Advertisement

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

இந்த உலகமே சுழன்று வருவதற்கான அடிப்படையே பசி. ஒவ்வொருவரும் உழைப்பதே பசியினைத் தீர்ப்பதற்கு என்றே இந்த உலகம் நம்பிக்கொண்டு
வருகிறது. நமது அன்றாட இயக்கத்திற்கான சக்தியை உணவுதான் அளிக்கிறது. ஒவ்வொரு முறையும் பசிக்கும். ஒவ்வொரு முறையும் சாப்பிடுகிறோம். ஆனாலும் பசி நம்மைத் தொடர்ந்து வருவதால்தான் பசியினை 'பிணி' என்று அழைக்கிறார் வள்ளுவர்.உலகிலேயே மிக அதிக வகையிலான சுவையான உணவுகள் இந்தியாவில்தான் கிடைக்கின்றன எனும்போது நமக்கு சற்று பெருமிதமாகத்தான் உள்ளது. அதிக உணவு வீணாக்கப்படுவதும் நமது தேசத்தில்தான் எனும்போது வருத்தமாகவே உள்ளது. பன்னெடுங்காலமாக சத்தான உணவுகளை உண்பதும்
தயாரிப்பதும் அதனை மற்றவர்களோடு பகிர்ந்தளிப்பதுமே நமது மூதாதையர்களின் கடைமையாகவே இருந்தது.விருந்தோம்பல்உணவினைக் கூட நல்ல உணர்வோடு உண்பது அவசியம். நம்முடைய தமிழ்ப்பண்பாட்டின் அடிநாதமே விருந்தோம்பல் என்ற உயரிய பண்பிலிருந்தே தொடங்குகிறது. வீடுகள் தோறும் திண்ணைகள் அமைத்து வழிபோக்கர்கள் அதில் தங்கிச் செல்ல வழிவகை செய்து, அங்கிருக்கும் மாடங்களில் உணவும் தண்ணீரும் வைத்து விருந்தோம்பல் செய்த இனம்
நம்முடையது. இறக்கும்போது கூட யாரும் பசியோடு இறந்திடக் கூடாது என்பதால்தான் அவர்களுக்கு வாய்க்கரிசி போடும் வழக்கமே வந்தது என்ற வரலாறையும் நாம் அறிவோம். பெரியபுராணம் முழுக்கவே பல்வேறு இடங்களில் அடியவர்களுக்கு விருந்து படைப்பதையே சேக்கிழாரும், அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரத்தை மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனாரும் பாடியிருப்பதே, பசிப்பிணி நீங்கிய உலகம் வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
'தனியொரு மனிதருக்கு உணவில்லையெனில்- இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்'
என்ற வகையிலே ரவுத்திரம் பொங்க பாடிய பாரதிக்கு பசியின் கொடுமை தெரியும். இந்த உலகமே மிகவேகமாக நவீனமயமாக இயங்கிவருகிறது. இணையத்தில் தொடங்கி ஏவுகணை வரை அனைத்திலும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுவருகிறோம் என்றாலும் பட்டினிச்சாவுகள் தொடர்ந்து வருவது வேதனைக்குரியது. நம்மோடு வாழும் சகமனிதன்
உணவின்றி இருக்கிறான். பட்டினியோடு உறங்குகிறான் என்பதை அறிந்து அதைத் தீர்க்க வழியில்லாமல் நாம் இருக்கிறோம். ஆனால் நாம் பல்வேறு விருந்துகளிலும், வீணாக குப்பைகளில் கொட்டும் உணவுகள் பலருடைய பசியாற்றும் என்பதை
சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும். மனிநேயம் கொண்ட நாம் இதைக் கையில் எடுப்பது அவசியமானது.
உழவர் நலன் 'உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்- வீணில்உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்'என்பான் பாரதி. இங்கே பசிப்பிணி அகலவேண்டும் எனில் உழவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். நமக்கு அமுதம்போன்ற உணவினை விளைவித்துத் தரும் விவசாயிகளே தங்களுடைய விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாறும் வேதனையை மாற்ற வேண்டும். இங்கே அனைத்து தொழில்களும் வேண்டும். ஆனால் அனைத்துத் தொழிலுக்கும் ஆதாரமான உழவுத் தொழிலே நம்முடைய உணவுக்கு உத்திரவாதம் தரும் என்பதையும் உணர வேண்டும்.
'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம்என் உள்ளம் வாடுகிறதே'என்ற வள்ளலாரே பசிப்பிணி போக்கிய முதல் மகான் என்பதை நாம் மறந்திட இயலாது. இன்றளவும் வடலுாரில் அமைந்துள்ள சத்திய தரும சாலையில், அன்று வள்ளலார் பற்ற வைத்து பலரின் பசிப்பிணியை அகற்றிய அணையா அடுப்பு எரிந்து அங்கு வரும் பலருடைய பசியினைப் போக்கி வருகிறது.
மனிதருடைய அடிப்படைத் தேவை உணவே. அந்தத் தேவை நிறைவேறிய பின்னரே அடுத்த கட்டம் நோக்கி நம்முடைய சிந்தனையைச் செலுத்த முடியும் என்பதை பல்வேறு தலைவர்களும் உணர்ந்திருந்தனர். அதனாலேயே காமராஜர் மதிய உணவுத்திட்டம் கொண்டு வந்தார்.ஏற்ற உணவு ஏது
இன்றைய உலகை அவசர உலகமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் நாம், நமது உடலுக்கும் சீதோஷ்ண நிலைக்கும் ஏற்ற உணவினைச் சாப்பிடுகிறோமா? என்ற கேள்விக்கு இல்லை என்ற ஒரே வரியில் அழுத்தியே பதில் சொல்லலாம். நம்முடைய கலாசாரம், மேலைநாட்டு நாகரிகம் நோக்கி நகர்ந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் மிகவேகமாக கிடைக்கும் உணவினை மெல்லக் கூட நேரமின்மை காரணமாக, அள்ளிப் போட்டோ, இல்லை போகும்போது
பயணத்திலோ நாம் சாப்பிடுகிறோம்.இலையில் சரியாக, அளவாக தண்ணீர் தெளித்து அனைத்தும் பரிமாறும் வரை பொறுமையாகக் காத்திருந்து அதன் பின்னர் முறையாக வரிசையாக ஒவ்வொன்றாக ரசனையோடு பாராட்டிக் கொண்டே சாப்பிடும் வழக்கம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும். அவ்வாறு சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் இலையில் எதையும் மிச்சம் வைக்க மாட்டார்கள். அதே நேரம் வேண்டியதைக் கூச்சமின்றி கேட்டுச்
சாப்பிடுவார்கள். வேண்டியதைக் கேட்டு விருப்பத்தோடு உண்ண வேண்டும் என்பதற்காகவே, இன்றைய நாகரிக உலகில் அளிக்கப்படும் 'பபே' விருந்தில் கூட நாம எத்தனை விரயம் செய்கிறோம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
மிக அவசரமான உலகம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம். ஆனால் நமது உடலை சரிசெய்யும் உணவினை ஒழுங்காக சரியான நேரத்தில் உண்டால்தானே உடல்நலம் பெற இயலும். தொடர்ந்து உழைப்பதற்கான வேகம் கிடைக்கும்.
நமது உழைப்பிற்கான அடிப்படையாக இருக்கும் உணவுத் தேடலையே, நாம் நிராகரிக்கும்போது நாம் நமது இலக்கை எப்படி அடைவது? உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்; நம்மில் எத்தனை பேர் வீட்டிலே அமர்ந்து
சாப்பிடும்போது தொலைக்காட்சி பெட்டியையோ அல்லது அலைபேசியையோ பார்க்காமல் சாப்பிடுகிறோம்? இல்லை என்ற பதிலைத்தான் வருத்தமோடு சொல்கிறோம்.உணவினை உண்பதிலே ஒரு முறையை வைத்து உண்டு சரியாக வாழ்பவர்களால்தான் ஆரோக்கியம் உள்ளவர்களாக வலம் வர முடியும்.பகிர்ந்து உண்போம் நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் உணர்வு அலாதியானது. அதை அளவோடு சாப்பிடும்போதே நமக்கு அது நன்மை பயப்பதாக உள்ளது. அதைவிட மகிழ்ச்சி பகிர்ந்து உண்பதாகும். பகிர்ந்து உண்ணும்போது நமக்கு பசி இயல்பாகவே அடங்கிவிடும்.
'வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்-இங்குவாழும் மனிதருக்கெல்லாம்'என்பான் மகாகவி பாரதி. இந்த உலகம் பசிப்பிணியால் ஒருபோதும் கவலைப்படக்கூடாது. ஒவ்வொரு நொடியிலும் அடுத்தவரின் பசியினைப் போக்க சிந்திப்பவர்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதை பாரதியின் வரிகளால் உணர முடிகிறது. நமது பசியினை மட்டுமின்றி உலகமெல்லாம் நிலவும் பசிப்பிணியை போக்கவும் நாம் கைகோர்ப்போம்!
-முனைவர்.நா.சங்கரராமன்தமிழ்ப் பேராசிரியர்எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லுாரிகுமாரபாளையம். 99941 71074

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement