Advertisement

மனித நேய நீதியரசர்

நூற்றாண்டு வாழ்ந்து மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், காந்தியை, புத்தரை, கீதாசாரத்தை பின்பற்றி தனது வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொண்டவர். மனித உரிமைகள் காக்க கண்டிப்புடன் செயல்பட்டார். தனது உரைகளின் தொகுப்பாக வெளிவந்த புத்தகம் ஒன்றின் முன்னுரையில்,
''இந்த உலகின் ஒவ்வொருவரையும் எனது உறவினராக உணர்கிறேன். அவர்களில் கடைக்கோடி மனிதன் வரை மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று உணரும் வரை நான் மகிழ்ச்சியாக இருக்க முடியாது,'' என்று கூறிய கிருஷ்ணய்யர், ''காந்தியடிகளின் இந்த மெல்லிய குரல்தான் எனது சொற்பொழிவுகளில், எழுத்துக்களில் எதிரொலிக்கும்,'' என தெரிவித்தார்.
வன்கொடுமைக்கு எதிர்ப்பு ''சர்வதேச, தேசிய சாசனங்களால் மனித உரிமைகள் அங்கீகரித்த, நாகரிக காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மிகவும் துயரம் என்னவென்றால் புத்தரும், காந்தியடிகளும் நமக்கு பல சகாப்தத்திற்கு முன் இட்டு சென்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது பெருகி வருகிறது. ரத்தம் சிந்தலும், கண்ணீர் சிந்தலும், தீக்கிரையாக்கப்படுவதும், வன் கொடுமைகளும், பல்லுயிர்களை காவு கொண்டு வருகிறது. வாழ்வதற்கான அடிப்படை சமூக, பொருளாதார உரிமைகள் கூட மறுக்கப்பட்ட கீழ்த்தட்டு மக்கள் அவதியுறுவதை கண் முன்னே பார்த்து வருகிறோம்,'' என வேதனைப்பட்டார்.
மேலும், ''என்னுடைய கட்டுரைகள் பல, மனித உரிமை சம்பந்தமான கூறுகளை விவரிப்பதாக இருக்கும். எல்லாமே ஒவ்வொரு தனி மனிதனும் தனது முழுத்திறனை வெளிக்கொண்டு வந்து, தனது பிறப்புரிமையான சுயமரியாதையை மீட்டெடுக்கும் முயற்சியில் எல்லோரையும் உள்ளே கொண்டு வர ஒரு அறை கூவலே. இந்த முயற்சியில் எனது நாட்டு மக்கள்,
தங்களது சக மனிதர்களுக்காக கவலையுற்றால், அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாவேன்,'' என அந்த முன்னுரையில் தெரிவித்திருப்பார்.
மனித நேயம் கிருஷ்ணய்யரின் மனித நேயம், சமூகப்பார்வைக்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். தீர்ப்பின்போது விதிக்கப்படும் அபராதத்தொகையை உடனடியாக செலுத்த கையில் நிதி இல்லை எனில், சிறையில் அடைப்பது உரிமையியல் நீதிமன்ற வழக்கம். சேவியர் என்ற ஒரு புற்று நோயாளியின் வழக்கில், நீதிபதி கிருஷ்ணய்யருக்கு முன் நின்ற பிரச்னை ''புற்று நோயாளியாகிய இவரை சாகட்டும் என விட்டு விட்டு அபராதத்தொகை செலுத்தச் செய்ய வேண்டுமா அல்லது நோயை குணப்படுத்த அவரிடமுள்ள பணத்தை பயன்படுத்த அனுமதிப்பதா?,'' என்பதாகும். கிருஷ்ணய்யர் பார்வையில் அவரது நோய் முதன்மையாகப்பட்டது. சிகிச்சை பெற அனுமதி வழங்கியதோடு ''சிவில் லிபர்ட்டிக்காக' ஒருவரை சிறையிலிடுவது முறையானது அல்ல,'' என தீர்ப்பு வழங்கினார்.
தேசத்தின் மீதான பார்வை
டில்லியில் 2010 நவ., 11ல் நடைபெற்ற 23வது 'சட்டம் ஆசியா' மாநாட்டின்போது துவக்கவுரையாற்றிய கிருஷ்ணய்யரின் உரையிலிருந்து... சில பகுதிகளை பார்வையிட்டால், அவர் நீதித்துறையின் மீது கொண்டிருந்த மதிப்பினையும், இந்த தேசத்தின் மீதான விசாலமான பார்வையையும் உணர முடியும்.
''தற்போது உலகம் நவீன இயந்திர மயமாக்கப்பட்ட மேலை நாடுகளால் நிர்வகிக்கப்படுவதால், நாசகார வளர்ச்சி என்பது அணு அழிவிற்கு கொண்டு சென்றுள்ளது. நில உடமை ஆதிக்கம் தொடங்கி அன்றைய அணு சக்தி உலகம், விவசாயம் தொடங்கி ஐந்து நட்சத்திர உலகம் வரையிலான அசுர வேகமான சமூக வளர்ச்சி சமூகத்தின் அமைப்பிலும், பொருளாதாரத்திலும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. வளர்ச்சி என்பது காந்தியின் வார்த்தையில் சொன்னால் அழிவை உள்ளடக்கியதாக உள்ளது. ஐரோப்பா, மேலை நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அடிமைத்தனம் தடை செய்யப்பட்டாலும், ஆசியாவில் இன்றும் 'சேவகம்' மறை பொருளாக இருந்து வருகிறது. ஏழ்மை நீதி பரிபாலனம் செயலாக்கம் உள்ளதாக இருந்தால் தான் ஆசியா உண்மையிலே சுதந்திர பூமியாக இருக்க முடியும்,'' என்றார்.
புகழாரம் நீதித்துறைக்கு கிருஷ்ணய்யர் ஆற்றிய சேவையினை உணர்வதற்கு, அவரது பணி ஓய்வின் போது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் குழுமத் தலைவர் எல்.எம்.சிங்வி, வாசித்த உரையிலிருந்து பின் வரும் பகுதியை பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
''தாங்கள் பதவி வகித்த ஏழாண்டுகளில், நாட்டின் இந்த உயர்ந்த நீதிமன்றத்திற்கு மிகப்பெரும் பேறு சேர்த்தீர்கள். நீதிமன்ற கதவுகளை ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும், வறியோருக்கும் திறந்து விட்டீர்கள். சட்ட உதவிக்கான, சட்ட சீர்த்திருத்தத்திற்கான தங்களது யாத்திரை, பொது மக்களுக்கான தங்களது கரிசனம், மனித உரிமையை காக்க தாங்கள் முன் வைத்த கொள்கை, நம்பிக்கை நீதித்துறை சுதந்திரத்திற்காக சட்டத்தின் ஆட்சிக்காக தாங்கள் ஆற்றிய கடமை, இவையெல்லாம் ஒரு அமைதியான கிரியா ஊக்கியாக இருந்தது. இந்த தங்களது மனிதநேய பங்களிப்புகள், எங்களுக்குள் நீக்கமற நிறைந்துள்ளது. அவை அனைத்து சட்ட பிரசுரங்களிலும், நீதிமன்றங்களின் உள்ளேயும், வெளியேயும் எப்போதும் நினைவு கூரப்படும்.
தங்களின் நீதிக்கான தாகம் ஓய்வறியாதது. புரட்சிகரமானது. மற்றவர்கள் பேசத்தயங்கி, ஒத்துப்போய் நிறைவடைந்த போது, தாங்கள், தங்களது வார்த்தை என்னும் வாளால் துணிந்தீர்கள்; மீறினீர்கள். தங்களது நீதிபரிபாலனத்திற்கு அப்பாற்பட்ட பாதையில், மறைக்க முடியாத மரியாதை, தெய்வீகத் தன்மையுடைய ஆழ்ந்த சிந்தனை, சமத்துவ நல்லெண்ணம், சிரத்தை, கரிசனம், புரிந்துணர்வு கை கோர்த்து வந்துள்ளது. இதை நீண்ட காலம் போற்றிக் காப்போம்,'' என்றார்.
மேற்கோள்கள்கிருஷ்ணய்யர் தனது தீர்ப்புகளில், கட்டுரைகளில் பல ஆங்கில நீதியரசர்களின் குறிப்புகளை மேற்கொள்களாக காண்பித்திருப்பார். ''மேற்கோள்கள் என்பது அறிவின் விசாலத்தை சுருங்க சொல்பவை,'' என்று அவரே குறிப்பிட்டிருப்பார்.
''நமது மக்களின் ஆரோக்கியம் சர்வதேச மருந்து கம்பெனிகளின் விளையாட்டு பொருளாகவும், உயர்கல்வி கூடங்கள் அறிவை வடிகாலாக்கும் கடவு சீட்டு அலுவலகங்களாகவும் உள்ளது,'' என ஆணித்தரமாக கூறினார்.
நீதித்துறை சார்ந்த வழக்கறிஞர் குழுமங்களாலும், உடன் பணியாற்றிய பல நீதியரசர்களாலும் போற்றிப் புகழப்பட்ட நீதியரசர் கிருஷ்ணய்யரின் வாழ்க்கை முறை, கட்டுரைகள், தீர்ப்புரைகள் நிச்சயமாக வளர்ந்து வரும் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டுதல்களாக அமைந்து வருகிறது என்பதில் ஐயமில்லை.- எஸ்.சம்பத், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி,94420 36044.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement