Advertisement

வானம் விழினும் நீதிவாழ வேண்டும் இன்று தேசிய சட்ட தினம்

கரிக உலகில் மனித சமுதாயம் துன்பம் இன்றி வாழ சட்டம், நமக்கு துணை புரிவதுடன், தனி மனித பாதுகாப்பையும் சமூக நீதியையும் வழங்குகிறது. சட்டம் சார்ந்த சமூகத்தில் அரசுடன் மக்கள் இணக்கமாகவும், அமைதியாகவும் வாழ்கின்றனர். சட்டமும், நீதியும் சமுதாயம் மேம்பட
உதவுகின்றன. சட்டங்கள் படிக்க மட்டுமல்ல; அவை நடைமுறை படுத்துவதற்கே. சட்டங்களே நம்மைக் காக்கும் கவசங்கள். கவசங்களை அணிய மறந்தால் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
சட்ட அறிவு அவசியம் ஒருவர் தன் நாட்டின் சட்டங்களைப் பற்றி தெரியாது எனக்கூறி தப்பிக்க இயலாது. நீதிமன்றங்களும் அவர்களை மன்னிப்பது கிடையாது. ஒவ்வொரு குடிமகனும், நாட்டின் முக்கிய சட்டங்களை அறிவது அவசியம். சட்டத்தின் வழி ஆட்சி நடக்க வேண்டும். அரசு தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மக்களிடம் திணிக்கக் கூடாது. மக்கள் நலனே பிரதானமாக
இருக்க வேண்டும். இயற்றப்படும் சட்டங்கள் சிறந்தனவாகவும் தீர்க்கமாகவும் இருக்க வேண்டும் என கிரேக்க சிந்தனையாளர் பிளாட்டோ வலியுறுத்தியுள்ளார்.
நீதிமன்றமும் பாராளுமன்றமும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1949- நவ., 26ல் எழுதப்பட்ட நாளை நினைத்துப் பார்க்கும் நாள் இன்று. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுத்து வடிவில் உள்ளது. உலகில் உள்ள சட்டங்களில் நீளமானது. 395 பிரிவுகளை கொண்டது.
12 பட்டியல்களை உடையது. நுாறு முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் கொண்டது பார்லிமென்ட். முழுமையான சட்ட வடிவினை பெறும் முன்பு ஒரு சட்ட மசோதா லோக்சபா, ராஜ்யசபா என இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்கள் நடத்தி ஆராய்ந்து பின்பு, ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாகின்றன. அவ்வாறு ஏற்பட்ட சட்டங்களை
மறுஆய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. பார்லிமென்ட் இயற்றிய சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்யலாம். இதில் திருத்தங்கள் செய்ய அரசை கேட்டுக் கொள்ளலாம். அல்லது புதிதாக வேறு சட்டங்களை இயற்ற ஆலோசனை வழங்கலாம். பார்லிமென்டிற்கு தனித்தன்மை இருப்பது போல நீதிமன்றத்திற்கும் தனித்தன்மை உண்டு. அரசியல் அமைப்புச் சட்டத்தின் தனித்தன்மைக்கு பார்லிமென்ட் சட்டங்களால் பாதிப்பு ஏற்படக் கூடாது. அவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டால் நீதிமன்றம் கட்டாயம் அதை ரத்து செய்யும் அதிகாரம் கொண்டது.
100 ஆண்டுகள் போதாது
ஏப்ரல் 1, 2014 நிலவரப்படி நாட்டில் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரி 34,144 வழக்குகள், விசாரணையிலுள்ள வழக்குகள் 30,186 இணைந்து 64,330 வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களில் சேர்த்து 16.5 லட்சம் வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 3.65 லட்சம் வழக்குகளும், மதுரை கிளையில் 1.09 லட்சம் வழக்குகளும், இந்தியா
முழுவதும் 3 கோடிக்கு மேல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவைகளை நடத்தி முடிக்க 100 ஆண்டுகள் போதாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீதிமன்றங்கள், குறைவான நாட்களே வேலை செய்வது பற்றி, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறுகையில், ''நாடு
முன்னேற வேண்டும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும், உற்பத்தியை பெருக்க வேண்டும் என எல்லோரும் நினைக்கும் போது, நீதிமன்றங்களும் ஏன் அதே போல் நினைத்து செயல் படக்கூடாது,'' என கேள்வி எழுப்பினார்.
ஆண்டில் 365 நாட்களில் 210 நாட்கள் மட்டுமே வழக்குகள் நடக்கின்றன. வாய்தா, நீதிமன்ற புறக்கணிப்பு போன்ற காரணங்களால் நீதி
பரிபாலன நாட்கள் குறைந்து விடுகின்றன.
காசோலை வழக்கு மூன்று ஆண்டுகள், அடிதடி வழக்குகள் ஏழு ஆண்டுகள், விபத்து ஊர்தி வழக்குகள் 10 ஆண்டுகள், விவாகரத்து வழக்குகள் 15 ஆண்டுகள், பாகப்பிரிவினை வழக்குகள் 22 ஆண்டுகள் என வழக்குகள் தாமதமாகி கட்டுகள் நிறம் மாறுவதைப் பார்த்துப் பார்த்து வழக்கு
நடத்துபவர்களின் மனமும் மாறிவிடுகிறது. பழமை வாய்ந்த சட்டங்களை முற்றிலும் ஒழித்து நவீன காலத்திற்கு ஏற்ப வரையறைகளுடன் கூடிய, தொழில் நுட்பம் சார்ந்த எளிய, விரைவான நீதியே மக்கள் கேட்கின்றனர்.
மாற்றங்கள் தேவை மன்னர்களில் ஒருவரான 'மனுநீதிச் சோழன்' கன்றை இழந்த பசு ஒன்று அரசனின் மாளிகைக்கு வநது ஆராய்ச்சி மணியை அடித்து தனக்கு நீதி கேட்டது. விசாரித்து விபரம் அறிந்த அரசன் தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவுக்கு நீதி வழங்கினான். சமூகத்திற்கு தனி மனித விருப்பு வெறுப்புகள் முக்கியமல்ல. தவறு செய்தவன் தன் மகன் என்றாலும் கூட பசுவுக்கு தேவையான நியாயம் வழங்கிய மன்னன் மனுநீதிச் சோழன். இந்தப் போக்கு தான் இன்றைய தேவை.
பாரதப் போரில், பார்த்த சாரதியான கண்ணன் அர்ச்சுனனுக்கு போர்க்களத்தில் உபதேசம் செய்தார். 'தீமையை அழித்து உண்மையை நிலை நாட்ட, தன்னுடைய எதிரிகள் உறவினர்கள் என்றாலும், அதிகம் பேர் உயிரை இழப்பர் என்றாலும், அவர்களைக் கொல்வது நியாயமே. போர் என்று வந்துவிட்டால் நாட்டைக் காப்பது ஒன்றே தான் தர்மம். எப்போதும் பலனை எதிர்பார்த்து கடமையாற்றுவது தவறு' என்று கூறினான்.
தற்போதைய நீதிபரிபாலனை முறையில் விரைவாக நீதி கிடைக்க, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல. நீதிமன்ற உத்தரவுகளை செயல் படுத்துவது, வழக்கறிஞர்கள் - நீதிபதிகளிடையே உள்ள உறவுகள் ஆகியவை குறித்து எல்லாம்
நீதிமன்றங்கள் வழிகாட்ட வேண்டும். 15.11.15 அன்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை பிற நீதிமன்றங்களுக்கு முன்னோடியாக 'ஸ்கைப்' மற்றும் 'இமெயில்' மூலம் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது ஒரு சரித்திர நிகழ்வு. வழக்காடிகளுக்கு மாற்று நீதி வழங்கும் முறைகளை விளக்க வேண்டும். பிற நாட்டில் உள்ளதைப் போல, முதலில் சமரசம் செய்ய கட்டளையிட வேண்டும். சொத்து, கம்பெனி, தொழிலாளர், குடும்பப் பிரச்னை, இழப்பீடு, பணப்பரிவர்த்தனை, திவால் வழக்குகள் முன்னுரிமை தரப்பட்டு தீர்வுகள் காணப்பட வேண்டும். வலியோர்க்குத் தான் நீதி; எளியோர்க்கு அல்ல என்ற நிலை எப்போதும் கூடாது. எனவே வானம் வீழினும் நீதி வாழ வேண்டும்.-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674. poornacharigmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement