Advertisement

ஷெப்' தாமுவுக்கு பிடித்தது அம்மா சமையலா...மனைவியின் சமையலா

இந்திய உணவு நிபுணர்களில் முதன்முறையாக ஓட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பத்துறையில் பி.எச்டி., ஆய்வை முடித்தவர். தொடர்ந்து 24 மணி நேரம் 30 நிமிடங்களில் 617 வகையான 190 கிலோ உணவை சமைத்து கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்தவர். உணவுக்காக உலகம் சுற்றிய வாலிபன். உணவு பிரியர்களால் செல்லமாக தாமு என்றழைக்கப்படும் ஷெப் தாமோதரன் மதுரை வந்தபோது அளித்த பேட்டி:
* ஓட்டல்களின் சமையல் து(அ)றை எப்போதும் ஆண்கள் வசமாஓட்டல்களில் ஒரே நேரத்தில் நிறைய பேருக்கு சமைக்க வேண்டும். கனமான பாத்திரங்களை கையாள்வது அவசியம். உண்மையைச் சொல்வதென்றால் உடற்திறனும் இதற்கு தேவை. பெண்களால் கடினமாக வேலை செய்ய முடிவதில்லை. அதனாலேயே ஓட்டல்களில் பெண் ஷெப்கள் பரிணமிக்க முடிவதில்லை.
* ஓட்டல் ருசியைப் போல, வீட்டு உணவில் இல்லை என்பது உண்மையா.அந்தக்காலத்தில் அம்மா கைப்பக்குவத்திற்கு மிஞ்சிய சமையல் இல்லை. இப்போது பெண்கள் வீட்டு வேலை, அலுவலக வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. அடுப்பில் சமையல் செய்யும் போதே, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார்படுத்த வேண்டும். பாத்திரம் விளக்க வேண்டும். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதால் சமையலில் சற்றே கவனம் குறைகிறது. ஓட்டலில் அப்படியில்லை. சமையல் மட்டும் தான் எங்களது ஒரே வேலையாக இருப்பதால், ருசியும் நன்றாக உள்ளது.
* சிலருக்கு மட்டும் கைப்பக்குவம் என்கிறார்கள். அது உண்மையா.ஆத்மார்த்தமாக சமையல் செய்ய வேண்டும். நல்ல எண்ணத்துடன், மற்றவர்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்ற நினைப்பிருந்தால் கண்டிப்பாக எல்லோருக்கும் கைப்பக்குவம் உண்டு.
* உணவுக்கு அலங்காரம் அழகா... ருசி அழகா.அலங்காரம் தேவையில்லை. ருசி தான் முக்கியம். ருசியில்லாமல் அலங்காரம் மட்டும் செய்து வைத்தால் அதை சாப்பிட முடியாது.
* உங்களது சுவையின் துவக்கம் கண்ணிலா... மூக்கிலா... நாக்கிலா...கண்கள் தான் சுவையின் முதல் துாதுவன். உணவை கண்ணில் கண்ட நிமிடத்தில் அதன் சுவை எப்படி இருக்கும் என சொல்லி விட முடியும். முகர்ந்து பார்க்கும் போது என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என தெரிந்து கொள்வேன். அதை வைத்தே ஒரு துளி உணவை மட்டும்நாக்கிற்கு சுவைக்காக தருவேன்.
* மிகச்சிறந்த சமையல் நிபுணர். மற்றவர்களின் உணவு அலர்ஜியான தருணங்கள் உண்டா.நிறைய நேரங்களில் அனுபவப்பட்டிருக்கிறேன். நான் ஊர், உலகமாக சுற்றிக் கொண்டிருப்பவன். கையில் எப்போதும் மருந்து வைத்திருப்பேன். வேறொன்றுமில்லை; அது சீரகம் தான். உணவு பிரச்னை தருகிறது என்றால் ஒரு டம்ளர் வெந்நீரில் சீரகத்தை கொதிக்க வைத்து சீரகத்தை மென்று தண்ணீரை குடித்து விடுவேன். வயிற்றுக்கு எந்த பிரச்னையும் செய்யாமல், பத்திரமாக ஜீரணித்து விடும். உணவு சரியில்லை என்றால், நீங்களும் இதை கையாளலாம்.
* உங்களைக் கவர்ந்தது எந்த நாட்டு உணவு.சத்தியமாக தமிழ்நாட்டு உணவு தான். தமிழகத்தில் தான் உணவே மருந்தாக உள்ளது. அதை வைத்து 5,000 விதமான சமையலை செய்யலாம். வேறெங்கும் இந்த வித்தியாசத்தை பார்க்க முடியாது.
* பிடித்த உணவுஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. மதுரை என்றால் இட்லி தான். எந்த வீட்டிலும் மிருதுவான சுவையுடன் நம்பி சாப்பிடலாம். தொட்டுக் கொள்ள வேண்டுமா... அயிரை மீன் குழம்பு தான். அதை அடித்துக் கொள்ள வேறு உணவில்லை.
* நீங்கள் சமைத்ததில் பிரமிப்பது...பிரான் சில்லி பிரை, பீன்ஸ் உசிலி. பீன்ஸ் மட்டுமல்ல கொத்தவரை, பிரகோலி வைத்தும் உசிலி செய்வேன். இதில் எனக்கு நானே சவால் விட்டு கொள்வேன்.
* உங்களுக்கு பிடித்தது அம்மா சமையலா... மனைவியின் சமையலா?அம்மானா சும்மா இல்லையே...

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement