Advertisement

மனித உரிமை மீறலுக்கு எதிராக ஒலிக்குமா உரிமைக்குரல்? : இன்று சர்வதேச மனித உரிமை நாள்

இன்று சர்வதேச மனித உரிமை நாள். மனித உரிமை மீறல்கள் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்த போதிலும் கூட, தினமும் எங்காவது ஒரு பகுதியில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டு உள்ளன. அதற்கு எதிரான உரிமைக்
குரல்களும் ஒலித்து கொண்டு உள்ளன. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையால் 1948 டிச., 10ல் ஏற்று கொள்ளப்பட்டது. அதை தான் உலகம் இன்று கொண்டாடுகிறது.
இந்தியாவில் மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993 ல் இயற்றப்பட்டது. ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகளாக சட்டத்தின் முன் சமத்துவம், ஜாதி வேற்றுமை செய்ய தடை, தீண்டாமை ஒழிப்பு, கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, அமைதியாக ஆயுதங்களின்றி கூடும் உரிமை, சங்கங்கள் அமைக்க உரிமை, நாட்டில் எங்கும் சுதந்திரமாக சென்று வரும் உரிமை, வசிக்க மற்றும் தொழில் செய்ய உரிமை, 6-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கல்வி பெறும் உரிமை, ஒரே குற்றத்திற்காக இரு முறை தண்டிக்கப்படக் கூடாது, கைதானவர்களை 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன் ஆஜர்படுத்தும் உரிமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உரிமை போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.
உயிர்வாழும் உரிமை
உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் ஒவ்வொரு நாளும் 'மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்பதற்கு விரிவான பொருள் தரும் தீர்ப்புகளின் மூலம் மக்களின் உரிமைகளை பேணி பாதுகாத்து வருகின்றன. இலவசமாக சட்ட உதவி பெறும் உரிமை, சுற்றுச்சூழல் தொடர்பான உரிமை, வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு, சிகிச்சை பெறும் உரிமை, பணிபுரியும் பெற்றோர் இறந்தால் கருணை அடிப்படையில் பணி நியமன உரிமை என நீதிமன்றங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் 21ன் பிரிவில் குறிப்பிடப்பட்ட உயிர் வாழும் உரிமை என்பதற்கு விரிவான உத்தரவுகளை வழங்குகின்றன.
தங்கள் சொந்த நலன்களை பாதுகாக்க வசதி படைத்த செல்வந்தர்களே நீதிமன்றங்களை அணுக முடியும் என்ற நிலை தற்போது மாறி, ஏழை, எளிய, பாமர மக்களும் நீதிமன்றம் என்ற கோயிலை அடையும் வாயிலின் கதவுகளை, பொது நல மனு என்ற சாவியால் திறக்க முடியும் என்ற நிலையுள்ளது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு கீழமை நீதிமன்றங்களிலும் சட்ட உதவிகள் வழங்கும் சட்டப் பணிகள் அணைக்
குழுக்கள் செயல்படுகின்றன. இவற்றில், ஏராளமான வழக்கறிஞர்கள் இதன் வாயிலாக ஏழைகளுக்கு உதவுகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளும் கோடிக்கணக்கான ரூபாயை ஒவ்வொரு ஆண்டும் வழங்குகின்றன. மனித உரிமைகளை பாதுகாக்க போலீஸ் துறையும், பாதுகாப்பு படைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவர்களே சில நேரங்களில் சட்டத்தை மீறி பாதிப்பு ஏற்படுத்தினால் நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை வழங்குகின்றன. மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குகின்றன.
பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தற்போது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பாதிக்கப்பட்டோர் நிவாரண திட்டம் என்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி மரணமடைந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டோர், அரசு அதிகாரிகளின் அஜாக்கிரதையால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தொகை வழங்க இத்திட்டம் வழி செய்கிறது. இதற்காக பாதிக்கப்பட்டோர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அல்லது மாவட்ட கண்காணிப்பாளரை அணுகலாம்.
மதுரை அரசு மருத்துவமனையில் மீனாட்சி என்பவரின் குழந்தை திருடு போனதை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மாயமான கண்டுபிடிக்கப்படாத 13 குழந்தைகளின் பெற்றோருக்கு, ரூ.3 லட்சம் வரை இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. துாத்துக்குடியில் மணிமேகலை என்ற புனிதா கொலையானதாக கூறப்பட்ட வழக்கு விசாரணை,
நீதிமன்றத்திற்கு வந்த பின்பு உயிருடன் வந்தார். இவ்வழக்கில், கொலை குற்றவாளிகள் என பொய்யாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, இழப்பீடு வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பறிக்கப்பட முடியாத உரிமை இந்திய அரசியலமைப்பு சட்டத்தால், உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் எந்த அரசாலும் பறிக்கப்பட முடியாதவை. அடிப்படை உரிமைகளை, ஒரு குடிமகனே நினைத்தாலும் துறக்க முடியாது. நாட்டின் பொருளாதார நிலை எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், அதை காட்டி மனித உரிமைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒத்திவைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசின் எந்தவொரு துறையை சேர்ந்த அலுவலராலோ, அரசின் பணியை செய்யும் அமைப்பாலோ, தனி நபர்களாலோ மீறப்படும் போது பாதிக்கப்படுபவரோ அல்லது பொது நலனின் அக்கறை கொண்டவர்களோ நீதிமன்றங்களை அணுகலாம். நீதிமன்றங்களை அணுகி வழக்கு தொடர்ந்து, நீதி பெற இயலாத நிலையில் உள்ளோரை பாதுகாக்கும் நோக்கத்துடன் 1993ல் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி தேசிய அளவில், மாநில அளவில், மாவட்ட அளவில் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய, மாநில ஆணையங்கள் மாநில மனித உரிமைகள் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை தலைவராகவும் மற்றும் நான்கு உறுப்பினர்களையும் கொண்டு 143, குமாரசாமிராஜா சாலை, கிரீம்ஸ் சாலை, சென்னை-600 028 முகவரியில் செயல்படுகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தலைவராக கொண்டு, மானவ் ஆதிகர் பவன், பிளாக் சி, சி.பி.ஒ., காம்ப்ளக்ஸ், ஐ.என்.ஏ., புதுடில்லி முகவரியில் செயல்படுகிறது.
யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம்அரசாங்க அமைப்புகள், அரசு அலுவலர்களின் மனித உரிமை மீறல் செயல்கள், சிறைவாசிகளின் உரிமை, கொத்தடிமை, குழந்தை தொழிலாளர், சுற்றுச்சூழல் சீர்கேடு, வனவிலங்கு பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகள், திருநங்கை உரிமைகள் உட்பட அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை வேண்டி மனித உரிமை ஆணையத்திற்கு புகார் செய்யலாம்.
சுற்றுச்சூழல் உரிமையும் மனித உரிமை மீறல் தான். நீர்நிலைகள் நம் உடலின் நரம்புகள் போன்றவை. ஒரு சிறு நரம்புக்கு பிரச்னை என்றாலும், ஒட்டுமொத்த உடலுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் தான் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிகாட்டியுள்ளன.
மனித உரிமை மீறல்கள் குறித்த புகாரை ஆங்கிலத்தில் தான் அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழில் எழுதி அனுப்பலாம். எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பாதிக்கப்பட்டவரோ அல்லது பொது நலனில் அக்கறை கொண்டவரோ அனுப்பலாம்.
மீறல்கள் இல்லாத சமுதாயம் நம் நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையங்களும் முனைப்புடன் செயல்படுகின்றன. மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் யாரோ ஒரு தேவதுாதன் வந்து ஈடுபடுவார் என ஒதுங்கி இருக்காமல், அந்தந்த பகுதியில் இருப்பவர்கள் தங்களின் பொன்னான சிறு நேரத்தை ஒதுக்கி, நீதிமன்றம் அல்லது ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் மனித உரிமை மீறல்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும்.
-ஆர்.அழகுமணி,வழக்கறிஞர், மதுரை. 98421 77806.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement