Advertisement

இசையே மருந்தாகும்!

கவின் கலைகளுள் 'இசை' ஆற்றல் மிகுந்தது. மனிதனை வயப்படுத்துவது, விலங்குகளை இசைய வைப்பது, செடி, மரங்களை வளர்க்க உதவுவது, ஊர்வனவற்றை ஈர்க்கும் நெறியுடையது என ஊடகமாக திகழ்வது இசை. மனிதனை பண்படுத்தி, மனநிலையை சீர்படுத்த உதவும் இசை மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதை, இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
'ஆறலைக் கள்வர் பணியிட அருளின்மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை'என்ற வரிகளில் திருட நினைக்கும் கொள்ளையர்களின் மனதை மாற்றியது, பண்ணின் இயல்பு (சங்கராபரண ராகம்) என அறியலாம்.இசை, உலகத் தொன்மை வாய்ந்தது. உண்ண, உடுக்க, உறங்க, பாராட்ட, தாலாட்ட, சீராட்ட என இறுதி மூச்சுக்குப் பிறகும் இசை பல்வேறு வகைகளிலும் மனித வாழ்க்கையோடு ஒன்றியுள்ளது. சமயக் குரவர்களும் இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர். தவிர பலவிதமான துன்பங்களை, நோய்களை இசையால் தீர்த்து வைத்துள்ளனர்.
தேவார மூவரில் முதல்வராக விளங்கும் திருஞானசம்பந்தர் தனது தேன்சுவைப் பதிகங்களால் நிகழ்த்திய அதிசயங்கள் பல. திருமருகல் என்னும் ஊர் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இங்கு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தன் தலைவனுடன் ஒருபெண் வந்திருந்தபோது, அந்த ஆண்மகனைப் பாம்பு தீண்டியது. ஆண்மகன் இறந்துவிட்டான். அவள், சம்பந்தரிடம் முறையிட, இந்தளப் பண்ணில் அமைந்த பதிகத்தைப் பாடி உயிர்த்தெழச் செய்து
அப்பெண்ணின் துயரைத் துடைத்தார்.கொடிமாடச் செங்குன்றுாரில், குளிர் காய்ச்சல் தோன்றி அனைவரையும் வாட்டியது. நோயை குணமாக்குமாறு ஞானசம்பந்தரிடம் பொதுமக்கள் வேண்டினர். அவர்,
'அவ்வினைக்கு இவ்வினையாம்'என்று வியாழக்குறிஞ்சிப் பண்ணில் பதிகம் பாடி நோயைத் தீர்த்தார்.பாண்டிய நாட்டை ஆண்ட மன்னனுக்குக் ஜூரம் ஏற்பட்டது. சம்பந்தர், காந்தாரப் பண்ணில் அமைந்த,'மந்திர மாவது நீறு; வானவர் மேலது நீறு'என்னும் பதிகத்தை பாடினார். நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.
பதிகம் பாடி... திருமயிலையில் சிவநேசர் என்பவர் தவமிருந்து பெற்ற மகள் பூம்பாவையைத் திருஞானசம்பந்தருக்கு மணமுடிக்க விரும்பினார். ஒருநாள் பூம்பாவை, நந்தவனத்திற்குப் பூப்பறிக்க சென்றார். அப்போது பாம்பு தீண்டி இறந்தாள். தந்தை அவள் சாம்பலைக் குடத்திலிட்டு மூடிப் பாதுகாத்தார். பல நாட்கள் கழித்துத் திருமயிலைக்கு வந்த சம்பந்தர்.
'மட்டிட்ட புன்னையம கானல் மடமயிலை'எனும் பதிகத்தை பாடிப் பூம்பாவையை உயிர்த்தெழுப்பினார் என்பது புராணம்.நாவுக்கரசர் சைவத்தைத் தழுவியதால் கோபமுற்ற மன்னன் அவரைப் பலவாறு துன்புறுத்தினான். யானையை விட்டு மிதிக்கச் செய்தான். கல்லோடு பிணைத்துக் கடலில் இட்டான். கொடிய நஞ்சைப் பாலில் கலந்து பருகச் செய்தான். அப்போது,
'நாதனடி யார்க்கு நஞ்சும் அமுதமாம்'எனக் கொல்லிப் பண்ணிலமைந்த பதிகம் பாடி அந்த நஞ்சை அருந்தினார். நஞ்சு அவரை ஒன்றும் செய்யவில்லை.
பஞ்சமரபு கூறும் கைவைத்தியம்: மனித உடல் ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, தோல், மூளை என ஏழு வகையான பொருட்களால் இயங்குகின்றது. இவையும் குரல்(ச), துத்தம்(ரி), கைக்கிளை(க), உழை(ம), இளி(ப), விளரி(த), தாரம்(நி) எனும் ஏழு ஸ்வரங்களால் அமைந்துள்ளது. குரலைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது இசைவாணர்களின் இன்றியமையாத பணியாகும். அதற்கு வழிகாட்டும் கலை நுால்களுள் ஒன்று பஞ்சமரபு.
'குரலடு மிடற்றில் துத்தம் நாவினில்கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே'
என தலை, தொண்டை, நெஞ்சு, மூக்கு, பல், நாக்கு, அண்ணம் என்று ஏழு இடங்களில் இசை தோன்றி வெளிப்படுகின்றது. எனவே, இவ்வுறுப்புகளை இசை வல்லுநர்கள் நன்முறையில் பாதுகாக்க வேண்டும்.
திப்பிலி, தேன், மிளகு, சுக்கு, பசும்பால், காடையின் சாறு ஆகியவற்றை வெந்நீரில் வெண்ணெய்யோடு கலந்து குடிக்க, தொண்டை கரகரப்பின்றி இருக்கும்.
அதிகநேரம் கண்விழித்தல், அதிகநேரம் உறங்குதல் இவையும்கூட குரலைப் பாதிக்கக் கூடிய செயல்களே.
இசை இன்பம்: நோய் வாய்ப்பட்டவர்கள் நல்ல இசையை கேட்கும்பொழுது, துன்பத்தை மறக்க முடிகிறது. தொழிற்சாலைகளில் இசையை மெலிதாக ஒலிக்கும்போது, வேலை களைப்பை போக்குகிறது.
வயிற்றில் இருக்கும் சிசு, பசு, பாம்பு ஆகியன இசைக்கு பணியும் தன்மையுடையது என்பார்கள்.சில குறிப்பிட்ட ராகங்களை கேட்டால் சில நோய்கள் குணமாகும் என்பது மருத்துவ ரீதியாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இன்று உலகின் பல நாடுகளும் இசையால், மனிதனின் நோயைத் தீர்க்கலாம் என்று கண்டுபிடித்துள்ளன. இசை மருத்துவத்திற்கான முதல் சங்கம் 1950ல் அமெரிக்காவில் நேஷனல் அசோசியேஷன் பார் மியூசிக் தெரபி (என்.ஏ.எம்.டி.) என்று அமைக்கப்பட்டது.
முறையான இசைப்பயிற்சி பெற்றவரால் மட்டுமே, இசையால் நோயிலிருந்து விடுபட முடியும் என்பதல்ல. கர்நாடக இசை, நாட்டுப்புற இசை, மெல்லிசை, பாப் இசை, ஜாஸ் இசை, மேற்கத்திய இசை என்று நோயாளிகள் ஏதோ ஒரு இசையை விரும்பும் தன்மையுடையவராகத்தான் இருப்பர்.
அவர்கள் இசைக்கேட்டால் மனம் அமைதியடையும். மனநிலை பாதிக்கப்பட்டவர், போதைப் பொருள்களுக்கு அடிமையானவர், நரம்பியல் கோளாறு உடையவர்கள் இசை மருத்துவத்தால் குணப்படுத்தப்படுகின்றனர்.இசை, பண்பாட்டின் சிகரம்; நம் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்தது. பொழுதுபோக்கு மட்டுமல்ல; இசை நல்ல மருந்து. ஆனால் பக்க விளைவை ஏற்படுத்தாத பக்குவமான மருந்து. இசையைக் கேட்டு அதனை உட்கொண்டவரால்
மட்டுமே அதன் மருத்துவக் குணத்தை உணரமுடியும்.இசையும் சுற்றுச் சூழலும்: நம்மைச் சுற்றி சத்தம் நிறைந்து உள்ளது. நம்மை மயக்கும் இசையே, இப்போது எல்லாம் பல நேரங்களில் நம்மை கொல்லும்
சத்தமாக மாறி வருகிறது. விரும்பி நாம் கேட்கும் இசை குறைந்த ஒலி அளவுடன் இருந்தால், காதுக்கும் மனதிற்கும் இதமாக இருக்கும். ஆனால் அதே இசை, அதிகப்படியான சப்தத்தால் நமது காதை செவிடாக்கி விடுகிறது. பொது இடங்களிலும், பேருந்துகளிலும் நாம் அந்த அவஸ்தையை
அனுபவிக்கிறோம்.பொதுவாக இதுபற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிகக் குறைவு. இசை தானே கேட்கின்றோம் என்று நினைக்கின்றனர்.
'அளவு' என்பது முக்கியமான சொல்.அளவுக்கு அதிகமாக நம்மால் சாப்பிட முடியுமா? அளவுக்கு அதிகமாக எடையை நம்மால் தூக்க முடியுமா? - முடியாது.
ஆனால், நமக்கு பிடித்த ஒரு பாடலையோ அல்லது இசையையோ அளவுக்கு அதிகமான சத்தத்துடன் நாம் கேட்கிறோம். இது நமது உள்ளுணர்வு, உடல்நிலை
ஆகியவற்றை பாதிக்கிறது. குறிப்பாக நோயாளிகள் அதிக சத்தத்தால் பாதிப்படைவர்.சுற்றுச்சூழல் விழிப்படைந்து இருக்கும் நிலையில், நாம் நம்மை சுற்றி வரும் இசை அல்லது சத்தத்தையும் கவனிக்க வேண்டும். அதன் அளவு குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும். அதிக சத்தம் ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணரவேண்டும்.
-முனைவர் தி.சுரேஷ் சிவன்தலைமை ஆசிரியர்,அரசு இசைப் பள்ளி, ராமநாதபுரம்94439 30540

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement