Advertisement

செப்புப்பட்டயம் செப்பும் செய்தி

ஆண்டு : 1799, மாதம்: அக்டோபர், தேதி : 16, இடம்: கயத்தாறு. கயத்தாறு- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்க முடியாத ஊர். இந்த ஊர் சாலையோர புளிய மரத்திற்கு பேசும் சக்தி இருந்தால், கண்ணீர் மல்கச் சோகமான ஒரு கதையைச் சொல்லி அழும்.
ஒரு பொய்யான, கண்துடைப்பான விசாரணை நடத்தி பாஞ்சாலங் குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை, கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவ மேஜர் ஜான் அலெக்சாண்டர் பானர்மேன் என்ற அதிகாரி துாக்கிலிடக் கட்டளையிட்டார்.நெல்லைச் சீமையில் உள்ள மற்ற பாளையக்காரர்கள் அனைவருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனி மீது அச்சம் ஏற்பட வேண்டும் என்று நினைத்து அவர்களையும், கட்டபொம்மனைத் துாக்கிலிடும் போது கூடவே இருக்க வேண்டுமென்று மேஜர் பானர்மேன் கட்டளையிட்டார். இதனால் நாகலாபுரம், எட்டயபுரம், ஏழாயிரம் பண்ணை கோலார்பட்டி, காடல்குடி, சிவகிரி, குளத்துார் போன்ற பாளையக்காரர்கள் அனைவரும் அங்கு வந்திருந்தனர்.
திகைக்காத கட்டபொம்மன் புதுக்கோட்டை அருகில் காழியூர் காட்டில், கைது செய்யப்பட்டு கயத்தாறுக்கு விசாரணைக்காக கொண்டு வரப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனை, போலி விசாரணை செய்த மேஜர் பானர்மேன் 'துாக்கு தண்டனை' என்று அறிவித்தவுடன்,
கட்டபொம்மன் அதிர்ச்சியும் கலக்கமும் அடைவார் என்று நினைத்திருக்க வேண்டும். ஆனால், துாக்குமேடைக்கு கட்டபொம்மன் செல்லும் போது, அவருக்கு வலமாகவும், இடமாகவும் அமர்ந்து இருந்த பாளையக்காரர்களை பார்த்து 'ப்பூ... கிடக்கிறார்கள்' என்று அலட்சியமாக பார்த்துக் கொண்டு, உறுதியாக நடந்து துாக்கு கயிற்றைத் தானே தன் கழுத்தில் அணிந்து கொண்டு உயிர் நீத்தார்.
கலங்காமல் புளியமரத்தை நெருங்கிய கட்ட பொம்மனைப் பார்த்து, 'இப்படியும் ஒரு வீரன்' என்ற எண்ணிய மேஜர் பானர்மேன் அன்றே வீரபாண்டிய கட்ட பொம்மனைப் பற்றியும் அவன் வீரத்தை பற்றியும் குறிப்பெழுதி மேலதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார். அக்காலத்தில் கயத்தாறு வழியாக பயணம் செய்யும் மக்கள், கட்டபொம்மன் துாக்கிலிட்ட இடம் வந்தவுடன் அந்த இடத்தில் ஒரு சிறு கல்லை எடுத்து கட்டபொம்மனை நினைத்து வணங்கி அவ்விடத்தில் இடுவது வழக்கம். காலப்போக்கில் இப்பழக்கம் மறைந்து விட்டது.
செப்புப் பட்டயம்
கட்ட பொம்மனைத் துாக்கிலிட்ட பின், பானர்மேன் மனதில் சிறிது பதட்டம் நிலவியிருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு பாளையக்காரர், அவரைப் போன்ற மற்ற பாளையக்காரர்கள் முன்னிலையில் துாக்கிலிடப்பட்டதால், ஒரு வேகத்தில் எல்லா பாளையக்காரர்களும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயேப் படையை எதிர்த்தால் எப்படி சமாளிப்பது?
அதே நேரத்தில் பாளையக்காரர்களுக்கும், அங்குள்ள மக்களுக்கும் ஆங்கிலேயர்கள் மேல் பயம் இருக்க வேண்டும் என்று பலவாறு தீர்மானித்த பானர்மேன், ஒரு செப்புப்
பட்டயம் தயாரித்தார். அந்தச் செப்புப் பட்டயத்தை ஒரு கல் துாணில் பதிக்கச் செய்து பொது மக்கள் பார்க்குமிடத்தில் தன் பெயருடன் நிறுவ வேண்டும் என, எல்லா பாளையக்காரர்களுக்கும் அப்பட்டயத்தை அனுப்பி வைத்தார்.
செய்தி என்ன
அச் செப்புப் பட்டயத்தில் 'பாளையக்காரர்கள் அனைவரும் தங்கள் கோட்டை, கொத்தளங்களை உடனே இடித்துவிட வேண்டும். அங்குள்ள காவல்காரர்கள், சேர்வைக்காரர்கள் கைவசம் எந்த விதமான வெடிகள், ஆயுதங்கள் வைத்திருந்தாலும் சரி, ஆங்கில அரசால் நியமிக்கப்பட்ட பணியாளர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அப்படிச் செய்யத் தவறுகிறவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்' என்று எழுதி அதன் கீழ் ஐ.ஏ.பேனர்மேன் என்ற பெயரையும் பொறித்து வைத்தார்.
இப்படிப்பட்ட அரசாங்க முடிவுகளை அந்தக்காலத்தில் முறைப்படி 'தண்டோரா' அல்லது 'டம் டம்' போட்டுத் தான் அறிவிப்பார்கள். ஆனால், பானர்மேன் இந்த பட்டயம் நிலையாக இருந்தால் தான் மக்கள் மத்தியில் ஒரு பயம் இருக்கும் என்ற இந்த நடவடிக்கை எடுத்தார் போல! அவைகளில் ஒரு பட்டயம், எட்டயபுரம் சிவன் கோயிலின் கீழ்ப்புறத்து மதிலின், தென் பாகத்தில் கிழக்கு முகமாக இன்றும் காணப்படுகிறது.
இது போன்று இன்னொரு பட்டயம் கள ஆய்வின் மூலம், விருதுநகர் அருகில் உள்ள 'பாவாலி' என்ற ஊரில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊர் எந்த ஜமீனைச் சேர்ந்தது என்று விபரம் கேட்ட போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒரு ஜமீனின் தலைக் கிராமமாக இருந்திருக்க வேண்டும். இரண்டு பட்டயங்களும் ஒரே மாதிரி எந்த வித்தியாசமுமில்லாமல் உள்ளது.
பானர்மேன் யார்? மிகத் துணிச்சலுடன் உள்ளூர் பாளையக்காரர் வீரபாண்டிய கட்ட பொம்மனை மற்ற பாளையக்காரர்கள் முன்னிலையில் துாக்கிலிட்ட அதே நேரத்தில், யாரும் கிழக்கிந்திய கம்பெனி அரசுக்கு வரி கொடுக்காமல் தொல்லை கொடுத்தால் இது தான் கதி எனக்காட்ட, ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தியவர் பானர்மேன். இவர், கிழக்கிந்திய கம்பெனியரோடு 1777ல் சிப்பாயாகச் சென்னை வந்தவர்.
இவர் தந்தை டேவிட் பானர்மேன், பாதிரியார். பானர்மேன் சிப்பாயாக நெல்லைச் சீமையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, ராணுவ அதிகாரியாக பணியாற்றிய ஜேம்ஸ் வெஸ்ட் என்பவரின் மகளை திருமணம் செய்தார். பின் டச்சுக்காரர்
களிடமிருந்து கொழும்பு நகரை விடுவிக்க ஆங்கில படை வீரர்களுக்குத் தலைமை தாங்கி சென்று டச்சுகாரர்களை முறியடித்தார்.
பாஞ்சைப் போருக்கு நியமனம் பானர்மேன் தெற்குச் சீமையில் பல காலம் பதவியில் இருந்தார். எனவே, அங்குள்ள பாளையக்காரர்களின் பழக்கவழக்கம், ஊர்களுக்கு செல்லும் பாதை, நீர் நிலைகள், காட்டாறு பாயும் இடங்கள், ஓடைகள் அனைத்தையும் இவர் அறிந்திருந்தார். மேலும், கொழும்பில் டச்சுக்காரர்களுடன் போரிட்டு வென்ற அனுபவம், இவையெல்லாம் பானர்மேன் பாஞ்சாலங்குறிச்சி தாக்குதலுக்குச் சரியான தளபதி என்று
கிழக்கந்திய கம்பெனி முடிவெடுத்திருக்க வேண்டும். அதனால் பாஞ்சாலங்குறிச்சி போருக்கு பானர்மேனைத் தேர்தெடுத்திருக்கலாம்.
1800ம் ஆண்டு இங்கிலாந்து சென்று பாராளுமன்றத்தில் எப்படியோ உறுப்பினராகிவிட்டார். ஆனால், அவரால் திறமையான அரசியல்வாதியாக முடியவில்லை. வீரன் வீரபாண்டிய கட்டபொம்மனை, கயத்தாறில் துாக்கிலிட்டு பாளையக்காரர்களின் கோட்டை, கொத்தளங்களை பீரங்கியால் உடைத்தெறிந்த சர்வாதிகாரி அவர்.
பானர்மேன், பினாங்கில் இருக்கும் போது காலரா நோய் தாக்கியது. வீரம் செறிந்த தமிழர்களை மண்ணோடு மண்ணாக்கிய பானர்மேனால், காலராக் கிருமிகளை எதிர்த்துப் போரிட முடியவில்லை போலும். 1819ல் இறந்தார். இவருடைய கல்லறை இன்றும் பினாங்கில் உள்ளது. பானர்மேனைப் பற்றி அனைத்துச் செய்திகளையும்
ஆங்கில அரசு தேதி, ஆண்டு என துல்லியமாகப் பதிவு செய்துள்ளது. ஆனால், வீரபாண்டியக் கட்டபொம்மன் துாக்கிலிடப்பட்ட பின் அந்த வீரனின் உடல் என்னவாயிற்று? எரிக்கப்பட்டதா? புதைக்கப்பட்டதா? எங்கு நடந்தது என்ற அதிகாரப்பூர்வ செய்திகள் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. இது பற்றி யாருக்காவது தெரிந்தால் கூறலாமே. தியாகங்கள் வரலாறாகலாம், யூகங்கள் வரலாறாகாது.-முனைவர். கே.கருணாகரப் பாண்டியன்,வரலாற்று ஆய்வாளர்மதுரை. 98421 64097

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement