Advertisement

மாற்று ஆற்றலே மகத்தான வளம்:இன்று தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம்

பூமி இயக்கத்திற்கு ஆற்றலே பிரதானமாக இருக்கிறது. மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் தங்களின் இருப்பிற்காக, வாழ்விற்காக, உணவுக்காக தங்களின் உழைப்பு ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. ஆனால், மனிதர்கள் மட்டும்தான் ஆற்றல்களை வசதிக்காவும், ஆடம்பரத்திற்காகவும் வரைமுறையின்றிப் பயன்படுத்துகின்றனர்.
கட்டுக்கடங்காத வகையில் செல்லும் இந்த நுகர்வு வெறியே, இயற்கையைச் சுரண்டி வாழும் மோசமான வாழ்க்கை முறைக்கு வித்திடுகிறது. மண்ணுக்கு அடியிலிருந்து பெறப்படும் புதைபடிம எரிபொருள் இன்னும் சில ஆண்டுகளில் தீர்ந்து விடக்கூடும் என்ற நிலையில், மாற்று ஆற்றல் குறித்த சிந்தனையை உலக நாடுகள் முடுக்கி விடத்துவங்கியிருக்கின்றன.
மின் பற்றாக்குறை சிக்கல் :மின்சாரப் பற்றாக்குறை ஒட்டுமொத்த இந்தியாவிலும் தலைவிரித்தாடுகிறது. தொழில்வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கம், வரைமுறையற்ற நுகர்வு வெறி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அதிகபட்ச மின்தேவைக்கும், மின் பற்றாக்குறைக்கும் வித்திடுகின்றன. இதனால் சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சியில், மாற்றங்களில் தொடர்ந்து ஊசலாட்டம் நிகழ்வதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
மின் உற்பத்தி எப்படி :இந்திய அரசால் 2012 ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின்படி இந்தியாவின் மொத்த மின் உற்பத்தித்திறன் 2,07,006.04 மெகாவாட். இதில் 41.53 விழுக்காடு மாநிலத்துறையிலும், 31.64 விழுக்காடு மத்திய அரசுத்துறையிலும், எஞ்சியுள்ளவை தனியார் துறைகளிலும் உள்ளன. மொத்த உற்பத்தித்திறனில் அனல்மின் நிலையங்களின் பங்கு 1,37,936.18 மெகாவாட்.
இதில் நிலக்கரியைப் பயன்படுத்தி 56.92 விழுக்காடு, அதாவது 1,17,833.38 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல்மின் நிலையங்களோ 18.98 விழுக்காடு மின்சாரத்தை (39,291.40 மெகாவாட்) உற்பத்தி செய்கின்றன. அணுமின்நிலையங்களின் பங்கு 2.30 விழுக்காடாகும். அதே நேரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் உற்பத்தித்திறன் 24,998.46 மெகாவாட் ஆகும். இது இந்தியாவின் மொத்த மின்உற்பத்தித்திறனில் 12.07 விழுக்காடு.
இந்தியாவில் மிகுதியாகக் கிடைக்கப் பெறும் ஆற்றல் மூலம், புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களில் நிறைந்து கிடைப்பதை உணர்ந்த அரசு, 1992ல் மரபுசாரா எரிசக்தி வளத்திற்கென்று தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்கியது. கடந்த 2006ல் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும், மாற்று ஆற்றல் அல்லது மரபுசாரா ஆற்றல்வளத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
மரபு சாரா ஆற்றல் வளம் :புதைபடிம எரிபொருள் ஆற்றல், மரக்கட்டைகள் அல்லது விறகு மூலம் கிடைக்கும் ஆற்றல், நீர்ஆற்றல், அணுஆற்றல் போன்றவற்றை மரபு சார் ஆற்றல்கள் என்கிறோம். சூரியஆற்றல், காற்றாலை ஆற்றல், கடல் அலை ஆற்றல், கடல்மட்ட ஆற்றல், புவிவெப்ப ஆற்றல், உயிரியல்வாயு ஆற்றல், உயிரியல் பொருண்மை ஆற்றல், உயிரியல் எரிபொருள் ஆற்றல் போன்றவை மரபுசாரா ஆற்றல்கள் என வழங்கப்படுகின்றன.
தனிநபர் நுகர்வு குறைவு :தனிநபர் நுகரும் எரிஆற்றலின்படி அமெரிக்கா 7,843 கிலோ, ஜப்பான் 4,053 கிலோ, இந்தோனேசியா 753 கிலோ, எகிப்தில் 675 கிலோவாகவும் உள்ளது.இந்த நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவிலுள்ள தனிநபர் சராசரி நுகர்வு மிகவும் குறைவு (520 கிலோ). அமெரிக்க நுகர்வோடு ஒப்பிடும் போது வெறும் 6.6 விழுக்காடே என்ற போதும்.
மக்கள்தொகைப் பெருக்கம், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், மேம்பாடு காரணமாக இந்நுகர்வின் விழுக்காடு மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். நிலக்கரி, கச்சா எண்ணெய், பழுப்பு நிலக்கரி, இயற்கைவாயு, நீர்மின்சக்தி, அணுமின்சக்தி, காற்றாலை வாயிலாக பெறப்படும் மின்சக்தி உள்ளிட்ட மொத்த மின்தேவை 2001ல் 281மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால் 2012ல் இது 546 மில்லியன் டன்னாக உயர்ந்தது.
தீர்க்கமான முடிவு தேவை :'இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் ஒரு சதவீதம் இடத்தில் சூரியஆற்றல் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் பகல் நேரத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். சுற்றுச்சூழல் சீர்கேடு, உலகம் வெப்பமயமாதல் ஆகியவை நம்முன் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளன. பூமியை சுற்றுச்சூழல் மாசு அடைவதில் இருந்து காப்பாற்றுவதற்கு பிற நாடுகளை வழிநடத்தும் விதமாக இந்தியா செயல்பட வேண்டும்.
இதற்காக நாம் பரஸ்பரம் விவாதம் செய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை ஒருங்கிணைத்து சூரிய மின்ஆற்றலைப் பயன்படுத்துவது குறித்து செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்' என அமெரிக்க தேசிய விண்வெளி சங்கத்தின் தலைவர் மார்க்ஹோப் கின்சும், மறைந்த அப்துல்கலாமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் ஒட்டு மொத்த மின் தேவை சராசரியாக 18 டெராவாட். சரிவர திட்டமிட்டு காற்றாலை சுழலிகளை நிறுவினால் இந்தத் தேவையை விடஅதிகபட்சம் நான்கு மடங்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.தமிழகம் மிக அதிக அளவு காற்றாலை மின் உற்பத்தி செய்யும் மாநிலமாக உள்ளது. அதிக அளவிலான காற்றாலைகள் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில்தான் நிறுவப்பட்டுள்ளன.
ஆற்றலை பொறுத்து வளர்ச்சி ஆற்றல் வளங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வாகக் கொண்டு செல்லும் அதே நேரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தும் வண்ணம் மேலும் விரைவான நடவடிக்கை மத்திய -மாநில அரசுகளிடமிருந்து தேவைப்படுகிறது. இக்கருத்தை வலியுறுத்தும் பொருட்டுதான் 2012 ஆண்டை ஐக்கிய நாடுகள் அவை வளம் குறையாத, நீடித்த, நிலையான ஆற்றல் ஆண்டாக அறிவித்தது.
இனி வருங்காலங்களில் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாடு பயன்படுத்தும் ஆற்றலைப் பொறுத்தே உள்ளது. குறிப்பாக மரபுசாரா ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தி, மக்களின் எரிஆற்றல் தேவைகளை நிறைவேற்றுவதுடன், இயற்கை மீதான தனது ஈடுபாட்டை, நேசத்தை உணர்த்துவதில் இருந்து தான் ஒரு நாட்டின் தற்சார்புள்ள இறையாண்மைக் கனவு நனவாகும். மரபுசாரா ஆற்றல் வளங்களில் இருந்து தனது எரிஆற்றலின் தேவையை முழுமையாக நிறைவேற்றி உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாய் இந்தியா திகழ வேண்டும்.
-ஆர்.சிவக்குமார், சமூக ஆர்வலர்,மதுரை. 99948 27177.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement