Advertisement

சேர்ந்தும் சார்ந்தும்

விலங்கிலிருந்து வந்தவர்கள்தான் என்றாலும், அவற்றிலிருந்து மனிதர்கள் அநேக விஷயங்களில் வேறுபடுகிறார்கள். விலங்குகள், மனிதர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளில் ஒன்று விலங்குகள் சேர்ந்து வாழ்கின்றன. மனிதர்கள் சேர்ந்து மட்டுமல்ல; சார்ந்தும்
வாழ்கின்றனர்.கூட்டமாக விலங்குகள் திரிந்தாலும் அவற்றிற்கு என்று கனவுகள் கிடையாது, கடமைகள் கிடையாது, வாழ்க்கை முறை என்று எதுவுமே கிடையாது. கிடைப்பதை உண்பதும், கால்போன போக்கில் போவதுமே அவை கண்ட வாழ்க்கை. ஆனால் மனிதர்கள் அவ்வாறு இல்லை. மனிதர்களுக்கு சமூகம் என்கிற கட்டமைப்பு உண்டு. அதனால்தான் மனிதர்களை 'சமூக விலங்குகள்' என்று கூறுகிறோம்.
ஒருவரையொருவர் சார்ந்திருத்தல்மனிதர்கள் கூட்டமாக இருப்பவர்கள் அல்ல; கூடியிருக்கிறவர்கள். ஒருவரையொருவர் சார்ந்திருப்பதில்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இருக்கிறது. “நமது தேவைகளைவிட, நாம் எத்தனை பேருக்கு தேவைப்படுகிறோம் என்பதுதான் முக்கியம்” என்பார் ஓர் ஆங்கில அறிஞர். மனிதர்களுக்கு மனிதர்கள் தேவைப்படுவதுதான் 'சார்ந்திருத்தல்' என்பது. பேராசிரியர் இரா.மோகன் தன் எழுத்திலும், பேச்சிலும், “ஒருவருக்காக ஒருவர் ஒருவரோடு ஒருவர்” என்று இந்த தேவையையும், சார்பையும் உணர்த்துவார்.
'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்' என்ற பொருள் சார்ந்த எதிர்பார்ப்பைவிட, எல்லோரும் எல்லோருக்கும் வேண்டும் என்ற பொருள் பொதிந்த வாழ்க்கையே சிறந்தது. எல்லோருமே எல்லோருக்கும் தேவையாக இருப்பதை, அனுபவம் நமக்கு அவ்வப்போது உணர்த்தும்.
மனிதர்கள் மனிதர்களைச் சார்ந்திருப்பதை அதாவது தேவைப்படுவதை மூன்று வகையாக பகுத்துப் பார்க்கலாம். முதல் தேவை அவசரம் சார்ந்த தேவை. வீட்டுக்குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், அவசரமாக அதை பழுது பார்ப்பவர் தேவைப்படுவார்.
அவர் வருகைக்காக தவமிருப்போம். அப்போதைக்கு அவர் நமக்கு பெரிய மனிதராக தோன்றுவார். வேலை முடிந்த பிறகு நமது மனதிலிருந்து அவரை துாக்கி எறிந்து விடுவோம். இது பயன்படுத்தி எறிகிற வகை. ஆங்கிலத்தில் இதை Use and throw என்பர்.
மனிதன் மூன்று வகைஅடுத்த வகை, அன்பு சார்ந்த வகை. பெரிய நிறுவனம், தொழில் நடத்துபவர், தன் பொறுப்புகளை யாரிடம் ஒப்படைப்பது என தேடும்போது அவரது அன்புக்கு உகந்தவர்கள் நினைவுக்கு வருவர். இத்தேர்வில் தேவைப்படுபவர் திறமைசாலியாக இருக்க வேண்டும் என்பதில்லை. அன்பால் விளைந்த உறவுகளும், தேடல்களும் இவ்வகைச் சார்ந்திருத்தலில் அடங்கும். பெரும்பாலும் இவை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்கும் சொந்த சார்பு.
மூன்றாவது, ஆற்றல் சார்ந்த வகை. படித்தவர்கள், ஆற்றல் மிகுந்தவர்கள், அறிவு சார்ந்தவர்கள், பலத்த பின்னணி கொண்டவர்கள் இவ்வகையில் வருவர். இவ்வகை மனிதர்களை சார்ந்திருப்பது சார்பவரின் வெற்றிகளை உறுதிப்படுத்தும்.
என்ன விலை கொடுத்தேனும் இவர்களை பக்கத்தில் வைத்துக்கொள்வார்கள் பலர். பெரிய தொழில்களில் தொழில் நுட்பங்களை அறிந்தவர்கள் முதல் பிரபல உணவு விடுதிகளின் தலைமை சமையல்காரர் வரை பெரிதும் வேண்டப்படுகிறவர்கள் இவ்வகையை சார்ந்தவர்கள். சினிமா கலைஞர்களையும் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
இவ்வகை மனிதர்கள் தேவைப்படுகிற காரணத்தால் எவரும் இலகுவாக இவர்களைத் துாக்கி எறிவதில்லை. தாம் சார்ந்திருப்பதைவிடவும் பிறரே தம்மை பெரிதும் சார்ந்திருப்பதால் ஆற்றல் மிகுந்த இப்பிரிவில் வருகிறவர்கள் கொஞ்சம் 'மிதப்பாக'க்கூட இருக்கக்கூடும்.
இந்த மூவகை மனிதர்களில், மூன்றாவது வகையினராக இருப்பதுதான் சிறந்தது. நம்மை யாரும் தவிர்க்க முடியாது என்கிற நிலையில், தன்னை வைத்துக்கொண்டிருப்பவர்களே வெற்றியாளர்கள். என்றாலும், இம்மூவகை மனிதர்களும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதை மறுக்க முடியாது. ஆங்கிலத்தில் இதை 'ஹார்மனி' என்பர். இதற்கு தமிழில் 'ஒத்திசைவு' என்று பொருள். ஒத்துப்போவதும், இசைந்திருத்தலும் மனித உறவுகளில் மிகவும் இன்றியமையாதது.
இசைக்கச்சேரியில் கருவிகளும், கானமும் இணைந்து இசைந்து ஒலித்தால்தான் 'ஸ்வரம்'. கொஞ்சம் பிசிறினாலும் 'அபஸ்வரம்'. அதுபோல்தான் வாழ்க்கையும். அன்னாளில் ஹார்மோனிய பெட்டியானது கருவிகளும் குரலும் இணைந்து செல்கிற இசை இழையைக் கொடுக்கும். 'ஹார்மனி' என்கிற வார்த்தைகூட ஒருவேளை ஹார்மோனியத்திலிருந்து பிறந்திருக்கலாம்.
சுமுக உறவுகளில் நெருடலை ஏற்படுத்தும் விஷயங்கள் இரண்டு. ஒன்று விட்டுக்கொடுக்க மறுத்தல், மற்றொன்று தான் என்கிற அகங்காரம். உறவுகள் மேம்படுதலில் விட்டுக்கொடுக்கிற பண்புதான் முக்கியமானது. பேரறிஞர் அண்ணாதுரை “விட்டுக்கொடுக்கிறவர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை” என்பார்.
வேதாத்திரி மகரிஷியும் விட்டுக் கொடுத்தல் மனித உறவுகளை மேம்படுத்தும் என்று உபதேசித்திருக்கிறார். எதிலும் சரி விட்டுக்கொடுக்கிறவர்களே பெரும்பாலும் வெற்றியாளர்களாக இருப்பார்கள்.
சுமுகமான உறவுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆட்சிகள், அரசியலிலும் வேண்டும். நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இதை உறுதிப்படுத்த நிறுவன/தொழிலாளர் நல்லுறவு (Industrial Relations) பேணப்படுகிறது. ஊதிய உயர்வு உள்ளிட்டவை குறித்து இருதரப்பினரும் விவாதித்தும், விட்டுக்கொடுத்தும் ஒரு சுமுகமான உடன்படிக்கைக்கு வருகிறார்கள். தவறும்போது தொழிலாளர் உறவு அற்றுப்போய்விடுகிறது. உற்பத்தி பாதிக்கிறது. பார்லிமென்ட், சட்டசபை, மாநகராட்சி, ஊராட்சி
கூட்டங்கள்கூட சுமுகமாக நடக்காதபோது அடிதடி, அராஜகம், அமளி துமளி ஏற்பட்டுவிடும்.அரசியலில் தலைவர்கள், இரண்டாம் நிலை தலைவர்கள், நிர்வாகிகளுக்கு இடையே நல்லுறவு இல்லாமையால்தான் கட்சிகள் பிளவுபடுகின்றன. ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் சமூகத்தில் வரும் சங்கடங்களுக்கு எல்லாம் விட்டுக்கொடுக்காத வீராப்பும், 'தான்' என்கிற தலைக்கனமும் காரணமாகும். விட்டுக்கொடுத்தல் என்கிற பெருந்தன்மையின் எதிர்மறை குணம்தான் அகங்காரம்.
குழந்தைகளாக இருக்கும்வரை அன்பைத்தவிர வேறெதுவும் மனதில் இருப்பதில்லை. எனவேதான் குழந்தைகள் தெய்வமாக கொண்டாடப்படுகிறார்கள். வளர வளர வஞ்சகமும், அகங்காரமும் மண்டுகிற மனதிலிருந்து இறைவன் வெளியேறி விடுகிறான்.
இச்செயலை இதயக்கூட்டிலிருந்து இறைவனை காலி செய்தல் என்று கூடக்கூறலாம். Evicting God Out என்பதைதான் Ego என்கிறோமோ என்றுகூட நான் கருதுவதுண்டு. கடவுளை இப்படி மனதிலிருந்து விரட்டுவதை போல, நம்மை சுற்றியுள்ள மனிதர்களையும் விரட்டிவிடும்போதுதான் நாமெல்லாம் தீவுகளாகி விடுகிறோம்.
சேர்ந்து மட்டுமல்ல நாம் சார்ந்தும் வாழ்கிறோம் என்பதை மறக்கக்கூடாது. மறுக்கவும் முடியாது. ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்ற உணர்வும், எல்லோருக்கும் எல்லோரும் வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் நமக்குள் உறவிருக்கும்.
நமக்கு உயர்வுமிருக்கும். பை நிறைய பணமிருந்தும், பெரிய வீடிருந்தும், பளபளப்பான வாழ்விருந்தும் தமிழகத்தில் பல இடங்களில் பெய்த பேய்மழை, 'நீ உன்னை மட்டுமல்ல, உடனிருப்போரையும் சார்ந்திருக்கிறாய்' என்று உணர்த்தி போயிருக்கிறது. 'ஒருவரோடு ஒருவர் சேர்ந்திருங்கள். ஒருவரையொருவர் சார்ந்தும் இருங்கள்' என்று சத்தியம் வாங்கியிருக்கிறது.
எதுவும் வேண்டாம் என்று இருக்கிறவர்கள் வேண்டுமானால் யாரும் வேண்டாம் என்று இருக்கலாம். ஆனால் எல்லாமும் வேண்டும் என்கிறவர்களுக்கு எல்லோரும் நிச்சயமாக வேண்டும்.
- ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன்எழுத்தாளர். 94441 07879

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • kundalakesi - VANCOUVER,கனடா

    எனக்குத் தெரிந்த வரை மனிதன் மட்டுமே சமூக, சார்பு, கட்டமைப்பு, யுத்தம், செவிலியர் உள்ள மருத்துவ சேவை, ஒற்றறிதல், செல்லப் பிராணி, அடிமைப் பிராணி, இன்ஜினியரிங், டவுன் பிளானிங் என்றில்லை. இவனை விடவும் நேர்த்தியாக, எறும்புகளும் தேநீகளும் உள்ளன. பல இனம், இமைப் போராட்டம், அடிமை யுத்தம், வேலையால் எல்லாம் அங்கேய்ம் உண்டு. பெற்ற வேண்டாம். மனித பிராணிகளை விட பின் நெடுங்காலத்தில் இவையே ஜெயிக்கும்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மனிதர்கள் பேச தெரிந்த மிருகங்களாக வாழ்கிறதுகள். மிருகங்கள் மனித நேயத்துடன் வாழ்கிறார்கள்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement