Advertisement

மக்கள் மனங்களில் மன்னாதி மன்னன்!

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என சினிமாவில் பாடியதுடன் நின்று விடாமல், அதுபோல வாழ்ந்தும்
காட்டியவர் மறைந்த மக்கள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,சிறு வயதில் அவர் பட்ட கஷ்டங்களை உணர்ந்ததால்தான் என்னவோ முதல்வரானவுடன், பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்தார். சினிமா, அரசியல் என எடுத்துக் கொண்ட துறைகளில் வெற்றியை தவிர வேறு எதையும் சந்திக்காமல் சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர்.,
ஒரு முறை சென்னை மயிலாப்பூரில் நடந்த சினிமா விழாவில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., பங்கேற்றார். நான் அவரை புகழ்ந்து, 'சினிமாத்துறையினர் மட்டுமின்றி அனைவருக்குமே இவ்வளவு நன்மைகள் செய்யும் எம்.ஜி.ஆருக்கு நாம் நன்றி பாராட்ட வேண்டும்' என்றேன். உடனே குறுக்கிட்டு அதுகுறித்து மேலும் பேச விடாமல் தடுத்தார்.
விழா முடிந்த பிறகு, ''நீ சினிமா கலைஞன். உனக்கு எல்லா கட்சிகளிலும் ரசிகர்கள் இருப்பார்கள். என்னை பாராட்டி பேசி மற்ற கட்சியிலுள்ள ரசிகர்களை இழந்து விடாதே,'' என கூறிய போது நெகிழ்ந்து விட்டேன்.
அரசியல் வேண்டாம் எம்.ஜி.ஆர்., உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அப்போது தேர்தல் காலகட்டம். அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றதால் எதிர்கட்சியினர் விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டனர். அமெரிக்கா சென்று எம்.ஜி.ஆரை பார்க்கலாம் என முடிவு செய்தேன். ஆனால், அவர் 'உனக்கு அரசியல் வேண்டாம்' என அறிவுறுத்தியதும் நினைவுக்கு வந்தது. இதனால் ஒரே குழப்பம். ஆனால், 'எதிர்கட்சியினர் பிரசாரத்தை முறியடிக்க அமெரிக்கா செல்ல வேண்டும்' என முடிவு செய்தேன். இத்தகவலை அறிந்த ஆர்.எம்.வீரப்பன் என்னிடம் விசாரித்தார்.
அமெரிக்காவில் அனுமதி மறுப்பு
பிறகு நான் உட்பட ஐந்து பேர் அமெரிக்கா சென்றோம். அங்கு எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்ற புரூக்லின் மருத்துவமனை தீவு பகுதியில் இருந்தது. இதனால் நாங்கள் நியூயார்க் கில்டன் ஓட்டலில் தங்கினோம். மறுநாள் அவரை பார்க்க சென்றபோது, மருத்துவமனை வரவேற்பு அறையில்
எம்.ஜி.ஆரை சந்திக்க அனுமதி மறுத்து விட்டனர். அப்போது அங்கு வந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் மாணிக்கம், டாக்டர் வி.ஆர்., அறிவுரைப்படி ஜானகி அம்மையாரை சந்தித்தோம்.எங்களிடம் அவர் ''அமெரிக்காவை சுற்றி பார்க்க வந்துள்ளீர்களா,'' என கேட்டதும், தர்மசங்கடமாகி விட்டது. 'தலைவரை பார்க்க மட்டுமே வந்துள்ளோம்' என அவரிடம் விளக்கமாக கூறினேன்.
''மருத்துவமனையில் எம்.ஜி.ஆரை பார்க்க பாஸ் இருந்தால் மட்டும் முடியும். பாஸ் பெற்ற பிறகு பார்க்கலாம்,'' எனக்கூறி விட்டார். வேறுவழியின்றி ஓட்டலுக்கு திரும்பினோம். அன்றிரவு நண்பர் வீட்டில் தங்கினோம்.
மறுநாள் காலை ஓட்டலுக்கு சென்ற போது, ஜானகி அம்மையார், மாணிக்கத்திடம் இருந்து எனக்கு போன் வந்ததாக தெரிவித்தனர். உடனடியாக மருத்துவ
மனைக்கு சென்றோம். நான் வந்த விவரத்தை எம்.ஜி.ஆரிடம் தெரிவித்த போது, உடனடியாக வந்து பார்க்க சொல்லியிருக்கிறார் என தெரிந்தது.எம்.ஜி.ஆர்., அறைக்கு சென்றபோது, ஜன்னல் அருகே தனக்கே உரித்தான ஸ்டைலில் சேரில் அமர்ந்திருந்தார். என்னை பார்த்ததும் எழுந்து நிற்க முயன்றார். நான் தடுக்கவும், எதிரிலிருந்த சேரில்
அமரும்படி கூறினார். நான் தயங்கவும், என்னை அமர வைத்த பிறகு தான் அவரும் அமர்ந்தார்.உதவிட தயங்காதவர்தமிழக தேர்தலில் எதிர்க்கட்சியினர் பிரசாரத்தை கூறி, 'நான் பிரசாரம் செய்யட்டுமா' என்றும், ஆசி வழங்கும்படியும் கேட்டேன். நீண்ட யோசனைக்கு பிறகு, என் தலையில் கை வைத்து ஆசி வழங்கி உடனே இந்தியா திரும்பும்படி கூறினார். அப்போது உடனடியாக விமானத்தில் டிக்கெட் கிடைப்பது கடினம்.
'உடனடியாக எப்படி இந்தியா திரும்புவது' என யோசித்தபடி, ஓட்டலுக்கு திரும்பி சென்றேன். அதற்குள் எம்.ஜி.ஆர்., உத்தரவுபடி எனக்கும், நண்பர்களுக்கும் விமான டிக்கெட் எடுத்து தயாராக வைத்திருந்தார் உதவியாளர் மாணிக்கம். மருத்துவமனையில் இருந்த போதும், மற்றவருக்கு உதவிட எப்போதும் அவர் தயங்கியதில்லை.
வாய்விட்டு சிரித்த எம்.ஜி.ஆர்.,
ஒரு வாரப்பத்திரிகையில், 'இனி நான் உங்களுக்காக' என்ற தலைப்பில் கட்டுரை எழுதும்படி
தெரிவித்தனர். நானும் சம்மதித்தேன். பத்திரிகை நிர்வாகத்தினர், 'எம்.ஜி.ஆர்., அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு, எழுதுவதை நிறுத்தும்படி கூறினால் எழுதுவதை நிறுத்தக்கூடாது' என்றனர்.''எம்.ஜி.ஆர்., அப்படி கூற மாட்டார். சினிமா எம்.ஜி.ஆரை பற்றி எழுதுவேன். அரசியல் எம்.ஜி.ஆரை பற்றி எழுத மாட்டேன்,'' என்றேன். பத்திரிகை நிர்வாகமும் ஒப்புக் கொண்டது. அதன்படி தொடர் எழுத ஆரம்பித்தேன்.
இதற்கிடையில், நான் தி.மு.க.,வில் சேரப் போவதாக வதந்தி கிளப்பினர். அமெரிக்காவில் இருந்து திரும்பிய எம்.ஜி.ஆர்., நான் எழுதுவதை தொடர்ந்து படிப்பதாக கூறி உற்சாகமூட்டினார். யார் எதை
கூறினாலும், அதை நம்பாமல் தனக்கு தோன்றியதை மட்டுமே செய்பவர் எம்.ஜி.ஆர்., என நிரூபித்து காட்டினார்.
'துாறல் நின்னு போச்சு' படத்தில் நம்பியார், 'மன்னாதி மன்னனையே பார்த்தவன் நான். அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்' என பாடுவது போல காட்சி இடம் பெற்றிருந்தது. இதை கேட்டு சினிமாத்துறையினர், 'எம்.ஜி.ஆர். கோபிப்பார்' என கதை
கட்டினர். ஆனாலும் பிரிவியூ காட்சி பார்த்து விட்டு, அவர் சிரித்த சிரிப்பு இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. இன்றைக்கும் அவர் இல்லை என எண்ணமே இல்லை. அந்தளவுக்கு மக்கள் மனங்களில் மன்னாதி மன்னனாக என்றைக்கும் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.
- கே.பாக்யராஜ்,திரைப்பட இயக்குனர், நடிகர்044 - 4308 1207.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement