Advertisement

உடமைகளை அல்ல; மடமையை கொளுத்துவோம்! :நாளை போகிப்பண்டிகை

எவராலும் புரிந்து கொள்ள இயலா இப்புவியில் இருளாய், ஒளியாய், நிலமாய், நீராய், பசுமையாய் எங்கும் வியாபித்திருக்கும் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அசைவிலும் கடவுளைக் காண்பது நமது மரபு. இந்த மரபு என்ற வேரில்தான் நமது கடவுள் நம்பிக்கை, பண்பாடு, கலாசாரம் வாழ்வியல் முறை என அனைத்தும் கட்டுண்டு கிடக்கிறது. இந்த மரபுகள் நம் மண்ணைவிட்டு; மறையாமல் இருக்கவே நமது முன்னோர்கள் பண்டிகைகளைப் படைத்தனர். நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையிலும் இறையம்சத்தோடு கலாசார
அம்சமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.பண்டிகைகள் கலாசார பூமியான நம் நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் அர்த்தமுள்ள தனித் தன்மை உண்டு. தீமையை நன்மை வெற்றிக் கொள்ளும் நிகழ்வு தீபாவளி பண்டிகை. புல், செடி, கொடி, பூச்சிகள், விலங்குகள், மனிதன், கடவுள் என கண்ணுக்குத் தெரிந்த மற்றும் கண்ணுக்குத் தெரியாத படைப்புகளைப் போற்ற நவராத்திரி,
எழுத்துக்களை வடிக்கும்
எழுத்தாணிக்கும், எழுத்துக்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் காகிதங்களுக்கு-ம் சரஸ்வதி பூஜை.
இயந்திரனாக மனிதனை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் இயந்திரங்களுக்கு மதிப்பளிக்க ஆயுத பூஜை. எல்லா ஜீவன்களுக்கும் உணவளித்து உயிர்கொடுக்கும் உழவுக்கும் உழவர்களுக்கும் உழவர் திருநாள். உழவுத்தொழிலுக்கு உயிர்கொடுக்கும் கால்நடைகளுக்கு மாட்டுப் பொங்கல் என பண்டிகைகளுக்கு
பஞ்சமில்லாத நாட்டில் வாழ்வது நமது பெருமை.
பல பண்டிகைகளை நாம் கொண்டாடினாலும் தமிழர் நாட்காட்டியின் தை மாதத்தில் வரும் தைப் பொங்கல் நமது தமிழினத்தின் அடையாளம்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் தமிழ் மண், 'தை பிறந்தால் வழிப்பிறக்கும் தங்கமே தங்கம்' என ஆரவாரத்தோடு வரவேற்கும் ஒரு பண்டிகை. புரட்சிப் பண்டிகைவட இந்தியாவில் பொங்கல் திருநாளை சங்கராந்தி என்று குறிப்பிடுகின்றனர்.
சங்கராந்தி என்றால் “சரியான புரட்சி” என்று பொருள். ஆம் நம் தமிழ் சமூகத்திலும் நல்ல விதமான புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவரும் தைத் திருநாளும் ஒரு புரட்சிப் பண்டிகை தான். ஏனெனில் இப்பண்டிகைக்கு ஜாதி,
மதச்சாயல் கிடையாது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த தைத் திருநாள் போகிப் பண்டிகையிலிருந்து தொடங்குகிறது.போகிப் பண்டிகை
போகிப் பண்டிகை என்றால் “பொருண்மை மகிழ்ச்சி” என்று பொருள். நன்றாக பயிர்கள் வளர்ந்து செழிப்பான அறுவடையால் கிடைக்கும் அளப்பரிய மகிழ்ச்சியால் இப்பெயர்
ஏற்பட்டிருக்கலாம் என்பர். ஐப்பசியில் அடைமழை தொடங்கும்; இந்த மாதத்தில் தான் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. எழுத்தாணியால் ஓலைச்
சுவடிகளில் எழுதுபவர்கள் சரஸ்வதி பூஜை நாளில் அவற்றை வணங்கிவிட்டு மழை, குளிர், பனி இவற்றால் பாதிக்கப்படாதபடி பாதுகாப்பாக வைத்துவிடுவார்களாம். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என மூன்று குளிர்கால மாதங்கள் முடிந்தவுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்ட ஓலைச் சுவடிகளை மார்கழி மாத இறுதி நாளில் (போகிப் பண்டிகை) வெளியே எடுத்து,
சிதிலமடைந்த பழைய ஓலைச் சுவடிகளிலுள்ள குறிப்புகளை நீக்கி, அவற்றை புதிய ஓலைச்சுவடிகளில் புகுத்தி வைத்ததோடு, பழைய ஓலைச் சுவடிகளை போகி நாளில் தீயிட்டு கொளுத்தினார்கள்.
இதுவே பழையன கழிதல்; புதியன புகுதல் என்ற பொன்மொழி வரக் காரணமாகியது என்பர். சரஸ்வதி பூஜை நாளில் நிறுத்தப்பட்ட எழுத்துப்பணியை புலவர்கள் தைத் திங்கள் அன்றே தொடங்கியதாக செய்தியுண்டு. போகி சொல்லும் சேதி
போகிப் பண்டிகை தான் அதுவரை தங்கள் நிலங்களில் உழைத்துப் பாடுபட்ட உழவர்களுக்கு ஓய்வு கால தொடக்கம். தை மாதப் பிறப்புடன் தான் குறிப்பாக இந்துக்களின் திருமணக் காலம்
துவங்குகிறது. தை, மாசி மாதங்களில் வரவிருக்கும் மகிழ்ச்சியான திருமண வைபவங்களின் முன்னோட்ட நாளே இந்த போகி. எனவே தான் போகியை வரவேற்று அனைத்து இல்லங்களும் சுத்தம்
செய்யப்படுகிறது. “பழையன கழிதல் புதியன புகுதல்” என்பதே போகியின் அடிப்படை சாராம்சம்.ஆண்டு முழுவதும் நம் இல்லங்களில் சேர்ந்த பயனற்ற குப்பைகளை எரிப்பதும் அவற்றுக்கு பதிலாக புதிய பொருட்கள் வீட்டை நிரப்புவது மட்டும் போகியல்ல. நம் உள்ளத்தில் உள்ள பழமைவாத, காலத்திற்கும் நம் சமூக அமைப்பிற்கும் ஒத்துவராத
சிந்தனையை நம் மனதிலிருந்து அகற்ற வேண்டும். புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
போகித் தீயில் நம் பொறாமை, வஞ்சகத்தை பொசுக்கி நல்ல மனிதர்களாக புதுப்பிறவி எடுத்தல் ஆகியவை தான் போகி சொல்லும் சேதி.இந்த போகியில் புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக நம் குழந்தைகள் பள்ளி செல்வதை தடுப்போம். காலங்கள் போற்றும் கலாம் வழியில் கல்வி
வழங்குவோம்! ஜாதியென்றும் மதமென்றும் மனிதர்களைப் பிரித்து வைத்து சதிராட்டம் ஆடும் வீணர்களை பாரதி வழியில் விரட்டியடிப்போம்! பொய்யுரைத்து மக்களின் கால்பிடித்து,
நாற்காலியைப் பிடித்தவுடன் பாமரனை வாரிவிடும் பகல்வேஷக்காரர்களின் முகத்திரையை காந்தி வழியில் கிழித்தெறிவோம்!“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” எனத் தொடங்கி பீப் பாடல் வரை மாதர்களை இழிவு செய்யும்
மடையர்களின் மூளைக்கு பெரியார் வழியில் நல்ல உரமிடுவோம்.250 ரூபாய்க்கு பளிச்சென்றும், 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் கடவுளை காட்சிப்படுத்தும் வீணர்களை விவேகானந்தர் வழியில் புறம் தள்ளுவோம். வேலைக்கு செல்பவர்களின் திங்கள் கிழமையை விட வேலை கிடைக்காதவனின் திங்கள் கிழமை கொடூரமானது என உணர்ந்து இளைஞர்களுக்கு
உதவுவோம். மனைவிக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாத மதுபோதை மனிதன் தலையில் மாயத்தடியால் இடிப்போம். பாலுாட்டி வளர்த்தவளை பட்டினி போட்டு- தன் அபிமான நடிகனின்
கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் அந்த நல்லவனை (?) மாய உலகிலிருந்து மீட்போம். தாய் 'ஏலேய்' என அழைப்பதற்கு ஈடாகாது; அலைபேசியில் கேட்கும் ஹலோ என்பதை இளைஞர்களுக்கு புரிய வைப்போம். பணத்தின் பின்னால் ஓடுவதை விட்டு விட்டு, பிள்ளைகளுக்காக அறிவைத் தேடுவோம். அன்பைக் கொடுப்போம். மனிதநேயமற்ற செயல்களை இந்தப் போகியில் முற்றிலும் எரியூட்டுவோம்.
-முனைவர். சி. செல்லப்பாண்டியன்தேவாங்கர் கலைக் கல்லூரி,அருப்புக்கோட்டை.78108 41550

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • jeya - madurai,இந்தியா

    அருமையான கட்டுரை. 250, 100 ரூபாய்க்கு கடவுளை காட்சிபடுதுபவர்கள் பற்றிய வரிகள் அருமை.

  • karthikeyan - singapore,சிங்கப்பூர்

    அருமை .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement