்து நான் பயப்படுகிறேன். நான் என்ன பிராணி என்றே தெரியவில்லை!'” கேட்பவர் இடையே அளவான சிரிப்பைத் தோற்றுவிக்கும் நகைச்சுவை இது. அறிஞர் அண்ணாதுரை பேசிய கூட்டத்தில் சில முரட்டு இளைஞர்கள் அவருக்கு முன் வந்து, “ஆணையிடுங்கள் அண்ணா, எங்கள் தலையையே உங்களுக்குத் தருகிறோம்” என்றார்கள். “தம்பிகளே! உங்கள் தலைகள் வேண்டாம்; இதயங்கள் தாருங்கள் போதும்!” என்றார் அண்ணாதுரை. காரில் திரும்பி வரும் போது நண்பர்கள் கேட்டார்கள்: “இதயங்கள் தாருங்கள், தலைகள் வேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்?” “ஆமாம், அவர்கள் தலைகளில் என்ன இருக்கிறது? அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என்று அண்ணாதுரை சொன்னதும் நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். வெடிச் சிரிப்பை எழுப்பும் அற்புதமான நகைச்சுவை இது! 'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்'- சிரிப்போம், மகிழ்வுடன் வாழ்வோம்.
-பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், -பேச்சாளர்மதுரை. 94434 58286

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement