Advertisement

நீங்க பாடுங்க தம்பிகளா...

என்னவோ ரெண்டு பச்சப் பிள்ளைங்க ஒரு பாட்டு போட்டா, அப்படி ஒரு குத்தமா? ஜனநாயக நாட்டுல ஒருத்தர் பாட்டு எழுதினாரு, இன்னொருத்தர் இசை அமைச்சாரு. இது உண்மையா இல்லையான்னு தெரியல. இந்த புள்ளைங்க புகழை பொறுக்க முடியாம, யாரோ பாட்டை வெளியில விட்டுட்டாங்களாம். அதுக்கு புள்ளைங்க என்ன செய்யும் பாவம். அவிங்களே எழுதல, இசை அமைக்கலன்னு ஒரு கோஷ்டி சொல்லிட்டு இருக்கு. யாரோ, பாட்ட கேவலமா எழுதி, இவிங்க பேருல பரப்பிட்டானுங்க போல.

என்னவா இருந்தா என்ன? பொம்பளைங்க வழக்கம் போல பொறுத்து போக வேண்டியது தானே. இந்த பாட்ட எல்லாமா தடை செய்ய முடியும்? தடை செய்ய வேற பாட்டுங்கல்லாம் இருக்கறச்சே, அரசு தான் என்ன செய்யும்?அட, அப்படி என்ன இந்த பாட்டு புதுசா கேவலமா இருக்கு. முன்ன கேட்டதில்லையா? மார்க்கெட்டுல இருக்கற எல்லா காய், கிழங்கு, பழம் பேரெல்லாம் போட்டு பொண்ண வர்ணனை செஞ்சதில்லையா? நீ சிவப்பு பழம், மஞ்சள் பழம், கப்பக்கிழங்கு, இப்ப பூத்த ரோசா, கொய்யா, ஆப்பிள் பழம், மாங்கனி, மண்ணாங்கட்டி. என்ன அது எல்லாம் சாடை மாடையா இருக்கும்.இதுக்கு மேல கூட இருக்கு. காதலை நிராகரிச்ச பொண்ணு, பாதியிலே பயந்து போயி, இந்த ஆளு வேண்டாமுன்னு ஓடின பொண்ணு, இவங்களை எல்லாம் வெட்டணும், குத்தணும் அப்படின்னு பாட்டு வரலியா. காதலிச்ச பொண்ணோட அப்பாவை சாகடிக்கணும்ன்னு பாடலியா.

அவ்வளவு ஏனுங்க? காமெடி நடிகருங்க எல்லாம், 4 வயசு பாப்பாவிலே இருந்து, 70 வயது ஆயா வரை எல்லாரையும், 'பிகரு'ன்னு தானே கூப்பிடுறாங்க. அப்புறம், அது என்ன படம், இவுங்க இல்லன்னா அவுங்க அப்படின்னு வருமே, அந்த படத்துல கூட எல்லா வசனமுமே, ஆபாசமாகத் தான் இருந்துதாமே. அதெல்லாம் பொறுமையா பொறுத்து போனவங்களுக்கு, இந்த பாட்டை பொறுக்க முடியாதாமாம்.

ரகசியமா போட்ட பாட்டு தான், வெளியில வரும்ன்னு நினைச்சு போடலன்னு சொல்ற பெரிய மனுஷங்களுக்கு வணக்கம். உண்மைதாங்க நமக்குள்ள நாம பேசுறதெல்லாம் வெளியில வருது நியாயம் இல்ல தான். ஆனாக்க, நமக்குள்ள நாம பேசுறது இவ்வளவு கேவலமாவா இருக்கும். நாகரிகங்கறது மத்தவங்க எதிர்ல, நாம எப்படி நடந்துப்போமோ, அப்படியே நம்மைக் கண்காணிக்க யாருமில்லாத போதும் நடந்துக்கிறது.

ஆனா, இனிமேயும் இந்த பொண்ணுங்க பொறுமையா இருப்பாங்களான்னு சொல்ல முடியாதுங்க. இதுக்கு எதிரா போராட்டம் நடத்துறது, கொடும்பாவி எரிக்கிறது எல்லாம், 'டிவி'யில காட்டினாங்க. அடிச்ச செருப்பில ஓட்டியிருந்த சேறு கண்ணில் பட்டது. அது, யுக யுகாந்திரங்களா பெண்களின் மீது தெறிச்ச சேத்தோட மிச்சமான ஒரு துளி தான்!என்ன ஆச்சரியம் பாருங்க. பாட்டு வெளியில வந்த இதே டிசம்பர் மாசம் தான், நம்ம பாரதியார் பொறந்த மாசம். நுாறு வருஷத்துக்கு மேல ஆச்சு. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்ஆணோடு, பெண் நிகர் எனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்.வைய வாழ்வு தன்னில் எந்த நாளும் தாதர் என்ற நிலைமை மாறி, ஆண்களோடு, பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே!

'சரி'ன்னு ஒரு சொல், அப்பறம் நிகர் அப்படின்னு ஒரு சொல், திரும்பவும் சமானம் அப்படின்னு ஒரு சொல், மூணு முறை சொல்லிச் சொல்லி பொண்ணுங்க அப்படின்னு வெறும் உடல் மட்டும் இல்ல அதுவும் ஆணைப் போல அறிவுள்ள ஒரு உயிருன்னு சொல்லிட்டுப் போயி, இப்போ ஆகாசத்துலே இருந்து அழுதுகிட்டு இருக்காரு.

ஒருவேளை, பாரதியார் உசிரோட இருந்திருந்தா, தம்பிகளா, பொண்ணுன்னு நீங்க சொல்லியிருக்கிறது நாம கும்பிடுற அம்மன் சாமி, அம்மா, அக்கா, தங்கச்சின்னு எல்லாரும் தானே விசாரிச்சிருப்பாரு.
இமெயில்:bharathy.bhaskargmail.com

- பாரதி பாஸ்கர் -
பேச்சாளர், சமூக எழுத்தாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (21)

  • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    ஓடி ஓடி காதலித்துவிட்டு, திருமணம் என்று வரும்போது ஓடி ஒளிந்து பணக்கார மாப்பிளையை திருமணம் செய்யும் பெண்ணை பற்றி பாரதி பாஸ்கர் என்ன சொல்கிறார்.....? இந்த பாட்டு அது போன்ற பெண்களுக்காக எழுதப்பட்டதுதான், மற்றவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆண்களை நேரப்போக்கிற்காக பயன்படுத்தும் பெண்களை பாரதியும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றே நினைக்கிறேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement