Advertisement

அறுபத்தைந்தாம் கலையே ஜல்லிக்கட்டு

புவிசார் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டு குறித்து தற்போது பேச்சுக்கள்எழத் துவங்கியுள்ளன. சென்ற ஆண்டைப்போல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை தவறவிட்டு விடக் கூடாது என்பதில் ஒருமித்த செயலாக்கங்களும், கருத்துப்பரிமாற்றங்களும் அவசியம்.சங்க இலக்கிய காலத்திற்கு முன் இருந்தே விளங்கிய இனக்குழு மரபின் தொடர்ச்சியே ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும் ஏறுதழுவுதல் விளையாட்டு.
ஏறு தழுவுதல், காளை அடக்குதல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்ற பெயர்களில் நடக்கும் மாடுபிடி விளையாட்டு, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருகிறது. பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தில், மாடுபிடி விளையாட்டு சீரும் சிறப்புடனும் நடந்ததை மொகஞ்சதாரோவில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பண்பாட்டு மரபு:தமிழர்களின் மூத்த குடிகள் வாழ்ந்த இடம் சிந்து சமவெளி. தமிழினத்தில் முல்லை நில மக்களின் பண்பாடு என்பது, விலங்குகளைப் போற்றுதலும், அவற்றைத் தங்களின் வேட்டைத் தொழிலுக்கு ஏற்றவாறு பழக்குதலும். இது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பண்பாட்டு மரபாகும். இதன் ஒரு அம்சமாக மாடுகளுக்குப் பொங்கலிட்டு, ஜல்லிக்கட்டுத் திருவிழா நடத்துவதை நாம் பார்க்க வேண்டும். ஒரு பிரிவினரால் கொண்டாடப்பட்ட இம்மரபு காலப்போக்கில், பல்வேறு திணை மக்களின் பெருவிழாவாக மாற்றம் பெறுகிறதெனில், அதிலுள்ள சிறப்பே காரணமாகும்.
சங்க இலக்கியமான கலித்தொகை 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும், புல்லாளே ஆய மகள்' என்கிறது. காளையை அடக்கத் துணிவற்ற இளைஞரை ஒரு பெண் மறு பிறப்பிலும் அவனைத் தொடுவதற்குக் கூட விரும்ப மாட்டாளாம். கூரிய கொம்புகளுடனும், வலுத்த திமில்களுடனும் துள்ளிக் குதித்து ஓடி வரும் காளையை எதிர்கொண்டு நிற்க கூட துணிச்சல் வேண்டும்.
பண்பாட்டு போர் :காலங்காலமாக இம்மண்ணில் நிகழ்ந்த இந்த பண்பாட்டை தொடரச் செய்வது ஒவ்வொருவரின் கடமை. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக 2012ல் உச்சநீதிமன்றம் 77 நிபந்தனைகளை விதித்து நடத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. அது போதுமானது. ஆனாலும் மிருகத் துன்புறுத்தல் என்ற பெயரில் இந்த விளையாட்டைத் தடை செய்ய முயற்சி மேற்கொள்வது தவறான போக்காகும்.
கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவு என்பது, இந்தப் பூவுலகம் தோன்றியகாலந்தொட்டு நிகழ்ந்து வருவது. மனிதனும் பிற உயிரினங்களின் வாழ்வுடன் தன்னைப் பிணைத்துக் கொண்ட சார்பு உயிரிதான். மனிதன் கட்டமைத்துள்ள பண்பாடு, கலாசாரம், நாகரிகம், வாழ்வியல் என அனைத்துக் கூறுகளிலும் பிற உயிரினங்களின் தாக்கம் இருப்பதை ஒரு போதும் தவிர்க்க இயலாது. இதனைப் பொறுத்தே ஐ.நா., அவை உயிரிப் பன்மயம், பண்பாட்டுப் பன்மயம், மொழிப்பன்மயம் என முழுவதுமாக உணர்ந்து, அதை ஆதரித்து வருகிறது.
குறிப்பாக உயிரிப்பண்பாட்டுப்பன்மயம் என்பதில் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளையும் அங்கீகரித்து உயிரினங்களுடனான மனித உறவிற்கு உலகளாவிய ஆதரவை நல்குகிறது.
அடையாளம் அழிப்பு:காலங்காலமாய் நிலவி வரும் ஒரு பண்பாட்டைத் தடை செய்வதென்பது, மொழியையும், உயிரினப்பன்மயத்தையும், சுற்றுச்சூழலையும், இனக்குழு அடையாளத்தையும் அழிப்பதற்கு ஒப்பாகும்.
ஜல்லிக்கட்டு என்ற மரபு வழித் திருவிழா இந்த ஒற்றைப்புள்ளியில்தான் அமைந்துள்ளது என்பதை மக்கள், அரசு உட்பட அனைவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். தமிழ்மொழியின் பலமே, உள்ளூர்ப் பண்பாடும், அது சார்ந்த வழக்குச்சொற்களும், நம்பிக்கைகளும், சடங்குகளுமாகும். ஜல்லிக்கட்டைத் தடை செய்வதன் மூலமாக, அது சார்ந்த பண்பாடு, வழக்கு, சடங்கு, நம்பிக்கையை கண்டிப்பாக இழக்க நேரிடும்.
எருது, காளை அவற்றுடன் சார்ந்து வாழ்கின்ற காளைகள், பசுக்களின் பல்வகைமை நிச்சயமாய் அழிவைச் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குச்சொற்களும், அவற்றுடன் தொடர்புடைய சூழலியலும் நம் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் விலகிச் செல்ல நேரிடும்.
பூமிக்கு துரோகம்:பிரேசிலில் உள்ள கரிஓகா பழங்குடியினர் 1992 மே 30ம் தேதி, 'எங்கள் மூதாதையர்கள் வகுத்துத் தந்த பாதையில் நாங்கள் எங்களின் எதிர்காலத்தை நோக்கி நடக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம்,' என்பதை தங்களின் பிரகடனமாக்கினர். இது சுற்றுச்சூழல் தொடர்பான மிகப் புகழ் பெற்ற உலகப்பிரகடனமாகும். அப்பிரகடனத்தை இந்தோனேசியாவின் பாலித்தீவில் 2002 ஜூனில் நடந்த உலக சுற்றுச்சூழல் மாநாடும் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியது. மரபு வழியில் பழங்குடிகளால் பின்பற்றப்பட்டு வரும் பண்பாட்டுக் கூறுகளை முற்றிலுமாக புறக்கணிக்க முயலுதல், இப்பூமிப்பந்துக்கு நாம் செய்யும் துரோகமன்றி வேறில்லை.
இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு பன்முகப்பட்ட பண்பாடு, கலாசாரத்தையும், உள்ளூர் வழக்குச் சொற்களையும் ஏராளமாகக் கொண்டு விளங்குகிறது. அதிலொன்றுதான் ஜல்லிக்கட்டு. இவ்வுறவைப் பிரிக்க நினைக்கும் எந்தச் செயல்பாடுகளும், இன அடையாளத்தை முற்றுமாக அழித்தொழிக்கும் செயல்பாடாக கருதப்படும். ஜல்லிக்கட்டு விளையாட்டை மரபு ரீதியிலான அறிவையும், சூழல் வளத்தையும், பண்பாட்டுப் பெருமையையும் கொண்டிருக்கிறது என்ற பின்னணியிலிருந்து அணுக வேண்டும்.
சிறுபிள்ளை விளையாட்டல்ல :காளைகளின் கொம்புகளுக்கிடையே கட்டப்பட்டிருக்கும் சல்லிக்காசுக்கு ஆசைப்பட்டு, காளையோடு எதிர்த்து நிற்கின்ற சிறுபிள்ளை விளையாட்டல்ல ஜல்லிக்கட்டு. இந்த மண்ணையும், மக்களையும் தன் உழைப்பால் செழிப்புறச் செய்யும் காளை நண்பனை, காளையன் எதிர்கொண்டு நட்பு பாராட்டி, மகிழ்வோடு விளையாடுகின்ற பண்பாட்டு மரபே ஜல்லிக்கட்டு. ஒட்டிய வயிறும், குழிவிழுந்த கன்னமுமாய் காட்சியளிக்கும் ஏழை உழவன் தான், தன் காளையை மட்டும் கொழுத்ததாய், திமிரெடுத்துக் கம்பீரமாய் வளர்த்துக் காட்சிக்குக் கொண்டு வருகிறான்.
அவனா, தன் காளை துன்புறுவதை விரும்பப் போகிறான்? கால்நடைகளைத் துன்புறுத்துவதோ அல்லது அவற்றால் மனிதர்களுக்கு காயங்கள் ஏற்படுவதோ நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுபோன்ற, நிகழ்வுகளுக்கு இடமளிக்காத வண்ணம் இவ்விளையாட்டை நிகழ்த்தலாம்.சில அறிவுஜீவிகள் கூறுவதைப்போல் ஜல்லிக்கட்டு உயிர் வதை அல்ல. உழவனின் வாழ்வோடு ஒட்டி உறவாடும் ஓர் உயிரை ஊக்கப்படுத்தும்,
உன்னதப்படுத்தும் அற்புதமான கலை. உள்ளபடியே தமிழர்தம் ஆய கலைகளில் இது அறுபத்தைந்தாம் கலை. துள்ளிக்குதிக்கட்டும் இந்த மண்ணின் அடையாளமான ஜல்லிக்கட்டு. - இரா.சிவக்குமார், சமூக ஆர்வலர்,மதுரை. 99948 27177.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement