Advertisement

புத்தாண்டில் புதிய சிந்தனைகள்

இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறக்க போகிறது. மனச்சோர்வை எல்லாம் ஒதுக்கி வைத்து புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்போம். புதிய சிந்தனையோடு புத்தாண்டை அணுகுவோம். உடலில் சோர்வு ஏற்பட்டால் சக்தி தரும் பானம் சாப்பிடுவது வழக்கம். மனச்சோர்வு நீங்க மருந்து எது? வெற்றியாளர்கள் உதிர்த்த வார்த்தைகளே மந்திரச் சொற்களாக மலர்ந்து மருந்தாகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், பல பகுதிகளாக பிரிந்திருந்தது சீனா. பிரபுக்கள் ஆதிக்கத்தால் மக்கள் சித்திரவதைக்கு ஆளாகியினர். அப்போது மக்களின் மனசாட்சியாக மாறினார் கன்பூசியஸ்.
நல்ல அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றி, அரசிற்கு எதிராக பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டார்.
கன்பூசியசை கைது செய்தால் விபரீதம் ஏற்படும் என உணர்ந்த அரசன் வேறு வழியில், அவரை அடக்க நினைத்தான். அவருக்கு சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினான். பணியாளர்கள், பெரிய மாளிகை, அதிக சம்பளம் என வசதிகள் கொடுத்தான். அவர் தனது கட்டுக்குள் அடங்குவார் என எதிர் பார்த்தான்.
அவர் மக்கள் நலனுக்கான சட்டங்களை இயற்றினார். அவை, எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் மன்னன், கொடுங்கோலனாக நடந்து கொண்டான்.
பதவியால் ஒரு பயனும் ஏற்படாது என உணர்ந்த கன்பூசியஸ், பதவி துறந்தார். மக்கள் சக்தியை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டார். அவரைச் சந்தித்த மன்னன், 'சீமான் போல் வாழ வேண்டிய நீங்கள், ஏன் இப்படி பிச்சைக்காரனைப் போல் வீதியில் அலைகிறீர்கள்?,' என்றார்.
'எது வசதியானதோ அதைச் செய்யாதே! எது சரியானதோ அதைச் செய்!' என மனசாட்சி சொல்கிறது என்றார்.
இது ஒரு மந்திரச் சொல் அல்லவா? ஊனம் தடையல்ல
லண்டனை சேர்ந்த ஸ்டிபன் ஹாக்கினிஸ்,௬௫, கழுத்திற்கு கீழ் உடலுறுப்புகள் செயல்படாத நிலையில் நர்ஸ் துணையுடன் வீல்சேரில்தான் நகர முடியும். பேட்டி ஒன்றில் 'இப்படிப்பட்ட உடல்நிலையிலும், உங்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?' எனக் கேட்டனர்.
ஸ்டிபன் ஹாக்கினிஸ்,' எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம்,' என்றார். இதை மனதில் வைத்தால், இழந்தவைகளுக்காக ஏங்குவோமா?
அனுபவம், உற்சாகம்
ஸ்வீடனில் ௧௯௫௮ ல் உலக கால்பந்து போட்டியில் பிரேசில் அணி பங்கேற்றது. சாதாரண தோற்றம், கூச்ச சுபாவம் கொண்ட ௧௭ வயது சிறுவன் பீலே, பிரேசில் அணியில் சேர்க்கப்பட்டார். இரு போட்டிகளில் அவரது வேலை, பிற வீரர்களின் காலணிகளைச் சுத்தப்படுத்துவது. வெற்றி உறுதியான நிலையில், இறுதியாக பீலேயை களம் இறக்கினர்.
சில நிமிடங்கள் களத்தில் இருந்தாலும், அவரது உற்சாகம் அனைவரையும் ஈர்த்தது. இதனால் பிரான்சிற்கு எதிரான செமிபைனலில் துவக்கத்திலேயே களம் இறக்கப்பட்டார். அணியில் யாருக்கும் வேலை வைக்காமல், சூறாவளியாகச் சுழன்று ஹாட்ரிக் முறையில் ௩ கோல்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார் பீலே. ஸ்வீடனுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ௨ கோல்கள் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார். வெற்றிக்கு காரணம் கேட்டபோது பீலே, 'அனுபவத்தால் முடியாததை உற்சாகம் சாதித்துக் காட்டும்,' என்றார்.
ஜூலியஸ் சீசர்
சட்ட நிபுணர் ஆவதற்காக கிரேக்கத்திற்கு கடல் வழிப் பயணமானார் ௨௫ வயது ஜூலியஸ் சீசர். கப்பலில் இருந்த அனைவரையும் கடற்கொள்ளையர்கள் கைது செய்தனர். தலா ௨௦ தங்கக் காசுகள் கொடுத்தால் விடுதலை செய்வோம் என பயணிகளின் உறவினர் களுக்கு தகவல் அனுப்பினர்.
கோபமடைந்த சீசர், 'என் விலை ௨௦ காசுகள் தானா? கேவலப்படுத்தாதீர்கள். ௧௦௦ தங்கக் காசுகளாவது கேளுங்கள்,' என்றார் தோரணையுடன். கொள்ளையர்கள் சிரித்தனர்.
'சிரிக்காதீர்கள். உங்களை கொன்றுவிட முடியும். அதற்கான காலம் வரும்,' என முழங்கினார் சீசர். சக பயணி ஒருவர், 'எதற்காக இப்படி நீயே உயர்வாகப் பேசிக்கொள்கிறாய்.
அது உனக்கே ஆபத்தாக முடியலாம்,' என எச்சரித்தார்.
சீசர், 'நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காக பிறர் யாரும் விளம்பரம் செய்ய மாட்டார்கள்,' என்றார்.
௩௮ நாட்கள் பணையக் கைதியாக இருந்து வெளியே வந்ததும், வீரமிக்க படை வீரர்களைத் திரட்டி, கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு, சபதமிட்டதுபோல் கொன்று குவித்தார். இந்த வெற்றியை பெரிய அளவில் கொண்டாடினார்.
'ஏன் சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறீர்கள்,' என கேட்டபோது, தனக்குப் பிடித்த மந்திரச் சொல்லான, 'உன் தகுதியை நீயே உரக்கச் சொல்! பிறருக்காகக் காத்திருக்காதே...!' என்பதை மீண்டும் கூறினார்.
வெற்றி, தோல்வி
மங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான், சீனாவின் யான்ஜிங்க் (தற்போது பெய்ஜிங்) நகரை கைப்பற்ற தனது படையுடன் புறப்பட்டார். சீன அரசன் போருக்கு தயாராவதற்குள், செங்கிஸ்கான் போரைத் துவங்கி, பல சீன வீரர்களை வெட்டிச் சாய்த்தார். இது சீன வீரர்களிடம் பீதியை ஏற்படுத்தியது.
வெற்றி எளிதாக கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா? என்று கேட்டபோது செங்கிஸ்கான், 'தோல்வி அடைந்து விடுவோம் என அச்சப்படுபவன், வெற்றி பெறமாட்டான்,' என்றார்.
இதுதான் போர்த்தந்திரம். மற்றவர்களை பீதியடைச் செய்துவிட்டால், அவர்களை நம்மால் முடியுமா? என்ற தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளினால், வெற்றி நமக்கே!
ஒரு ஞானியிடம் ௪ இளைஞர்கள் வந்து, 'உங்களை ஞானி என்கிறார்களே? அப்படி என்ன சாதித்துவிட்டீர்கள்,' என்றனர்.
'சாப்பிடுகிறேன். துாங்குகிறேன். படிக்கிறேன். பிரார்த்தனை செய்கிறேன்' என்றார் ஞானி. இளைஞர்கள், 'நாங்கள் அதைத்தானே செய்கிறோம்', என்றனர்.
'இருக்கலாம். ஆனால், நான் சாப்பிடும்போது சாப்பிட மட்டும் செய்கிறேன். துாங்கும்போது துாங்க மட்டும் செய்கிறேன். படிக்கும் போது படிக்க மட்டும் செய்கிறேன். பிரார்த்தனையின்போது பிரார்த்தனை செய்கிறேன். அதற்கான தாரக மந்திரம் இதுதான்,' என்றார்.
'எப்போது நீ எதுவாக இருக்கிறாயோ, அப்போது அதுவாகவே இரு' என்றார் ஞானி.
'இன்று எல்லாம் நல்லபடியாக நடக்கும். வெற்றியாக முடியும். பிரச்னைகள் தீரும். எல்லோரும் என்னை நேசிப்பர். அனைவரையும் அன்பால் அரவணைப்பேன். என்னால் எல்லாம் முடியும்'
- இந்த மந்திரச் சொற்களை, மனதில் பதிய வைத்து தினமும் காலையில் எழுந்ததும் சொல்லி பாருங்கள். நீங்களும் வாகை சூடலாம். புத்தாண்டு முதல் இதனை வழக்கமாக்கி கொள்ளுங்கள். வரும் நாட்கள் உங்கள் வெற்றிக்கான நாட்களாகும்.
- முனைவர் இளசை சுந்தரம்,எழுத்தாளர், பேச்சாளர்மதுரை. 98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement