Advertisement

வாக்களிப்பது நம் ஜனநாயக கடமை இன்று தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினம்

வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை என்பது, தமிழ்நாட்டில் பராந்தக சோழன் காலத்திலேயே குடவோலை முறை மூலம் தொடங்கிவிட்டது.

அப்படியென்றால் தமிழ்நாட்டில் தேர்தல் விழிப்புணர்வு என்பதெல்லாம் ஆயிரத்து ஐந்நுாறு ஆண்டுகால பழைய சமாச்சாரம்தான்.ஒவ்வொரு கால கட்டத்திலும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும், விதிமுறைகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.

எக்காலத்திற்கும் ஏற்ற மாதிரி, ஒரே மாதிரியான தேர்தல் நடைமுறை இருந்ததில்லை.
காமராஜர் காலத்தில், சொத்து வைத்திருப்பவர்கள், வரிகட்டுபவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதிமுறை இருந்திருக்கிறது (சொத்து இல்லாமல், வரி கட்டாமல், தேர்தலில் போட்டியிட முடியாமல் காமராஜர் தவித்ததும், நண்பர் உதவி செய்ததும் வேறு விஷயம்)

விழிப்புணர்வு அவசியமா? :நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இருக்கிறோம். விரல்நுனியில் விழிப்புணர்வு விளையாடுகிறது. நிலைமை இப்படி இருக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமா?

வெறுமனே வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுவதைவிட, எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும், ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுவது தான் அவசியமானது.ஒரு தேர்தல் வெற்றிகரமாக நடந்திருக்கிறது என்றால், அத்தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு, இப்போதுதான் சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாக தொடங்கியிருக்கிறது.

சமீபத்தில் நடந்த பீகார் தேர்தலில் கூட 56 சதவீத வாக்குகள்தான் பதிவாகி இருந்தன. ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாட்ஸ்-ஆப் அனுப்பியவர்கள், வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்கவில்லை போலும். ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு உட்கார்ந்துவிட்டார்கள்.

யார் விழிப்புணர்வு பெறவேண்டும்? :வரிசையில் நின்று வாக்களிக்க நிறைய பேர் யோசிக்கிறார்கள். தேர்தல் நாள் அன்றுகூட முக்கியமான வேலையை வைத்துக்கொண்டு அரக்கபறக்க ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்பவர்களை தீர்மானிக்க அரைமணி நேரம்கூட ஒதுக்கக்கூடாதா என்ன?

கோயில்களில் கூடுதல் பணம் கொடுத்தால் சீக்கிரம் சிறப்பு தரிசனம் கிடைத்துவிடுகிறது. மருத்துவமனைகளில் வி.ஐ.பி. நுழைவாயில் வழி விரைவாக போய்விடலாம். திரையரங்குகளில் முன்பதிவு செய்து நேராக இருக்கைக்கு சென்று படம் பார்த்துவிடமுடியும். இப்படியே பழகிப்போனவர்களுக்கு வாக்களிக்க மட்டும் வரிசையில் நிற்கவேண்டும் என்றால் சிரமமாகத்தானே இருக்கும்.

“ஆன்லைனில் ஓட்டுப்போடும் வசதி வேண்டும்” என்று நீங்கள் அடம்பிடிப்பது சரிதான். ஆனால் அந்த வசதி வருகிறவரை நீங்கள் வரிசையில் நின்று வாக்களிக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் நீங்கள் எதிர்பார்க்கிற அரசு அமையாமல் போய்விடும்.கட்சிகள் வெளியிடுகிற தேர்தல் அறிக்கை பற்றிய தெளிவான பார்வை வேண்டும். எந்த வாக்குறுதிகள் சாத்தியமானவை? எவை சாத்தியமற்றவை? என்பதை பகுத்தாய்ந்து அதன் அடிப்படையில் முடிவெடுத்து வாக்களிக்கிற விழிப்புணர்வு பெறவேண்டும்.

பொருளாதாரக் கொள்கை :மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப பயன்பாடு, அதன் மூலம் வேலை வாய்ப்புப் பெருக்கம் ஆகியவை குறித்த நீண்டகாலத் திட்டங்கள் அறிக்கையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு விவசாயமே அடிநாதம். விவசாயத்தை பாழ்படுத்தாமல் அதனை மேம்படுத்திட செய்யும் நீர் மேலாண்மை குறித்த திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா என்பதையும், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தரமான விதைகள் ஆகியன கிடைப்பதை உறுதி செய்திடும் வாக்குறுதிகள் இருக்கிறதா என்பதையும், விவசாயிகள் தெரிந்து கொண்டு விழிப்புணர்வு பெறவேண்டும்.

கல்விக் கொள்கை :சமகால கல்விமுறை குறித்து நிறைய குறைபாடுகள் கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான கருத்தமைவுகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை கல்வியாளர்கள் கண்ணுற வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கல்வி குறித்து தேர்தல் அறிக்கை கூறும் செய்திகளை தெளிவாக தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வேலை வாய்ப்புத்திறனோடு கூடிய கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கிறதா என்பதை அறியவேண்டும்.

வேண்டுகோள் பதினெட்டு வயது நிறைவடைந்த எவரும் வாக்காளராக தன் பெயரை பதிவு செய்யலாம். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே, வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நீங்கள் செய்ய முடியும். எனவே அந்த வாய்ப்பை, உரிமையை இழந்து விடாதீர்கள்
.
தேர்தல் அறிக்கைகள் பற்றியும், கொள்கைகள் பற்றியும் விழிப்புணர்வு பெற்றவர்கள் படித்தவர்களும், அனுபவசாலிகளும்தான். அவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தால்தான், நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடையச் செய்யும் அரசு அமையும். உங்களுக்குத் தேவையான அரசு அமைய வேண்டுமானால் நீங்கள் தான் சென்று வாக்களிக்க வேண்டும்.

தேசிய வாக்காளர் தினமான இன்று, 'வாக்களிக்கும் இந்திய குடிமகன்' என்பதில் பெருமை கொள்வோம்!

-முனைவர் ஆதலையூர் சூரியகுமார்

எழுத்தாளர், மதுரை.
98654 02603

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    """" ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் அளவுக்கு அரசியல் சூழ்நிலை இல்லையே """" என்கிறார்கள் மெத்தப் படித்தவர்கள் .... என்ன பதில் இருக்கிறது நம்மிடம் தினமலரே ????

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    வாக்களிப்பதைக் கட்டாயம் ஆக்கலாம் .... இணைய வழி வாக்களிப்பையும் அங்கீகரித்து நெறிப்படுத்த வேண்டும் ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement