Advertisement

பக்தி பாட்டு பாடினால் காசு ?கிடைக்குமா?-வீரமணி ராஜூ

கார்த்திகை பிறந்தாலே போதும், இரு முடி தாங்கி ஒரு மனதாகி... என்ற பாடல் காதில் ஒலிக்கத் துவங்கி விடும். அந்தளவுக்கு இந்த பாட்டை கேட்டு சபரிமலைக்கு செல்லத் துவங்கியவர்கள் ஏராளம். அந்தளவு மறைந்த பக்தி பாடகர் வீரமணி பாடிய இப்பாடலுக்கு இன்றைக்கு மட்டுமின்றி, என்றைக்கும் மவுசு குறையாது.வீரமணிக்கு பிறகு அதே கணீர் குரலில் இப்பாடல் மட்டுமன்றி, 'உனை தெய்வம் என்பதா... சீரான அழகுமலை...' என்பது போன்ற ஐயப்ப பாடல்கள் பட்டிதொட்டிக்கும் எங்கும் ஒலித்து கொண்டிருக்குமளவுக்கு பாடியிருப்பவர் வீரமணி ராஜூ. கலைமாமணி, இறை இசைத் தென்றல் உட்பட பல்வேறு பட்டங்கள் இவரது சாதனைகளை பறைசாற்றுவதாக உள்ளன.அண்மையில் மதுரை தமிழ் இசை சங்க நிகழ்ச்சியில் இவரது பாடலை கேட்க அரங்கமே நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இரவுடன் இரவாக மறுநாள் சேலம் நிகழ்ச்சிக்காக காரில் ஏறியவரிடம், தினமலர் வாசகர்களுக்காக பேசியதிலிருந்து...* நீங்கள் பாரம்பரிய இசை குடும்பத்தை சேர்ந்தவராமே?தாத்தா கோடீஸ்வரய்யர் முருகன் கீர்த்தனைகளை பாடியவர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலப்பெருங்கரை தான் பூர்வீக ஊர். சித்தப்பா வீரமணியும் பக்தி பாடல்களால் பக்தர்களை பரசவப்படுத்தியவர். ஏழு வயதிலிருந்து சித்தப்பாவுடன் பாட துவங்கினேன்.* ஏழு வயதிலிருந்தா...இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளேன். ஒரு முறை காஞ்சி மகா பெரியவர் முன் பாடினேன். அதை கேட்ட பெரியவர், ''இவன் பெரிய ஆளா வருவான்,'' என வீரமணியிடம் கூறியபடி ஆசி வழங்கினார். அந்த வாக்கு இன்று பலித்திருக்கிறது. யோகி ராம்சுரத் குமார், பட்டைசித்தர், சாரதானந்தா போன்றோர் முன்பும் பாடும் வாய்ப்பு கிட்டியதை மறக்க முடியாது.* கர்நாடக சங்கீதமும் பயின்றுள்ளீர்களாமே?களக்காடு மகாலிங்கம், நீடாமங்கலம் வி.வி.சுப்பிரமணியம் போன்றோரிடம் முறைப்படி கர்நாடகா சங்கீதம் பயின்றுள்ளேன். இருப்பினும் பக்தி பாடல்கள் நான் விரும்பி ஏற்றது.* பக்தி பாடல்கள் பாடுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறதே?நாட்டில் இன்றைக்கு பக்தி அதிகரித்து வருகிறது. பக்தி பாடல்களை பாடினால் காசு கிடைக்காது; சினிமா பாடல் பாடினால் காசு கிடைக்கும் என்ற எண்ணம் தான் காரணம். என் மகன் அபிஷேக் கூட பொறியியல் பட்டதாரி. பணத்தை பொருட்படுத்தாமல் பக்தி பாடல்களை பாட துவங்கியதுஉண்மையிலேயே மகிழ்ச்சியாகவுள்ளது. பக்தி பாடல்கள் ஆத்ம திருப்தி அளிக்கின்றன. சினிமா பாடல்கள் பாடுவோரை விட பத்து மடங்கு எனக்கு ஐயப்பன் அள்ளித் தருகிறார்.* டப்பாங்குத்து பாடல்கள் அதிகரித்துள்ளனவே?இதை கடுமையாக எதிர்க்கிறேன். இளைஞர் சமுதாயத்தை கெடுப்பதே சில சினிமா பாடல்கள் தான். சுகமான சங்கீதம் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா போன்றோருடன் போய் விட்டது. இன்றைக்கும் இமான், வித்யாசாகர் போன்ற நல்ல இசையமைப்பாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் சில பாடல்கள் மோசமாக அமைந்து விடுகின்றன. இதனால் பாட்டுக்களின் அழகே போய் விட்டது.* சினிமா பாடல்களின் மெட்டில் பக்தி பாடல்கள் வருகின்றனவே?இதுவும் ஆட்சேபத்திற்குரியது. பிரபல நடிகர் நடித்த பாடல் மெட்டில் ஐயப்ப பக்தி பாடலை பாடினால், யார் நினைவுக்கு வருவார்? அந்த நடிகர் தான் நினைவுக்கு வருவார். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது.* ஐயப்ப பாடல்களை அதிகம் பாடுகிறீர்களே ?எல்லா சுவாமி பாடல்களையும் பாடி வந்தேன். ஆனால் வீரமணியின் இருமுடி தாங்கி என்ற பாடல் தமிழ் பக்திமார்க்கத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை போல குரல், தோற்றம், பாடல்கள் என அவரது வழியில் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஐயப்ப பாடல்களை அதிகம் பாடும் வகையில் அமைந்து விட்டது.* நீங்கள் பாடியதில் பிடித்தது...உனை தெய்வம் என்பதா..., தந்தன்தோம் கருப்பசாமி..., சீரான அழகுமலை... போன்றவை.* வீரமணி பாடியதில்...மாமலை சபரியிலே..., இருமுடி தாங்கி...,* மற்றவர் பாடியதில் பிடித்தது...டி.எம்.சவுந்திரராஜனின் உள்ளம் உருகுதய்யா..., கற்பனை என்றாலும்..., சீர்காழி கோவிந்தராஜனின் விநாயகனே..., ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனம்..., கே.பி.சுந்தரம்பாள் பாடிய தகதகவென... என பல பாடல்கள் விரும்பி கேட்பேன்.பாட்டு கேட்க: 98410 68548.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Madhu - Trichy,இந்தியா

    பக்திப் பாடல் பாடினால் காசு வராது என்கிற காலம் மலையேறி விட்டது. ஒரு காலத்தில் கோவில்களுக்குச் சென்றால், அங்கே ஓதுவார்களோ, பட்டர்களோ இறைவன் மீது விருத்தங்களையும் பாடல்களையும் அபிஷேக, ஆராதனை நேரங்களில் பாடியபடியே இருப்பார்கள். இவையாவும் பக்தி பூர்வமாகவும், சேவிக்க வருபவர்களின் செவியையும், சிந்தனையையும், மனத்தையும் இறைவன்பால் ஒருமுகப்படுத்தும் விதமாகவும் அமைந்த்திருக்கும். இவர்களில் பலரது வாழ்க்கை கோவிலைச் சார்ந்தே இருந்தது. அந்த நிலை இப்போது மாறி வருகிறது. ஆன்மிக, பக்தி மார்க்க விழிப்புணர்வு தமிழகத்தில் கடந்த ஒரு 50 ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது. இந்த நிலை, பக்தி பாடல்கள் பாடுவோருக்கு சாதகமாக அமைந்து விட்டதால் இதற்கென தனி 'மார்க்கெட்' ஏற்பட்டு விட்டது. இன்று பஜனைப் பாடல்கள், பக்திப்பாடல்கள்,நாம சங்கீர்த்தனம் எனப் பாடுவோர் பல்வேறு குழுக்களாகப் பாடி வருகிறார்கள். அனைவருமே, இலவசமாகவோ, இறைவன் புகழைப் பரப்ப மட்டுமே பாடுகிறார்கள் என்று உறுதியிட்டுச் சொல்ல இயலாது. இவர்களில் சிலர் 'ஸ்டார்' அந்தஸ்து பெற்று விட்டார்கள். எப்போதுமே 'பிஸி'. 'தேதி' கிடைப்பது கஷ்டம். 'ரேட்'டும் அதற்குத் தக்கபடிதான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement