Advertisement

மது இல்லா புத்தாண்டு கொண்டாட்டம்!

மறக்கமுடியாத நினைவலைகளைச் சுவடுகளாகத் தந்து 2015 நம்மைவிட்டு நகர, இனிமை பூசிய சாதனை நாட்களோடு இதோ 2016 நம் இல்லம் நோக்கி வரப்போகிறது. எப்படிக் கொண்டாடப்போகிறோம்
இந்தப் புத்தாண்டினை? என்ன மாற்றங்களை நமக்குள் நாம் நிகழ்த்தப் போகிறோம்? இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களோடு சில வரிகள்...புத்தாண்டு ஓய்வு நாளா? பழைய நாட்காட்டியைத் தூக்கி எறிந்துவிட்டுப் புதிய நாட்காட்டியை நம் வீட்டுச்சுவற்றில் மாட்டிக்கொண்டிருக்கிறோமே அதற்குப் பெயர்தான் புத்தாண்டா?
மனமெனும் சுவற்றில் ஆழமாய் அடித்த நினைவு ஆணிகளை அப்படியே விட்டுவிட்டுக் காலக்காலண்டர்களை மாற்றிக்கொண்டிருப்பதற்குப் பெயர்தான் புத்தாண்டா?புத்தாண்டின் முதல்நாளைச் சிகப்பு
வண்ணமிட்டு விடுமுறை என்று காட்டிக்கொண்டிருக்கிறதே காலண்டர். ஆண்டின் முதல்நாளை ஓய்வு நாளாய் நாம் கொண்டாடினால் அந்த ஆண்டின் வளர்ச்சிக்கு, என்று தான் பிள்ளையார் சுழிபோடுவது? ஜப்பான் நாட்டில் மகிழ்வான மன
நிலையில் மக்கள் இருந்தால் அதிகமாய் மூன்று மணி நேரம் நாட்டிற்காகப் பணிபுரிவார்களாம். நாமும் புத்தாண்டு தினத்தன்று அப்படிச்செய்தால் என்ன? புத்தாண்டு தினத்தன்று இப்படி நிறுத்துப் பார்க்க வேண்டியன நிறைய இருந்தாலும், நிறுத்திப்பார்க்கிறோம் புத்தாண்டு எனும் புன்னகை தேவதையை.
நெருப்பின் அடையாளம் எல்லாவற்றையும் தனதாக்குகிற மாதிரி, பொறுப்பின் அடையாளமாக நம்மை நாம் மாற்ற இந்த இனிமையான புத்தாண்டுப்பொழுதில் உறுதியெடுப்போம்.புதியதோர் புத்தாண்டு புதிய சிந்தனைகளோடும் புதிய முயற்சி களோடும் புதிய மனிதராய் இந்தப் புத்தாண்டுக்குள் நுழைவோம். வேதனைகளையும் சோதனைகளையும் தாண்டித்தான் சாதனைகளைச் செய்யமுடியும் என்று நினைப்போம். எதற்கெடுத்தாலும் அலுத்துக்கொண்டவர்களையே எப்போதும் சோகம்
இழுத்துக்கொள்கிறது. ஆகவே 365 நாட்களும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் என்று உணர்ந்து, புன்னகையோடு உங்கள் பணிகளை இந்த விடுமுறை நாளிலும் விரைவாய் தொடங்குங்கள்.மதுவை மறந்த மகத்தான புத்தாண்டு பிறந்த குழந்தையின் ஸ்பரிசம், மலர்களின் அணிவகுப்பு, பனிகோர்த்துப் பச்சைப் பசேலென்று அழகாகப் பரந்து விரிந்திருக்கும் புல்வெளி, வானத்தின் வசந்த வளைவாய் வர்ணஜாலம் காட்டும் வானவில், தங்கக்கோளமாய் கிளம்பி மேல் எழும் சூரியன், பொக்கைவாய் திறந்து சத்தமாய் சிரிக்கும் பாட்டி, தாத்தா.. இந்த அழகின் வரிசையில், இன்று இனிமைசேர்க்க வந்திருக்கும் புத்தாண்டு தேவதையை மதுவின் மயக்கத்திலா
வரவேற்பது? குடியின் கொடியை ஆட்டி வரவேற்பதை புதிய ஆண்டு எப்படி ஆமோதிக்கும்? நீங்கள் மதுமயக்கத்தில் புத்தாண்டு கொண்டாடினால், உங்கள் குடும்பத்தினருக்கு அது எப்படி மகிழ்ச்சி தரும்.
நள்ளிரவுக் கொண்டாட்டங்களை நாம் புத்தாண்டு வாழ்த்தென்று பிழையாகப் புரிந்திருக்கிறோம். அருகில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு இனிப்போடு சென்று கொண்டாடிப் பாருங்கள். கள்ளம் கபடமற்ற அந்த வெள்ளை
உள்ளத்தில் இறைவன் வீற்றிருப்பதை நீங்கள் தெளிவாய் உணர்வீர்கள்.நம்குடியைக் கெடுக்கும் குடியை உதறித்தள்ளியும் கூட, லட்சக்கணக்கான
அன்பர்கள் மிக நேர்த்தியாகப் புத்தாண்டைக் கொண்டாடிக்கொண்டிருகிறார்கள். பழைய காலண்டரோடு மதுஅருந்தும் எண்ணத்தையும்சேர்த்துத் துார எறிந்திருப்பீர்கள். எந்த மாற்றமும்இல்லாத நாள், எல்லா நாட்களையும்போல் மற்றுமொரு சாதாரண நாள்தானே! மாற்றங்களுக்கு நம் மனதை உட்படுத்துவோம்,எவரெஸ்ட் சிகரமும் நாம் ஏறிடும் உயரம்தான். வீண்செலவுகளை தவிர்ப்போமே விரிவானின் வியப்பிற்குரிய வெள்ளியாய், வெள்ளியன்று பிறக்கிறது நம் சிந்தை நிறைத்து விந்தை பலபுரிய உள்ள இந்த அழகுப்புத்தாண்டு.
புத்துணர்ச்சியின் உளிகளால் புதியவர்களாய் நம்மைச் செதுக்கிக்கொள்வோம். புத்தாண்டு கும்மாளமிட்டு காசைக் கரியாக்குவதற்குப்பதில் வெள்ள
சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் பங்கிற்கு உதவ அந்தத்தொகையை அனுப்பி உதவலாம். பண்டிகையின்அழகு பலருக்கும் தந்து மகிழ்தல்என்று புரிந்துகொள்வோம். மனிதநேயத்திற்கு மகுடம் சூட்டுவோம். இந்தப்புத்தாண்டிலிருந்து மற்றவர்களுக்கு உதவத் தினமும் ஒருரூபாய் எடுத்துவைப்போமே.
புதுப்பித்துக்கொள்ள நல்வாய்ப்பு புதுவருடத்தின் ஒவ்வொரு வினாடியும் நம்மை புதுப்பித்துக்கொள்ள மற்றுமொரு மகத்தான நல்வாய்ப்பு. நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும். வீண்குழப்பங்களுக்கு இடம் கொடாமல் கண்ணாடியைப்போல மனதைத் தெளிவாக வைத்திருப்போம். எந்தச் சூழ்நிலையிலும் மனம் சோர்வடையாமல், நடந்ததை நினைத்து வருத்தத்தின் நிறுத்தத்தில் நின்றுகொண்டு மனம்தளராமல் இந்த நல்லாண்டினைத் தொடங்குவோம்.நடந்ததும், நடந்து கொண்டிருப்பதும், நடக்க இருப்பதும் நம்மை இன்னும் உறுதியாக்கவேஎன்று புரிந்துகொண்டு புதியதடத்தில் உற்சாகத்தோடு புதுப்பயணத்தைத் தொடங்கினால் இந்த ஆண்டும் இனி வரும் எந்த ஆண்டும் சாதனை தந்த தங்கநாட்களை தந்து கடக்கும்.
“திட்டமிடத் தவறுகிறவன் தவறு செய்யத்திட்டமிடுகிறான்” ஓராண்டு முழுக்கச் செய்யவேண்டியசெயல்களை, முடிக்கவேண்டிய பணிகளை ஆண்டின் முதல்நாளில், மிகச்சரியாக திட்டமிட்டு முன்யோசனையோடு செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
இயற்கையோடு இயைந்த வாழ்வு நீர், நிலம், காற்று, ஆகாயம் போன்ற இயற்கை அன்னையின் அற்புதமான வடிவங்களை மாசுபடுத்த மாட்டோம் என்ற உறுதியைப் இந்தப்புத்தாண்டில் எடுத்துக் கடைப்பிடித்து வாழ்வோம். பாலிதீன்பைகளைப் பயன்படுத்தமாட்டோம், பூமியைக் குப்பைக் கிடங்காக்கிட மாட்டோம் என்ற உறுதிமொழியை
இந்தப்புத்தாண்டில் அனைவரும்எடுப்போம். மாசில்லாத உலகம் வேண்டும், மரபான விவசாயமுறைகள் வேண்டும், நீர்நிலைகளைக் காக்க வேண்டும், நிலமெலாம் மரங்கள் நிறையவேண்டும், நிலையான இன்பம்வேண்டும் என்று வேண்டுவோம்.
தினமும் ஓர் உயிருக்கு நன்மை செய்வோம் “பிரார்த்தனைசெய்யும் உதடுகளைவிடச் சேவைசெய்யும் கரங்கள் உன்னதமானவை” என்ற பொன்மொழியில்தான் எவ்வளவுபொருள்.
“உன் கண்ணில்நீர்வழிந்தால் என் நெஞ்சில் உதிரம்கொட்டுதடி” என்று மகாகவி பாரதியின் கூற்றுப்படி, கோடிக் கண்களின் இன்ப துன்பத்தை நம் ஜோடிக்கண்களால் கண்டு இந்தப் புத்தாண்டு தினத்தில்இருந்து தினமும் ஓர் உயிருக்குக்கட்டாயம் நன்மை செய்த பின்பே, அன்று உறங்கச்செல்வேன் என உறுதிமொழி எடுப்போம்.
எந்த உயிருக்கும் நன்மை செய்ய வாய்ப்பே கிடைக்காவிட்டால், ஒரு செடிக்கு ஒரு செம்பு தண்ணீரையாவது விட்டு நன்மையைச் செய்வோம் என்று உறுதிமேற்கொள்வோம்.
முயற்சியின் முதுகிலேறிப் பயிற்சியின் படிக்கட்டுகளைக் கடந்துவிட்டால், வெற்றி நமக்கு விரல் நுனியருகில்தான். வெற்றியின் வெளிச்சத்தோடு இந்தப்புத்தாண்டினைத் தொடங்குவோம்.
துயரங்களை துார எறிந்துவிட்டு ஆனந்தத்தின் ஆரம்பம் என மகிழ்வோடுஅனைவருக்கும் வாழ்த்துச்சொல்வோம்.இழப்பதற்கு என்ன இருக்கிறது? இருப்பதற்கே வந்தோம். இதில்கோபமும் பொறாமையும் ஏன்? வெற்றிக்கான காரணங்கள் வெகு அருகில் உள்ளன. எதிர்வரும்காலம் என் காலமென்று உற்சாகத்தோடு இந்த இனிய புத்தாண்டைவரவேற்போம்.சாந்தியும் சமாதானமும் உலகமெல்லாம் செழித்து வளர அமைதி கொலுவிருக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். விரிவானம் காத்திருக்கிறது... நாம் பறப்பதற்கு. --முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி. 99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement