Advertisement

உலகம் முழுவதையும் சொந்தமாக்க கற்றுக்கொள்

பத்தொன்பதாம் நுாற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய ஆன்மிகப் பேரொளிகளுள் ஒருவர் குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். இந்திய இளைஞர்களுக்கு முன்னோடியாக சுவாமி விவேகானந்தரை ஆடவர் உலகிற்கு அளித்த குருதேவர், பெண்மையின் குறிக்கோள் வடிவமாக அன்னை சாரதாமணியை மகளிர் உலகிற்கு வழங்கினார். சாரதாமணி, ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பத்தினித் தெய்வமும், முதல் சிஷ்யையும், அவரது குருபீடத்தில் அமர்ந்த அன்னையாரும் ஆவார்.சாரதா தேவியின் பிறப்பு பற்றி சுவாமி விவேகானந்தர், “அன்னை சாரதா தேவியின் வாழ்க்கையின் உட்பொருளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. போகப் போகத்தான் புரிந்து கொள்வீர்கள். சக்தியின்றி உலகிற்கு விடிவு இல்லை. எல்லா நாடுகளை விடவும் நம்நாடு ஏன் பின்தங்கியிருக்கிறது? ஏன் பலவீனமாக உள்ளது? ஏனெனில் சக்தியை நாம் மதிக்காததால்தான். அந்த அற்புத சக்தியை மீண்டும் மலரச் செய்வதற்கே அன்னை பிறந்துள்ளார்” என குறிப்பிட்டார். அன்னை பராசக்தியின் வடிவம் ஸ்ரீ ராமகிருஷ்ணர், சிறந்த பயிற்சியின் வாயிலாக அன்னையை உண்மையான மனைவியாக உருவாக்கினார். வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை அடைவதற்குக் கணவனுக்கு உறுதுணையாக இருப்பதுடன், அந்த லட்சியத்தைத் தானும் அடைய முயல்பவளே மனைவி எனப்படுகிறாள்.ஒரு நாள் குருதேவர் அவரிடம், “நீ என்னை மாயையில் கட்டுப்படுத்துவதற்காகத்தான் வந்துள்ளாயா?” என்று வினவினார்.
“நான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஆன்மிக வாழ்க்கையில் உங்களுக்குத் துணை செய்யவே வந்துள்ளேன்” என்று தயங்காது பதில் உரைத்தார் அன்னை.பிரம்மத்தை அறிந்து அதில் நிலைத்திருக்கிறோமா என்பதனை அறிந்து கொள்வதற்காக, தன்னையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கிக் கொண்டார்; ஆறு மாதம் தம் அறையிலேயே, தமது அருகிலேயே சாரதா தேவியை உறங்கும்படியாகக் கூறினார். இது இவர் தம்முடைய ஆன்மிக விழிப்புணர்ச்சிக்கு ஏற்படுத்திக் கொண்ட கடும் சோதனை. இதில் இருவருமே வெற்றி பெற்றனர். ராமகிருஷ்ணருக்கு உடல் உணர்வே அற்று மனம் ஆழ்ந்த சமாதியில் மூழ்கி விட்டது.“இந்தக் கடும் சோதனையில் வெற்றி பெறுவதற்கு ஒரு காரணம் சாரதையின் துாய்மையே. அவள் மட்டும் துாயவளாக இல்லாதிருந்தால், அவளுடைய துாண்டுதலால் நானும் புலனடக்கம் இழந்து நிலை தடுமாறியிருக்க மாட்டேன் என்று எப்படிக் கூற முடியும்?” என அன்னையின் மனத்துாய்மையை பாராட்டுகிறார் ராமகிருஷ்ணர்.
அன்னை ஒரு கருவி :ராமகிருஷ்ணர், சாரதா தேவியைத் தாம் வணங்கும் பராசக்தியின் வடிவமாகவே கண்டார். பூஜையின்போது, கங்கை நீரைத் தெளித்து புனிதப்படுத்திய பிறகு, அம்பிகை அமர்வதற்காக இடப்பட்டிருந்த ஆசனத்தில் சாரதா தேவியை அமருமாறு கூறினார். பராசக்தியின் மந்திரங்களைக் கூறி, “இந்த மங்கையின் உடலையும் உள்ளத்தையும் புனிதப்படுத்து. இவளது உடலில் உன்னை வெளிப்படுத்து” என்று தேவியை வேண்டினார். பூஜையின் முடிவில், அதுவரையில் தாம் பெற்றிருந்த தவவலிமை அனைத்தையும் அன்னையிடம் ஒப்புவித்தார். இதன் மூலம் தனது தெய்வீகப் பணியைத் தொடர, அன்னையை ஒரு கருவியாக்கினார்.மூன்று வெளிப்பாடுகள் :அன்னையின் வாழ்வில் மூன்று முக்கியமான வெளிப்பாடுகளை காணலாம்.1. அன்னையின் பிரார்த்தனை வாழ்வு. 2. அவரது குருநிலை. 3. அவருடைய தாய்மையின் பொலிவு.ஒரு முறை குருதேவர், அன்னையிடம் ஏதோ ஆலோசனை கேட்கிறார். “சற்றுப் பொறுங்கள்… கொஞ்சம் நேரம் கழித்துச் சொல்கிறேன்” என்கிறார் அன்னை.“ஏன் இப்போது சொல்ல முடியாதா? யாருடன் கலந்து ஆலோசிக்கப் போகிறாய்?” என வினவுகிறார் குருதேவர்.“மன்னிக்க வேண்டும். நான் கொஞ்சம் யோசித்து விட்டு அது பற்றி உங்களிடம் பேசுகிறேன்” என்று கூறி விட்டு கோயில் நோக்கி நடந்து வருகிறார்.
அங்கே தேவியிடம், “அம்மா! நான் என்ன சொல்ல வேண்டும்? அதை அருள்கூர்ந்து எனக்குத் தெரியப்படுத்து!” என வேண்டுகிறார். இந்தப் பிரார்த்தனைக்குக் கிடைத்த விடையைத்தான் குருதேவரிடம் விளக்கமாகக் கூறினார். இது அன்னையின் பிரார்த்தனை வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இரவில் அதிகம் சாப்பிடலாமா? இரவில் அதிகம் சாப்பிடுவது சாதனை வாழ்வுக்குத் தடையாக அமையும் என்பது குருதேவரின் எண்ணம். அதனால் இரவு இத்தனை சப்பாத்திதான் சாப்பிட வேண்டும் என்று வரையறை செய்திருந்தார். ஓர் இளைஞர் அதிகமாகச் சாப்பிட்டார் என்பதை அறிந்த குருதேவர். அன்னையிடம், “இப்படி அளவுக்கு மீறி உண்ணக் கொடுப்பது அவர்களின் ஆன்ம நலனைக் கெடுக்கும்...தெரியுமா?” என்று வினவுகிறார்.
“இரண்டு சப்பாத்தி அதிகம் சாப்பிட்டான்... அதற்காக ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்? அவர்கள் சாப்பிடுவதை நீங்கள் பெரிதுபடுத்த வேண்டாம்; அவர்களின் நலனை நான் பார்த்துக் கொள்கிறேன்!” -- இது அன்னையின் குருநிலைக்கு சான்று.1886-ல் அன்னையின் 33-ம் வயதில் ராமகிருஷ்ணர் மறைந்தார். குருதேவரின் மறைவிற்குப் பிறகு புத்த கயைக்குத் தீர்த்த யாத்திரை சென்ற அன்னை, அங்கு வசதிகளுடன் கூடிய மடம் ஒன்றைக் கண்டார். குருதேவரின் சீடர்களுக்கும் இப்படி ஒரு மடம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து, பிரார்த்தனை செய்தார். அன்னையின் அந்த பிரார்த்தனைதான் இன்றைய ராமகிருஷ்ண மடங்களுக்கு வித்தாக அமைந்தது. இதனால் அன்னை 'சங்க ஜனனி' (ராமகிருஷ்ண சங்கத்தின் தாய்) என்று அழைக்கப்படுகிறார்.
பிறர் குற்றங்களைப் பார்க்காதே! அன்னையின் மறைவுக்கு ஐந்து நாட்களுக்கு முன், பக்தை ஒருவர் பார்க்க வந்திருந்திருந்தார். கதவருகில் உட்கார்ந்திருந்த அவரைக் கண் பார்வையால் அருகில் வருமாறு அழைத்தார் அன்னை. அப்பெண், அன்னையின் காலடியில் விழுந்து 'அம்மா! எங்கள் கதி என்ன?' என்று தேம்பி அழுதார்.
அன்னை மெல்லிய குரலில், “மகளே, ஒன்று சொல்கிறேன்… உனக்கு அமைதி வேண்டுமானால், பிறர் குற்றங்களைப் பார்க்காதே, அதற்குப் பதிலாக உன் குறைகளைப்பார்! உலகம் முழுவதையுமே உனது சொந்தமாக்கக் கற்றுக்கொள்!” என்றார்.சேவை மயமாகவே வாழ்ந்த அன்னை, 1920 ஜூலை 2௦ல் -மறைந்தார். அனைவரையும் அன்பினால் அணைத்த, அன்பையே போதித்து, அன்பு மயமாகவே வாழ்ந்த அன்னை சாரதாதேவி மறைந்த பிறகு, அவரது திருவுடல் எரியூட்டப்பட்ட இடத்தில் (பேலுார் மடம்) அவருக்காகக் கோயில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.- முனைவர் நிர்மலா மோகன்,தகைசால் பேராசிரியர்,காந்திகிராம பல்கலைக்கழகம்,காந்திகிராமம், 94436 75931.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement