Advertisement

சிகரத்தை நோக்கி பீனிக்ஸ் பறவையாக சிறகடிப்போம்

இன்னோர் ஆண்டு கழிந்து விட்டது. துயரங்களோடும், உயரங்களோடும்; வருத்தங்களோடும், திருத்தங்களோடும்; வேதனைகளோடும், சாதனைகளோடும்; எந்த சுவடும் இன்றி எந்த மாற்றமும் இன்றி, மற்ற ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் பலரைக் கடந்து சென்று விட்டது.
ஓராண்டு என்பது மிகப் பெரிய காலகட்டம் என்பதை சென்றாண்டில் நிகழ்ந்த அறிவியல் மாற்றங்களும், அளப்பரிய தொழில்நுட்பப் புரட்சிகளும் இணையற்ற இலக்கியப் படைப்புகளும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. மானுடத்தின் இருத்தலை இனிமையாக்க இரவைப் பகலாக்கி, வியர்வையில் குளித்து, பசியைப் புறக்கணித்து, தாகத்தை மறந்து உழைத்தவர்கள், இந்தாண்டை வரலாற்று ஏடுகளில் வளமான ஒன்றாக மாற்றியிருக்கிறார்கள்.
நேற்றிரவு இந்தியத் தெருக்களிலெல்லாம் இளைஞர்களின் கொண்டாட்டங்கள். இப்படித்தான் சென்றாண்டு தொடக்கத்திலும் இவர்கள் ஆடிப்பாடினார்கள். வருமாண்டு உற்சாகத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் என்றும், சென்றாண்டு வருத்தத்தை வரவு வைத்த ஆண்டு என்றும், ஒவ்வோர் ஆண்டும் உரைப்பது நமக்கு வாடிக்கை. எல்லா ஆண்டுகளும் ஒரே மாதிரி தானே இருக்கின்றன என்று வெறிச்சோடும் பார்வையில் விரக்தியை வரவழைத்து கன்னத்தில் கைவைப்பவர்களும் உண்டு.
ஆங்கில புத்தாண்டு குறித்து சிந்திப்பதற்கு முன், கடந்த ஓராண்டில் கடந்து வந்த பாதையை அசைபோடுவோம். ஆண்டு முழுவதுமே முதலீடு செய்த பேரறிவாளர்கள் உண்டு. இன்று அவர்கள் கடந்த ஆண்டை கணக்கெடுத்தால் அவர்கள் சிந்திய வியர்வைத் துளிகளுக்குச் சமமாக முத்துப்பரல்களை எண்ணி திருப்தியடைய முடியும்.
காற்று கதவடைப்பு செய்தால்
இப்படிப்பட்டவர்களால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்காகத்தான் ஞாயிறு ஒருநாள் தவறாமல் உதித்துக் கொண்டிருக்கிறது, தென்றல் வீசிக் கொண்டிருக்கிறது, நதி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு நாள் காற்று கதவடைப்பு நடத்தினால் மூச்சு என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கலாம். ஒரு நாள் நதி ஓட மறந்தால் அது சாக்கடையாகிவிடும். ஒரு நாள் கடல் ஆர்ப்பரிக்க மறுத்தால் அது சகதியாகி விடும். அமைதியாக அமர்ந்து இன்று அசைபோடுவோம். சென்றாண்டில் எத்தனை நாட்களை நாம் பயனுள்ளதாக ஆக்கியிருப்போம். தெளிவான நோக்கத்தோடு பணியாற்றியிருப்போம். இந்த மதிப்பீடு ஒன்றே இன்று நாம் செய்ய வேண்டிய முதல் பணி.
மாணவர்களாக இருந்தால் என்ன புதிதாய் கற்றிருக்கிறோம், என்ன அரிதாய்ப் பெற்றிருக்கிறோம். சென்றாண்டில் நாம் எத்தனை நுால்களை வாசித்திருக்கிறோம். அவற்றில் எவ்வளவு கருத்துகளை மனத்தில் பதிந்த வண்டலாய்த் தேக்கி வைத்திருக்கிறோம். அந்த இனிய செய்திகளில் எவற்றையெல்லாம் வாழ்க்கையோடு தொடர்புப்படுத்திப் பார்த்திருக்கிறோம். ஏனென்றால் வாசிப்பது நம் அறிவைப் பதாகையைப் போல அடுத்தவர்களிடம் துாக்கிப் பிடிப்பதற்காக அல்ல. கைக்குழல்விளக்கைப் போல நம் அறியாமை இருட்டை அகற்றுவதற்காக.
செலவுக்கணக்கா? வரவுக்கணக்கா?
கடைப்பிடிக்காத அறிவும், பயன்படுத்தாத பேனாவும் துருப்பிடித்துப் போய்விடும். பாடப்புத்தகங்களைத் தாண்டிப் பொது அறிவுப் புத்தகங்களையும், இலக்கியங்களையும் வாசித்து அறிந்திருக்கிறோமா என யோசிக்க வேண்டும். நாம் பெறுகிற கல்வியில் சமூக அக்கறையை சேர்த்திருக்கிறோமா! சுயநலத்தோடு மட்டும் தான் படித்திருக்கிறோமா! அப்போது 365 நாட்களில் 100 நாட்களையாவது முறையாகப் பயன்படுத்தியிருந்தால் நாம் இன்னோர் ஆண்டை நம் வயதில் சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அது செலவுக் கணக்கில்தான் சேரவேண்டும். வரவுக் கணக்கிற்கு வராது.
இளைஞர்களாக இருந்தால், பணி தேடுபவராக இருக்க நேர்ந்தால் நாம் நமக்கான பணியை சரியாக ஊகித்தறிந்திருக்கிறோமா, அது குறித்து வெற்றியை அடைய என்னென்ன தேர்வுகள், அதற்கான பயிற்சிகள் யாவை, முயற்சிகள் யாவை, அதற்கான தகுதிகள் என்ன என்பவற்றையெல்லாம் பட்டியலிட்டோமா எனப்
பரிசீலிக்க வேண்டும்.நம்முடைய படிப்புக்கான பணி தேடி வரும் காலம், மலையேறிப் போய் விட்டது. வாழ்க்கைத் திறன்கள் வாய்க்கப் பெற்றால் மட்டுமே வேலை கிடைக்கும். தகவல் தொடர்புத் திறன், படைப்பாக்க ஆற்றல், உணர்ச்சி மேலாண்மை, கருணை, உற்று ஆராய்தல், கவனிக்கும் திறன் வளர்த்துக் கொண்டால் பணிகள் நம்மைத் தேடி வரும். இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டவர்கள், '2015- என் வாழ்க்கையின் திருப்புமுனை' என்று தங்களைத் தாங்களே முதுகில் தட்டிக் கொள்ள முடியும்.
நேரத்தை நெறிப்படுத்துவோம் பணியிலே சேர்ந்தவர்கள் சாதித்து விட்டோம், இனி நாம் கற்றுக்கொள்ள ஏதுமில்லை என நினைக்காமல் அந்தப்பணியை இன்னும் எப்படி செம்மையாகச் செய்வது என்று முனைப்போடு கற்றுக்கொள்வது அவசியம்.
இழக்கிற ஒரு நொடியைக் கூடத்திரும்பப் பெற முடியாது என்கிற உண்மை நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு சிலர் மட்டுமே வாழ்க்கைக்கான அட்டவணையை வசப்படுத்தினார்கள். அதன்படி வாழ, நேரத்தை நெறிப்படுத்தினார்கள். அப்படிப்பட்டவர்கள் அவர்கள் துறையில் அதிசயிக்கத்தக்க ரசவாதங்களை நிகழ்த்தினார்கள். அவர்கள் புயலை மெருகேற்றித் தென்றலாக்கினார்கள். இரும்பை மென்மையாக்கி தங்கமாக்கினார்கள். கள்ளியைப் பக்குவப்படுத்தி அல்லியாக்கினார்கள். நெருஞ்சியை நெறிப்படுத்தி குறிஞ்சியாக்கினார்கள்.
இந்த ஆண்டையும் அப்படிப் போக்கிவிட வேண்டாம் என்பது நமக்குள் உரக்க உறைக்கும் உண்மை. இந்த ஆண்டின் முடிவில் நாம் என்னவாகப் போகிறோம் என்பதை இன்றே முடிவு செய்து கொள்வோம். நாம் வாத்தாக வலம் வரப்போகிறோமா அல்லது அன்னமாக வானவீதியில் சிறகுகளை விரித்துப் பறக்கப் போகிறோமா! நாம் வெட்டுக்கிளியாக பயிர்களை மேய்ந்து வாழப்போகிறோமா அல்லது பச்சைக்கிளிகளாகப் பழங்களைத் தேடி தொடுவானத்தை அளக்கப்போகிறோமா! ஆந்தைகளாக எலிகளைத் தேடி வேட்டைக்குப் போகப்போகிறோமா அல்லது பீனிக்ஸ் பறவையாக சிகரத்தில் ஊறும் ஊற்றை நோக்கி சிறகடிக்கப் போகிறோமா!
இலக்கை தொகுப்போம்
இந்த ஆண்டில் நாம் உன்னத நோக்கம் ஒன்றை வகுத்துக் கொள்வோம். அதை அடையத் தேவைப்படும் இலக்குகளைத் தொகுத்துக் கொள்வோம். எந்த இலக்கு முதலில் அடையப்பட வேண்டியது, அடுத்தது எது என்று ஒன்றின்பின் ஒன்றாக பூமாலையைக் கோர்ப்பதைப் போல அவற்றை வரிசைப்படுத்துவோம். ஒவ்வொன்றிற்கும் கால எல்லையை நிர்ணயித்துக் கொள்வோம். பிறகு அவற்றை அடையும் வழிகளை வகைப்படுத்துவோம். ஒவ்வொரு நாள் முடியும் போதும் அந்த இலக்கை அடைய கணிசமான அளவிற்கு பங்களித்திருக்கிறோமா என்று பரிசோதித்துக் கொள்வோம். ஒரு நாள் தவறாமல் இந்தப் பயிற்சியைச் செய்தால் ஆண்டு முடியும் போது நாம் எங்கோ உயரத்தில் நின்று கொண்டிருப்பதை உணரமுடியும்.
உன்னத நோக்கமென்பது நாம் பணம் சம்பாதிப்பதற்கோ, புகழ் ஈட்டுவதற்கோ அல்ல. அடுத்தவர்களிடம் கையேந்தாமல் வாழ்வதே உண்மையான சுயமரியாதை. தவறான வழியில் ஒரு காசு கூட ஈட்டாதவனே அத்தகைய சுயமரியாதையைப் பெற்றவன். ஆனால் வாழ்க்கையின் எல்லையை அதோடு முடித்துக் கொள்ளாமல் நாம் பெற்ற அறிவை, திறமையை, ஞானத்தை, கல்வியை இந்த சமுதாயத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இளைஞர்களின் ஆற்றல் மகத்தானது என்பதை அண்மையில் வந்த மழை வெள்ளத்தின்போது நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். ஒரு நெருக்கடி வருகிறபோது ஒன்றுசேருகிற நாம், நெருக்கடியே வராமலிருக்கும்படி பணிகளையாற்ற, ஒன்று சேர முடியாதா? இரண்டு கைகள் உருவாக்குவதை இருபதாயிரம் கைகள் அழிக்கலாமா!
நம் இருபதாயிரம் கைகளும் செம்மையைச் சேர்க்க, செழுமையை உண்டாக்க, ஆக்கத்தைப் படைக்க ஒன்றுசேர வேண்டிய தருணமிது.இந்த நாடு மகத்தான நாடு என்பதைக் கட்டமைக்கும் இளைஞர் கூட்டம் புறப்பட்டு விட்டது, அவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். நாமார்க்கும் குடியல்லோம் என்று, ஒளிபடைத்த கண்ணோடு ஒளிரும் இந்தியாவை உருவாக்க, அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையை 2016ல் நாம் உருவாக்குவதற்கு, இன்றிலிருந்தே தொடங்குவோம். ஏனென்றால் நாம் செல்லவேண்டிய துாரம் அதிகமிருக்கிறது.
-வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.,iraianbuhotmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bala Ji - Singapore,சிங்கப்பூர்

    இறையன்பு IAS அவர்களின் புத்துணர்ச்சி அளிக்கும் கருத்துக்களுக்கு ஒரு பெரிய சல்யூட்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement