Advertisement

புத்தாண்டு நலம் தரும் நல்லாண்டு

புத்தாண்டு பிறந்து விட்டது. புதுத் துணிகள் வாங்குவது, கோயிலுக்குச் செல்வது, படிப்பு அல்லது தொழிலில் புதிய சபதம் ஏற்பது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது என்று சுறுசுறுப்பாகி விட்டோம். இவற்றைவிட மிக அவசியமானது இந்தப் புத்தாண்டில் நலமுடன் வாழ்வதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்வது.'நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்று வள்ளுவம் கற்றுக் கொடுத்ததை, வரும் ஆண்டில் பின்பற்ற என்ன ஆலோசனைகளை வைத்திருக்கிறீர்கள்? திட்டமிட்டு செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், தலைவலியில் தொடங்கி புற்றுநோய் வரை பல நோய்களைத் தடுத்துவிட முடியும்.
இதன் மூலம் உடல் துன்பங்களை மட்டுமல்லாமல் மன அழுத்தம், மருத்துவச் செலவு ஆகியவற்றையும் குறைக்க முடியும். நம் ஆரோக்கியம் நம் கையில். இதோ அதற்கான சிறு வழிகாட்டி.
தேவை ஹெல்த் டைரி உங்கள் குடும்பத்தினரின் உடல்நலன் குறித்த விஷயங்களை எழுதி வைக்க ஒரு டைரியை ஒதுக்குங்கள். அதில் நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரத்தை எழுதி
வைத்துக்கொள்ளுங்கள். பெரியவர்கள் தங்கள் உடல் எடை, ரத்த வகை, ரத்த அழுத்தம், ரத்தச்சர்க்கரை, ரத்தக்கொழுப்பு மற்றும் சிறுநீரகம், இதயம், கல்லீரல் பரிசோதனை அளவுகளை எழுதிக்கொள்ளுங்கள்.

இவற்றில் பிரச்னைகள் இருந்தால் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை எடுங்கள். உணவுமுறை, உடற்பயிற்சி, வாழ்க்கை முறைகளில் கவனமாக இருங்கள். மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு சிகிச்சை எடுக்க வேண்டியது முக்கியம். மருத்துவ பரிசோதனைக்கு மறுபடியும் எப்போது செல்ல வேண்டும் என்பதை மறக்காமல் குறித்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசி தினங்களையும், கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்பகாலப் பரிசோதனை தினங்களையும், கட்டாயம் குறித்துக்கொள்ள வேண்டும்.
'ஹெல்த் செக்-அப்' எப்போது இருபது வயதில் ஒருமுறை முழு உடல் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. அதற்குப் பிறகு தேவைப்படும் என்றால் மருத்துவர் கூறும் கால அளவில் பரிசோதனை செய்யலாம். ஆனால் நாற்பதை வயதைக் கடந்தவர்கள், வருடத்துக்கு ஒருமுறை
கட்டாயம் முழு உடல் பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். ரத்தவகை, ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள், ஹீமோகு ளோபின், ரத்தச்சர்க்கரை, ரத்தக் கொழுப்பு, எச்பிஏ1சி, ரத்த யூரியா, கிரியேட்டினின் மார்பு, எக்ஸ்-ரே, இசிஜி, எக்கோ, வயிறு, அல்ட்ரா சவுண்ட், சிறுநீர்ப் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை ஆகியவை முழு உடல் பரிசோதனையில் அடங்கும்.
பெண்களுக்கு மெமோகிராம், பாப் சிமியர் பரிசோதனைகள் தேவைப்படும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல், கண், காது பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அனைவருக்கும் கட்டாயம்.

முழு உடல் பரிசோதனையுடன், இதயம், சிறுநீரகம், கல்லீரல், மூளை, தைராய்டு என ஒவ்வொரு உறுப்புக்கும் பிரத்யேகமாக உள்ள பரிசோதனைகளையும் செய்துகொள்ளலாம். முதிய வயதில் மூட்டுவலிக்கு என பல பரிசோதனைகள் உள்ளன. இரைப்பை, குடல் புற்றுநோயைக் கண்டறிய என்டோஸ்கோப்பி, கொலனோஸ்கோப்பி பரிசோதனைகள் செய்யப்படுவதுண்டு.
செலவல்ல; சேமிப்பு முழு உடல் பரிசோதனைகள் தேவையில்லாத செலவு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் இது செலவல்ல; சேமிப்பு. பல நோய்கள் வெளியில் தெரியவே அதிக நாட்கள் ஆகும். அப்படி மறைந்திருந்துவிட்டு திடீரென்று ஒருநாள் வெளிப்படும்போது அதைத் தாங்குவதற்கு நமது உடலும் பொருளாதாரமும் பலமாக இருக்காது.
எனவே முழு உடல் பரிசோதனைகளைச் செய்து கொள்ளும்போது, என்னென்ன நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம், எந்தெந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் வாழ்க்கைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும். பிற்காலத்தில் வருகின்ற நோய்களைத் தடுத்துக்கொள்வதோடு, மருத்துவச் செலவுகளையும் குறைத்துக்கொள்ள முடியும். நம் பொருளாதாரம் பலவீனமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
தடுப்பூசிகள் முக்கியம் தடுப்பூசி என்றாலே அது
குழந்தைகள் சமாச்சாரம் என்றே நினைக்கின்றனர். அப்படியில்லை. இளம் வயதினருக்கும் முதியவர்களுக்கும் தடுப்பூசிகள் இருக்கின்றன. புளு காய்ச்சல், நிமோனியா, மஞ்சள் காமாலை, சின்னம்மை, கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் போன்றவற்றுக்குத் தடுப்பூசிகள் உள்ளன. இவற்றைப் போட்டுக்கொள்வது அவர்களின் உயிரையே காப்பாற்றும்.
காப்பீடுகள் அவசியம் எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவச் செலவுக்கு மருத்துவக் காப்பீடு பெரிதும் கைகொடுக்கும். மேல்நாடுகளில் ஒவ்வொரு குடிமகனும் இந்தக் காப்பீட்டை எடுக்கவேண்டியது கட்டாயம். ஆனால் நம் நாட்டில் இன்னமும் அநேகம் பேர் இதன் அவசியத்தை அறியாமலேதான் உள்ளனர்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் குரூப் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. மூத்த குடிமக்களின் பிள்ளைகள் வேலைபார்க்கும் நிறுவனங்களில் குரூப் இன்சூரன்ஸ் இருந்தால், அதில் அவர்களின் பெயரைச் சேர்த்துக்கொள்வது இன்னும் நல்லது. என்றாலும் தினம் தினம் ஒரு புது காப்பீட்டுத் திட்டத்தை பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் போட்டிபோட்டு வெளியிடுகின்றன. உங்களுக்கு உகந்ததை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
காப்பீடு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது மருத்துவக் காப்பீடு மட்டுமே. ஆனால் விபத்துக் காப்பீடும் முக்கியம். பொதுவாக சாலை, ரயில், விமானம் விபத்துகளைத்தான் நாம் விபத்து என்கிறோம். நமக்குத் தெரியாமல் நமக்கு ஏற்படுகிற எல்லா அசம்பாவிதங்களும் விபத்துதான்.
உதாரணத்துக்கு, குளியலறையில் வழுக்கிவிழுவது, விளையாடும்போது எலும்பு முறிவு ஏற்படுவது, தீ விபத்து உள்ளிட்ட அனைத்துமே விபத்துகள்தான். இம்மாதிரி நேரங்களில் ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு விபத்துக்காப்பீடு நமக்குக் கைகொடுக்கும். பள்ளி மாணவர்கள் முதல் 70 வயது வரை எல்லோருக்கும் இது நிச்சயம் தேவை.இந்த இரண்டிலும் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று பாலிசியைப் புதுப்பிக்கும் தேதியை 'ஹெல்த் டைரி'யில் குறித்துவைத்துக்கொண்டு, மறக்காமல் புதுப்பித்துவிடுங்கள். இடைவெளி விழுந்து விட்டால் பல சலுகைகள் கிடைக்காமல் போகும்.இப்படிப் பல வழிகளில் உங்களைத் தற்காத்துக்கொள்ள இன்றைக்கே தயாராகுங்கள். வாழ்த்துக்கள்.- டாக்டர் கு.கணேசன்பொதுநல மருத்துவர், ராஜபாளையம்.gganesan95gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    வாழ்க நலமுடன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement