Advertisement

தேசத்தைக் காத்தல் செய்! ; இன்று குடியரசு தினம்

உலகின் மிகப்பெரிய ஐனநாயக நாடாக விளங்கும் இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியத் திருநாள் இன்று. தேசத்தை நாமாகவே நம்முடைய சட்டதிட்டங்களின் வாயிலாக ஆள்வதற்கு அடித்தளதமிட்ட நாள். இந்த உலகின் வேறு எந்த தேசத்திலும் இல்லாத வகையில் எத்தனை மொழிகள், எத்தனை மதங்கள், எத்தனை இனங்கள் அத்தனையும் கடந்த ஒரு ஐனநாயகம் சாத்தியம் என்றால் அது நமக்கும் நம்முடைய தேசத்திற்குமே மிகப்பெரிய பெருமை. தனிமனித உரிமைகள் முதல் ஒட்டுமொத்த தேசத்தின் கடமைகள் வரை அனைத்துமே மிகத்திறமையான வல்லுனர்களால் சட்டங்களாக வடிவமைக்கப்பட்ட திருநாள்.
குடியரசு என்பதன் பொருள் மக்காளாட்சி என்பதாகும். அதாவது தேர்தல் மூலமாக மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் முறை. 'மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு' என்று குடியரசுக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர் முன்னாள் அமெரிக்க ஐனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகையை மக்களுக்கான அரசை இந்தியாவில் உருவாக்கினால்தான், இந்தியா முழுமையான சுதந்திரம் பெற்ற நாடாக கருதப்படும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்திய அரசியல் அமைப்புச் சாசனம்.அந்த அரசியல் அமைப்புச்சாசனமே இன்றளவும், இந்தியாவை உலக நாடுகள் அனைத்தும் பெருமையோடு பார்க்க வழிவகுத்துத் தந்துள்ளது.
'இமயச்சாரலில் ஒருவன் இருமினால்குமரி வாழ்பவன் மருந்து கொண்டு ஓடுவான்'
என்பார் பாவேந்தர் பாரதிதாசன். இனம், கலாசாரம், மொழி என்ற எல்லைகளைக் கடந்து மனிதம் போற்றிய மகத்தானவர்கள் நிறைந்த பூமி இது. தங்களுக்குள் ஆயிரம் பிரிவுகள், ஜாதிகள் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும், நம்முடைய தேச விடுதலையை அனைவரும் இணைந்த நிலையிலேயே பெற முடிந்தது.

கொடி வணக்கம்
'கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்- எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர்- தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்'
என்றே கற்பனையில் கூட அத்தனை நம்பிக்கையோடு பாடியவன் பாரதி. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் நிகழக்
கூடிய ஒன்றை நினைத்து, அதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே கனவாக கண்டு அதை மிக உறுதியோடு பாடி நின்ற அந்த பாரதியின் பாடல்தான் இன்று நமக்கெல்லாம் கொடிவணக்கப் பாடலாகும்.
கொடியை பார்த்து வணக்கம் செய்து கொண்டே, தேசத்தின் விடுதலைக்கு இன்னுயிர் ஈந்த தலைவர்களை நினைத்தபடியே, சுதந்திரக் காற்றை சுவாசித்தபடியே, பாரதியின் இந்த கொடிப்பாடலை பாடிப் பாருங்கள். தேசப்பற்றுமிக்க ஒவ்வொருவருடைய கண்களிலும் நீர் கசிய ஆரம்பித்து விடும். அத்தனை வலியும் தியாகங்களும் நிறைந்த வரலாறு நம்முடைய இந்திய தேசத்திற்கு உள்ளது.
அஹிம்சை என்பதைத் தவிர வேறு எதையும் சிந்தித்திராத மகாத்மாவையும், சுதந்திரம் அடைவதற்கு முன்னரே ஆனந்த சுதந்திரம் குறித்தும், சுதந்திரத்திற்குப்பின்னர் இங்கு செய்ய வேண்டியவற்றை தன்னுடைய கனவுகளாக பதிவு செய்திட்ட பாரதியையும், பரங்கியருக்கு எதிராகவே கப்பல் விட்டு அதற்காகவே செக்கிழுத்த வ.உ.சி, மண்டியிடாத வீரத்தின் விளை
நிலங்களான சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், உத்தம்சிங், வீரவாஞ்சிநாதன், தனது இன்னுயிரை இழந்த பின்னரும் கொடியை விடாத திருப்பூர் குமரன் என்று எண்ணிலடங்காத பட்டியலில் விளைந்ததே இந்த சுதேசிய ஆட்சியாகும்.
அவர்களுடைய கனவின்படி நம்முடைய தேசம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்பினார்களோ அப்படியே நம்முடைய தேசத்தை மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே, நம்முடைய உறுதிமொழியாக ஏற்க வேண்டும்
கனவு காணுங்கள்
அப்துல்கலாம் உடலளவில் இறந்த பின் நாம் கடக்கும் முதல் குடியரசு தினம் இது. 2020 ல் இந்தியா உலக அளவிலே மிகப்பெரிய வல்லரசாகவும் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்க வேண்டும் என்று ஆசை கொண்டு, திட்டங்களையும் வடிவமைத்தவர். அவருடைய கனவெல்லாம் தேசப்பற்றை, இளைய சமுதாயத்திடம் சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே.
அத்தகையை வலிமையான இந்தியா உருவாக வேண்டும் என்றால், ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் குடியரசு நாளையும், சுதந்திர நாளையும் வெறும் மிட்டாய் கொடுத்து கொடி ஏற்றிவிட்டு கலைந்து செல்லும் நிகழ்வுகளாக மட்டும் மாற்றிவிடக்கூடாது.
தேசத்தின் பெருமைகளைப் பற்றியும் நம்முடைய வரலாறுகளை இளைஞர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். இன்றைய சூழலில் நம்முடைய தேசம் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளையும், அதை நீக்கத் தேவையான வழிமுறைகள் குறித்தும் பேச வேண்டும்.
தனிமனித ஒழுக்கம்
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது தனிமனித ஒழுக்கத்தில் இருந்தே தொடங்க வேண்டும். ஒவ்வொரு சமூக அவலங்களுக்கும் காரணமாக அமைவது எங்கோ ஓரிடத்தில் நிகழும் தனிமனித ஒழுக்க குறைபாடே ஆகும். இந்திய அரசியல் அமைப்புச் சாசனம் எழுதிய பெரியவர்களை எளிதாக குறை கூறிவிட இயலாது. அனைவருக்குமான உரிமைகளையும் நிலைநாட்டும் வகையில்தான் அமைத்துள்ளார்கள். எத்தனை பெரிய குற்றவாளியாகவோ, குற்றம் சாட்டப்பட்டவராகவோ இருந்தாலும் அவர் தரப்பு நியாயங்களை வாதாடுவதற்கும் நம்முடைய சட்டத்திலே இடமுண்டு. ஒரு தனி மனிதனாக இருந்தாலும் அரசாங்கத்தையே கேள்வி கேட்கும் வல்லமை பெற்ற ஐனநாயகம் நம்முடையடது.
உறைந்து போகும் அளவிற்கான கடும் குளிரிலும், கடுமையான பாலைவனத்திலும், உண்ணாமலும் உறங்காமலும் காத்துநிற்கும் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே அந்த பணி சொந்தம் என்று நினைத்திட வேண்டாம்.
இந்த தேசத்தின் வளர்ச்சியை விரும்பும் அனைவருமே, உள்நாட்டுக் கயவர்களிடமிருந்து தேசத்தைக் காக்க போராடும் சீருடை அணியாத ராணுவ வீரர்கள்தான் என்பதை உணர வேண்டும். நமது தேசத்திற்கு எதிரான, மக்களுக்கு எதிரான செயல்கள் எதுவாக இருந்தாலும் அதை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். ஜாதி, மத, இன, மொழி உணர்வுகளை துாண்டி நம்முடைய ஓற்றுமையைக் குலைக்கும் யாரையும் நாம் அனுமதித்து விடக்கூடாது.
தேச வளர்ச்சி
'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே'
என்ற பாரதியின் கம்பீர வரிகள் நம்முள் நிலைபெற வேண்டும். உலகின் மிகப் பெருமையும் பழமையும் பெருமையும் நிறைந்த புண்ணிய பூமியில் பிறந்துள்ளோம். வேறு எந்த தேசத்திலும் இல்லாத கலாசாரமும் பண்பாடும் நிறைந்த தேசத்தில் பிறந்துள்ளோம் என்று பெருமிதம் கொள்வதோடு நின்றுவிடாமல், நன்றிக்கடனாக இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு நம்மாலான உதவிகளையும் பணிகளையும் செய்ய வேண்டும். எந்த சூழலிலும் ஊழலோடும் லஞ்சத்தோடும் சமரசம் செய்துவிக்கூடாது.
தேசியக் கொடியினை நம் சட்டைப் பையில் குத்துவதைவிட, அழகானது தேசப்பற்றை நமது இதயத்தில் ஏந்தி நிற்பதே! பட்டொளி வீசிப்பறக்கும் பாரதக் கொடியினைப் பாருங்கள்!
நம் தேசத்தியாகிகளின்
பெருமிதமும் தியாகமும் அதில்
கலந்திருக்கிறது.
-முனைவர் நா.சங்கரராமன்
தமிழ்ப்பேராசிரியர்
எஸ்.எஸ்.எம். கல்லுாரி,
குமாரபாளையம், 99941 71074

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement