Advertisement

இது எங்கள் தேசம்!

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்து இருப்பதாகவும், கடந்த சில மாதங்களாக, பெரிய அளவில் எதிர்ப்பு குரல்கள் எழும்பி வருகின்றன. அப்படி சொல்லும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் ஆகியோருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் அபிப்ராயங்கள் தெரிவிக்கின்றனர். பிரபல இந்தி நடிகர் அமீர் கானும், தன் மன வலியை, ஒரு விழாவில் பேசியிருக்கிறார். 'இந்தியாவில் இன்று நிலவும் சூழலில், என் மனைவி தன் பிள்ளைக்காக பயப்படுகிறாள்; வேறு நாட்டிற்கு சென்று விடலாமோ என யோசிக்கிறோம்...' என்று அவர் சொல்லியிருக்கிறார். அவர் பேசிய கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இருந்திருக்கிறார்.

ஒரு மத்திய அமைச்சரை எதிரே வைத்து, மேடையில் இப்படி பேசுவதற்கு, ஒரு தனி துணிச்சல் வேண்டும். எந்த பிள்ளைக்காக, அவர் மனைவி பயப்படுகிறாரோ, அந்த பிள்ளையின் பெயர் ஆசாத். 'ஆசாத்' என்றால் சுதந்திரம். இப்படி அவர் பேசுவதற்கான சுதந்திரத்தை, இந்தியா தந்திருக்கிறது. அமீர் கானுடைய பின்னணியை ஆராய்ந்தால் வியப்பாக இருக்கும்.இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தி, நேரு, படேல் மூவருடன் இணையாக இருந்தவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத். இந்திய பிரிவினைக்கு பின், இந்தியா தான் எங்கள் தேசம் என்று, முழக்கமிட்டு இங்கேயே இருந்து, இங்கேயே இறந்து, இந்த மண்ணில் புதைக்கப்பட்டார். இந்தியாவில் முதல் மத்திய அரசில் கல்வி அமைச்சராக இருந்தவர் ஆசாத். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் நடிகர் அமீன் கான். அவர் நினைவாகத் தான் தன் பிள்ளைக்கும், 'ஆசாத்' என்று பெயரிட்டிருக்கிறார்.பிரிவினை சமயத்தில் கூட, இந்த மண்ணை விட்டு செல்லாத முன்னோரின் வாரிசு, இப்படி பேசியிருப்பது வருத்தத்தை தருகிறது. இப்படிப்பட்ட, வி.ஐ.பி.,க்களே பயப்படும்போது, சாதாரண மனிதர்கள் நிலை எப்படியிருக்கும்? உங்களுக்கு வசதி இருக்கிறது. நீங்கள் எங்கே வேண்டுமென்றாலும் போகலாம். வசதியில்லாத நாங்கள் எங்கே செல்வோம்?

நீங்கள் பயப்படக் கூடாது அமீர் கான். பிரச்னையை சந்திக்க வேண்டும். நேருக்கு நேராக சந்திக்கும் நேர்மை வேண்டும். சினிமாவில் மட்டும் ஹீரோவாக இருந்தால் போதுமா?நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். உங்கள் பிள்ளை, 'ஆசாத்' நல்லபடி இங்கேயே வளருவான். ஏனென்றால், நீங்கள் நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத நல்ல மனிதர்; சமூக அக்கறை கொண்டவர். இன்று இந்த தேசம், சில சிக்கல்களை சந்தித்து வருவது நிஜம் தான். உங்களை போன்றோர் இதற்கு வழிகாட்ட வேண்டும். அது தான் உங்கள் பொறுப்பு. அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த நீங்கள் வெளியேற, இந்திய மக்கள், குறிப்பாக இந்துக்கள் விட மாட்டார்கள்.சாதாரண முஸ்லிம்களுக்கு, ஏழை அன்றாடங் காய்ச்சி முஸ்லிம்களுக்கு எத்தனையோ பிரச்னைகள் ஆபத்துகள் ஏற்படுகின்றன. அவர்களுக்கு அப்போதெல்லாம் ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருப்பதும் இந்துக்கள் தான். அவர்கள் கல் மனம் படைத்தவர்கள் அல்ல. அன்பு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், நம்பிக்கை இவற்றுக்கு உதாரணம் இந்தியா தான்.

இங்கு வாழும் மக்கள், பல மதங்களை, ஜாதிகளை பின்பற்றுபவர்கள். பல மொழிகளை பேசுபவர்கள்; ஆனால், இந்தியர்கள். இந்தியா இதைப் போன்று இதற்கு முன்பும் பல பிரச்னைகளை சந்தித்துள்ளது. இதை விட மோசமான பிரச்னைகளை கண்டிருக்கிறது. அப்போதெல்லாம் கூட நமக்கு ஆதரவாக இருந்தது, நம் இந்து சகோதர, சகோதரிகள் தான். அவர்கள் இனியும் நமக்குத் தான் ஆதரவாக இருப்பர். நமக்கு எதிராக இருப்பவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்.இன்றைய காலக்கட்டத்தில், உலகத்தின் எல்லா பகுதியிலும் அமைதியின்மை, சகிப்புத்தன்மை இல்லா சூழ்நிலை நிலவுகிறது. எங்கே செல்வீர்கள் அமீர் கான்? எங்கே போனாலும் இங்கே இருக்கும் சந்தோஷம் கிடைக்காது. ஏனென்றால், இது நம் தேசம்.

ஒரு குறிப்பிட்ட மதம், ஜாதி, மொழிக்கான தேசம் அல்ல இது. இது நம் எல்லாருக்குமான தேசம். உலகில் இப்படி, ஒரு அபூர்வமான தேசமே கிடையாது. நவீன இந்தியாவை செதுக்க வேண்டிய சிற்பிகளில் ஒருவர் நீங்கள். 'பயப்படாதே' என்று உங்கள் மனைவிக்கு, சொல்லுங்கள். மெஜாரிட்டி இந்துக்கள் நமக்கு துணையிருக்கின்றனர். நம்மை புரிந்து கொண்டு இருக்கின்றனர். நம் மீது அன்பு செலுத்துகின்றனர். நமக்கு ஆதரவாக இருக்கின்றனர். தயவு செய்து அவர்கள் நம்பிக்கையை வீணாக்கி விடாதீர்கள்.இந்திப் பட உலகில் பெரிய மூன்று நடிகர்கள் என்றால், அமீர் கான், சல்மான் கான், ஷாரூக் கான் தான். இவர்களுடைய படங்களை எல்லா இந்துக்களும், குடும்பங்களுடன் வந்து தியேட்டரில் பார்த்து ரசிக்கின்றனர்.

யாரும் இவர்கள் இந்த மதத்தை சேர்ந்த நடிகர் என்று சொல்வதில்லை.சில சிறு குழுக்கள் பிரச்னைகளை உருவாக்குகின்றன. பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இதை அரசியல்வாதிகள் பயன்படுத்தி ஓட்டு அறுவடை செய்கின்றனர். பிரச்னைகளை செய்பவருக்கு கண்டனம் தெரிவித்து எழுத்தாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளை திருப்பித் தருகின்றனர். மறுபடியும் இவர்களுக்கு ஆதரவாக, எதிராகவும், இரு குழுக்கள் பிரிந்து செயல்படுகின்றன. அப்படித் தான் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயமும்.

இது அரசியல்வாதிகளுக்கு நீங்கள் தீனி போட்டது போலாகிவிட்டது. இந்த தேசம் சந்தித்திடும் பிரச்னைகளை ஒளித்து வைக்க கிடைத்த பீரோ தான் நீங்கள். நீங்கள் உங்களையே அறியாமல் இவர்களிடம் சிக்கி விட்டீர்கள். கொஞ்ச நாள் இவர்களுக்கு நல்லா பொழுது போகும். நல்லவேளை, இதையெல்லாம் பார்க்க அப்துல் கலாம் இல்லை. அவர் நம்மை கனவு காணச் சொன்னார்.

துாக்கத்தில் வரும் கனவு அல்ல, நம்மை துாங்க விடாமல் செய்வதே கனவு என்றார். நாம் துாங்காமல் அந்த கனவு மெய்ப்பட செயல்பட வேண்டும் என்றார். அவர் இறந்த கொஞ்ச நாளிலா இப்படி எல்லாம் நடக்க வேண்டும். நாம் நம்பிக்கையை இழக்கக் கூடாது. சேர்ந்து கனவு காண்போம். சேர்ந்து செயல்படுவோம். ஒரு சேர, ஒரு தேசமாக முன்னேறுவோம். பயத்தைப் போல ஆபத்து வேறு எதுவும் இல்லை. பயத்தை ஜெயிக்க விடாதீர்கள் அமீர் கான். உங்களுக்கு துணையாக எல்லாரும் இருக்கிறோம். இங்கேயே இருங்கள். ஏனென்றால், இது நம் தேசம். இதைப் போல ஒரு தேசம் உலகிலேயே இல்லை என்று கவிஞர் அல்லாமா இக்பால் சொன்னதை மறந்து விடாதீர்கள்...
இ-மெயில்:- affu16.ingmail.com

- அப்சல் --
எழுத்தாளர், சிந்தனையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (30)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement