Advertisement

தமிழர் பத்து நோபல் பரிசாவது பெற வேண்டும்!

தென்பட்டினம் பொன்னுசாமியின் திருமகனாகப் பிறந்த தெ.பொ.மீனாட்சி-சுந்தரனார், தமிழக மக்களால் 'தெ.பொ.மீ.' என்று அன்பாக அழைக்கப் பெற்றவர். எண்பது ஆண்டு (8.1.1901 -- 27.8.1980) தமிழ் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தவர். 'பல்கலைச் செல்வர்', 'நடமாடும்
பல்கலைக்கழகம்' என அழைக்கப்பட்ட இவர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர். 'கலைமாமணி', 'பத்மபூஷன்' பட்டங்களையும் பெற்றவர். தமிழ்நாட்டுக்கும் மொழிக்கும் சமுதாயத்திற்கும் அருந்தொண்டு ஆற்றியவர். சட்டம், வரலாறு, உளவியல், தத்துவம், இலக்கியம், இலக்கணம்,
மொழியியல், ஆன்மிகம் முதலான பல்வேறு அறிவுத் துறைகளில் பழுத்த புலமை பெற்றிருந்தவர். எப்படி தமிழ் வாழும் 'தமிழன் வாழ்ந்தாலன்றித் தமிழ் வாழ முடியாது' என்று தெ.பொ.மீ., நம்பினார். 'தமிழனை விட்டுத் தமிழினைக் காணும் முயற்சி வீண், வீண், வீண்' என்று அவர் கூறினார். அதே போல், 'தமிழர் பிற மொழிகளைக் கற்றல் வேண்டும்' என்பதிலும் அவர் இறுதிவரை உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தார்.
“தமிழன் தனியே வாழ முடியாது. 'பிற மொழிகளைத் தமிழன் போலக் கற்பாரும் இல்லை' என்ற உண்மையை நம்பி பிற மொழிகளைக் கற்பதில் நம்மவர் ஊக்கம் கொள்ளுதல் வேண்டும். வடமொழியை நம்மவர் போல் ஓதுவார் உண்டா?
ஆங்கிலத்தினைச் சீனிவாச சாஸ்திரியார் போல பேசியவர் உண்டா? வானமளந்த தமிழை அறிந்த தமிழனுக்கு 'ஆகாதது' என்று ஒன்றும் இல்லை. இந்த உறுதி வளர வேண்டும். பிற மொழி கண்டு தடுமாறும் மனம் ஒழிய வேண்டும். உலகெல்லாம் தமிழ் வளர இதுவே வழி. 'தமிழன்றி வேறொரு மொழியும் வேண்டாம்' என்ற கருத்துப் போலத் தமிழினைக் கொலை செய்யும் படை வேறொன்றும் இல்லை” என்று தேமதுரைத் தமிழோசை உலகமெலாம் பரவுவதற்கு வழிவகை கூறினார் தெ.பொ.மீ.,
“தமிழர் ௧௦ நோபல் பரிசாவது பெற வேண்டும் என்ற விருப்பமுடையவன் நான். தாகூர் நோபல் பரிசு பெற்றதால் உலகத்தில் உள்ளோர் எல்லோரும் வங்காள மொழியைக் கற்றனர். அது போல, தமிழர் நோபல் பரிசு பெற்றால், உலகெல்லாம் தமிழ் பரவும் என நம்புகிறேன். எத்துறையினர் ஆயினும், தமிழ்ப் பற்று கொண்டு போற்றுவாராயின் தமிழ் உலக மொழியாகும்” என ஒரு நேர்காணலில் தம் விருப்பத்தை வெளியிட்டார் தெ.பொ.மீ.,
உலக மொழி தமிழ்
'கன்னித் தமிழ்' என்றும், 'என்றுமுள தென்றமிழ்' என்றும் போற்றப்படும் தமிழ், உலக மொழியாகச் சிறந்தோங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். அதற்காகவே அல்லும் பகலும் அரும்பாடுபட்டார் அவர். அவரது வருங்காலக் கற்பனையில் - தொலைநோக்கில்- பல ஐன்ஸ்டைன்களும், பல ஷேக்ஸ்பியர்களும், பல காந்திகளும், பல டால்டன்களும், பல எடிசன்களும் வாழும் இடமாகத் தமிழ்நாடு விளங்கியது.
“குறைந்தது மூன்று தலைமுறையாகவேனும் தமிழ் கற்றுத் திளைத்த குடியில் பிறந்ததன் பயனாகத் தமிழ் நுால்களின் சூழலிலேயே பிறந்தது முதல் வாழ்ந்து வந்துள்ளேன். ஆனால், ஆங்கிலத் தாயின் அருள் இல்லாதிருந்தால் நான் தமிழின் உயிர்த் துடிப்பினை அறிந்திருக்க முடியாது. இது என்னைப் பொறுத்த உண்மை” என எழுதியவர் தெ.பொ.மீ.,
தமிழின் உயிர்த் துடிப்பினை அறிவதற்கு மட்டுமன்றி, தமிழில் உயிர்த் துடிப்பான கலைச்-சொல்லாக்கங்களை உருவாக்குவதற்கும் அவருக்கு ஆங்கிலப் புலமை கை-கொடுத்துள்ளது. ஆளுமை (personality), எதிர்நிலைத் தலைவன் (villain) உட்பட பல சொற்களை படைத்த பெருமை அவருக்கு உண்டு.
'நான் ஒரு கற்றுக்குட்டி'
பன்னிரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த தெ.பொ.மீ. பண்பாட்டின் திருவுருவமாக விளங்கினார். ஐம்பதுக்கு மேற்பட்ட நுால்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்த அவர், அடக்கத்தின் உறைவிடமாகத் திகழ்ந்தார். 'நிறைகுடம் நீர்தளும்பல் இல்' என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக அவருடைய வாழ்க்கை விளங்கியது.
“நான் ஒரு கற்றுக்குட்டி. நான் பேராசிரியனாக இருந்த எந்தத் துறையிலும் பட்டம் பெற்றவனல்ல. எனவே பேருக்குத்தான் நான் ஆசிரியர். உலகம் எப்படியோ என்னைத் துாக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது... இன்றும் மாணவன் என்ற நிலையில் நான் அறிந்து கொண்டு வருவனவற்றை என்னுடைய தமிழன்பர்களோடு பகிர்ந்து விருந்துண்ணவே விரும்புகிறேன். மற்றவர்கள் எழுதாமையால் நான் எழுத வேண்டியிருக்கிறது.
எனவே குழந்தை விளையாட்டுப் போல என்னுடைய மொழியியல் விளையாட்டுக்களையும் கருத வேண்டும். விளையாடி விளையாடித் தானே குழந்தை உயர்கிறது?” என 'மொழியியல் விளையாட்டுக்கள்' என்னும் நுாலுக்கு எழுதிய முன்னுரையில் அடக்கத்தோடு குறிப்பிட்டார் தெ.பொ.மீ.,
அடக்கமும் பணிவும் மட்டுமன்றி, மாற்றுக் கருத்துக்கு - கருத்து வேற்றுமைக்கு - மதிப்புத் தரும் பெருமனமும் அவருக்கு இருந்தது. “தமிழ் மக்களுக்கு என்றே எழுதினேன். அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ? என் கருத்துக்கள் என் கருத்துக்களே! என் முகம் போல மற்றொரு முகம் இராது.
ஆதலின், என் கருத்துக்கள் எல்லோர் கருத்துமாக முடிவது அருமை. என்றாலும், அன்பினால் குற்றத்தினைப் பொறுத்து வாழ்த்துவது அன்றோ தமிழ் மரபு?
அதனையே நம்பி வாழ்கிறேன்' என்று 'வள்ளுவர் கண்ட நாடும் காமமும்' என்ற நுாலுக்கு எழுதிய முன்னுரையில் நனிநாகரிகத்தோடு குறிப்பிட்டார் தெ.பொ.மீ., மாணவர்களே என்
குருமார்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை
உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லுாரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களின் வாயிலாக மாணவ சமுதாயத்துடன் நெருங்கிய உறவும் தொடர்பும் கொண்டிருந்தார் தெ.பொ.மீ., மாணவர்களையே ஆசிரியர்களாக - பார்த்தார் அவர். 'கானல் வரி' என்னும் சிலப்பதிகார ஆய்வு நுாலுக்கு எழுதிய முன்னுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“இலக்கியத்தை நானே கூறும் போது பெருவிளக்கம் ஒன்றும் நான் பெறுவதில்லை. மாணவரிடையே பேசும் போது சில இடத்தில் புதுவிளக்கம் மின்னிப் பொலியும். இலக்கியக் கூட்டுணர்வின் சிறந்த பயன் இது.
தனியே 'அரகர' என்று சொல்லும் போது பெறும் உணர்ச்சியை விட திருவண்ணாமலை கார்த்திகை விளக்கின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள்
கூடியிருக்கையில், அவர்களோடு சேர்ந்து 'அரகர' என்று சொல்லும் போது நாம் அறியாததொரு மெய்யுணர்வு நம்மை ஆழ்த்தி விடுகிறது''.அறிஞர்கள், நல்ல நகைச்சுவை உணர்வு படைத்தவர்களாகவும் விளங்குவது இயல்பு. இந் நகைச்சுவை உணர்வு தெ.பொ.மீ.,யிடமும் குடிகொண்டிருந்தது. புலவர் குழுக் கூட்டம் ஒன்றில் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், 'தெ.பொ.மீ. பல்கலைஞர்' என்று பாராட்டினார்.
தெ.பொ.மீ., எழுந்து அவருக்கு விடை கூறும் போது, “எனக்கு முதலில் இரண்டொரு பற்கள் விழுந்தன. மறுபடியும் 3,4 பற்கள் விழுந்து விட்டன. வேற்றுமையே தெரியாமல் முன் இருப்பது போலவே அழகாக பல் அமைத்துத் தருகிறேன். நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். நானும் எவரிடமும் சொல்ல மாட்டேன் என மருத்துவர் கூறினார்.
இது எப்படி வெளியில் தெரிந்தது என்று எனக்குப் புரியவில்லை. எல்லோரும் என்னைப் 'பல்கலைஞர்' என்றே கூப்பிடுகிறார்கள்” என்று பேசி அவையினரைச் சிரிக்க வைத்தார். இத்தனை திறம் மிக்க தமிழறிஞரை அவரது பிறந்த நாளான இன்று நினைவு கொள்வோம்.-பேராசிரியர் இரா.மோகன்,எழுத்தாளர், பேச்சாளர்.94434 58286.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

    தமிழை வைத்தே 50 ஆண்டுகளுக்கு மேலாக காசு சம்பாதித்தும்,மேலும் சம்பாதித்து கொண்டும் இருக்கும் ஆடம்பர தமிழர்களுக்கிடையில் உண்மையிலேயே உண்மைதமிழராக வாழ்ந்த தொ.போ.மீனாட்சிசுந்தரம் மறக்கமுடியாதவர்.அவர் புகழ் வாழ்க.

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    நல்ல பதிவு .நன்றி அய்யா .

  • Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா

    அடுத்த மாநிலத்தில் உள்ளவர்கள் முதலமச்சராக இருந்தால் தமிழர்களின் உயர்நிலை உலகுக்கு எடுத்து சொல்லமாட்டார்கள் தமிழர் ஒருவர் எந்த கட்சி சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் புகழை உயரத்துக்கு கொண்டுசெல்வார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement