Advertisement

மனிதனுக்கு 10 மாதம்; மண்ணுக்கு 500 ஆண்டுகள் : நாளை உலக மண் நாள்

மண்ணின் மகத்துவத்தை உணர்ந்து பாதுகாக்கும் நோக்கத்துடன், டிச.,2013ல் நடந்த 68வது ஐக்கிய நாடுகளின் சபை பொதுக்கூட்டத்தில், டிச.,5 உலக மண்நாளாக அறிவிக்கப்பட்டது. உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், இந்த ஆண்டை மண்ணிற்கான ஆண்டாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
ஆதிகாலத்தில் இயற்கையாய் விளைந்த காய், கனிகளை உண்டு காட்டிலும், மேட்டிலும் நாடோடிகளாய் திரிந்தான், மனிதன். ஓரிடத்தில் நிலையாய் தங்கி விவசாயம் செய்ய தொடங்கிய போது தான் நாகரிகம் தோன்றியது. மண், நீர்வளம் இருந்த இடத்தை விவசாயம் செய்ய ஆரம்பித்தான். சிந்து சமவெளி, மஞ்சள் ஆற்று நாகரிகம் வளர்ந்தது. வேளாண்மை மனிதனின் உணர்வோடு, உயிரோடு கலந்த பண்பாட்டு கலாசாரமானது.'நல்ல நல்ல நிலம் பார்த்து... நாமும் விதை விதைக்கணும்' என, கவிஞர் பாடிய காலம் மாறி விட்டது. களராகவோ, உவராகவோ நிலம் இருந்தால் கூட, அதை சீர்திருத்தி விதை விதைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு வந்துவிட்டோம். உணவு பாதுகாப்பை பற்றி மட்டுமே பேசிவந்த நாம், இன்று ஊட்டச்சத்து பாதுகாப்பு பற்றி யோசித்து செயல்பட துவங்கி விட்டோம். உணவு கொடுப்பதோடு நின்று விடாமல் ஆரோக்கியமாக நோயின்றி வாழ, அத்தனை தாதுக்களும் நிரம்பிய சமச்சீர் உணவை வழங்க வேண்டும்.
பதினாறும் வேண்டும் 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; மண்ணுக்கும் பொருந்தும். ஏனென்றால் பயிருக்கு தேவையான 16 சத்துக்களை மண் வாரி வழங்குகிறது. இதில் கார்பன், ஹைட்ரஜன் முதன்மை சத்துக்கள். விண்ணிலும், மண்ணிலும், நீரிலும் இவை பரவி கிடக்கின்றன. நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் என்று சொல்லக்கூடிய தழை, மணி, சாம்பல் சத்துக்கள் பயிருக்கு அதிகமாக தேவைப்படும் பேரூட்டச் சத்துக்கள். கால்சியம், மெக்னீசியம், கந்தகம் இரண்டாம் நிலை சத்துக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. 'மூர்த்தி சிறிது; கீர்த்தி பெரிது' என்பதை போல, குறைந்தளவே தேவைப்பட்டாலும் துத்தநாகம், இரும்பு, தாமிரம், மாங்கனீஸ், போரான், மாலிப்டினம், குளோரின் நுண்ணுாட்டச்சத்துக்களும் பயிர் வளர்ச்சிக்கு தேவை. இந்த பதினாறு சத்துக்களை பயிர்கள், மண்ணில் இருந்து பெற்று நமக்கும், விலங்குகளுக்கும் வழங்கினால் மட்டுமே, ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் உண்டு. இவை தான் கார்போஹைட்ரேட்டுகளாக, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாதுக்களாக நமக்கு கிடைக்கின்றன.
மண்ணுக்கு 500 ஆண்டுகள் ஒரு தேக்கரண்டி நல்ல மண்ணில், உலகத்தில் உள்ள மக்கள் தொகையை விட கூடுதல் எண்ணிக்கையில் நுண்ணுயிரிகள் உள்ளன. மண் என்பது கோடிக்கணக்கான நுண்ணுயிர்களை தன்னகத்தே கொண்ட மாபெரும் உயிர்சக்தி. அத்தனை கழிவுகளையும் மட்கவைக்கும் சக்தி மண்ணுக்கு உண்டு. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களே அப்பணியை செய்கின்றன. நீரின் அசுத்தத்தை வடித்து சுத்தமாக்கி தரும் மகத்துவம் மண்ணிற்கு உண்டு. உறிஞ்சும் பஞ்சு போல, தண்ணீரை தன்னுள்ளே உறிஞ்சி வைத்து பூமியில் வெள்ளம் வராமல் பாதுகாக்கிறது. ஒரு எக்டேர் நிலம் 3,750 டன் தண்ணீரை தேக்கி வைத்து பாதுகாக்கும் திறன் பெற்றது. கருவிலிருந்து மனிதன் உருவாக பத்து மாதங்கள் போதும். ஆனால் ஒரு சென்டி மீட்டர் மண் உருவாக, 500 ஆண்டுகள் ஆகும்.
மண்ணை கடவுளாய் மதித்து திருநீறு போல நெற்றியில் இட்ட நாம் அறிந்தும், அறியாமலும் இயற்கையை சிதைக்கத் துவங்கி விட்டோம். ரசாயன உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லிகளால் மண் மாசுபட்டு மனிதஇனம் நோய்வாய்ப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பஞ்ச பூதங்களில் முதன்மையானது நிலம். நிலமான மண்ணில் மாசுபட்டால் நீர், காற்றுடன் அனைத்தையும் பாதிக்கும்.
தேனீ போல் வாழ வேண்டும் மலருக்கோ, அதன் நறுமணத்திற்கோ சேதம் ஏற்படுத்தாமல், தேனை மட்டும் எடுத்துச் செல்லும் தேனீக்களை போல, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். இந்த தெரிதலும், புரிதலும், தெளிதலும், உணர்தலுமே நமக்கு அறிவினை வழங்கும்.
மண்ணுக்கு ஏற்ற பயிரினை தேர்வு செய்வதில் இருந்து, நம் பணி துவங்க வேண்டும். களர், உவர், அமில நிலங்களில் சில பயிர்கள் நன்கு வளரும். புதிதாக கண்டு
பிடிக்கப்பட்டுள்ள ரகங்களை தேர்வு செய்து, களர், உவர்நிலங்களில் பயிர் செய்ய வேண்டும். களர் நிலத்தை சீர்செய்ய ஜிப்சமும், அமில நிலத்தை சீர்செய்ய சுண்ணாம்பும் பரிந்துரை செய்யப்படுகிறது.
மண்பரிசோதனை நிலையங்கள் வேளாண்மை துறையின் மூலம் செயல்படும் மண்பரிசோதனை நிலையங்களுக்கு மண் மாதிரிகளை விவசாயிகள் அனுப்பி, களர்தன்மைக்கான ஜிப்சத்தின் அளவை கேட்டு பெறலாம். தொடர்ந்து ஒரே பயிரை பயிரிடுவதும் கூடாது. பயிர்சுழற்சி அவசியம். பயறுவகை பயிர்களின் வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் எனும் நுண்ணுயிர் மூலம், காற்றில் உள்ள தழைச்சத்து மண்ணில் நிலைநிறுத்தப் படுகிறது.
இயற்கை உரங்கள் போதாத நிலையில் ரசாயன உரங்கள் அத்தியாவசியமானது. ஆனால் அளவுக்கு மிஞ்சும் போது மண்ணில் தேங்கி மாசுபடுத்துகிறது. மண் ஆய்வு செய்து, தேவைக்கேற்ப உரமிட்டால் மண்ணுக்கும், பயிருக்கும் பிரச்னையில்லை.
நீடித்த நிலையான வேளாண்மைக்கு மண்வள பாதுகாப்பினை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும், தனிமனித ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதை நாம் உணர்ந்து, வருங்கால தலைமுறைக்கு, மண்ணை மலடாக்காமல் வளமாக்கிச் செல்வோம் என சபதம் ஏற்போம்.-எஸ்.மனோரஞ்சிதம்,வேளாண்மை அலுவலர், மண் பரிசோதனை நிலையம்,மதுரை, 98427 92877.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement