Advertisement

மழைக்கால நோய்கள் தப்பிப்பது எப்படி

மழைக்காலம், உண்மையிலேயே அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டிய அற்புதமான பருவ காலம். ஆனால், நம் நாட்டில் நிலவும் மக்கள் நெருக்கம், சுகாதாரமற்ற பொதுச்சூழல், மாறிப்போன உணவு முறைகள், பெருகி வரும் நோய்கள், அனைவரின் உடலிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வரும் நிலை, வடகிழக்கு பருவ மழைக்காலத்தோடு சேர்ந்து வரும் பனிக்காலம், மக்கள் நெருக்கத்தால் மாசுபடும் சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் மழைக்காலம் என்றாலே ஒருவித “அலர்ஜி” தோன்றி விடுகிறது. “இன்றும் மழை பெய்யுமாம்” என்ற தகவல் கூட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நாம் வாழும் சூழல் மாறிப்போய் விட்டது.
பருவகால சூழலுக்கு ஏற்ப நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும். 'சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் உயிரினமே அதிக காலம் உயிர் வாழும்' என்பது அறிவியல் நியதியாகவே உள்ளது. எனவே மழைக்காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
மூன்றுவித பிரச்னைகள் பொதுவாக மழைக்காலத்தில் 3 விதமான பிரச்னைகள் ஏற்படும். மாசுபட்ட சூழ்நிலை, மாசுபடும் குடிநீர், தண்ணீர் சார்ந்த உயிரினங்கள் ஆகியவற்றின் மூலம் நோய்கள் பரவுகின்றன. இதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள பழகிவிட்டாலே, நாம் எளிதில் நோய்களை வென்று விடலாம். நிச்சயம் நம் குழந்தைகளுக்கும் இவற்றை கற்றுக்கொடுத்தே ஆக வேண்டும்.
மழைக்காலத்தில் மஞ்சள் காமாலை, டைபாய்டு, வயிற்றுபோக்கு, காலரா போன்ற நோய்கள் ஏற்படும். இது பெரும்பாலும் வெட்ட வெளியிலும், நீர் நிலைகளுக்கு அருகிலும் மலம் கழிப்பதால் ஏற்படும் பிரச்னை. அதில் உள்ள கிருமிகள் நீரில் கலக்கும் போதும், மலத்தில் அமர்ந்த ஈக்கள், கொசுக்கள் போன்ற உயிரினங்கள் பழங்கள், காய்கறிகளில் அமரும் போதும் அதில் நோய் தொற்று ஏற்படும்.
அவற்றை உண்ணும் போது, நாமே நோயை அறியாமல் ஏற்படுத்திக்கொள்கிறோம். இதில் இருந்து தப்பிப்பது எளிதான விஷயம். மழைக்காலத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். காய்கறிகளை உப்புகலந்த, வெதுவெதுப்பான நீரில் ஒரு மணி நேரம் கழுவிய பின்னரே, பயன்படுத்த வேண்டும். நன்றாக சமைத்த காய்கறிகளை சூடாக சாப்பிட வேண்டும். பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.
கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களை நன்றாக கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். எவ்வளவு கழுவினாலும் கிருமிகள், எந்த அளவிற்கு வெளியேறும் என்பது உறுதியற்ற விஷயம். ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம் போன்ற தோல் உள்ள பழங்களை தோலை நீக்கி விட்டு சாப்பிடுவதால் பிரச்னை இல்லை.ரோட்டோர, சாக்கடைகள் அருகில் உள்ள கடைகளில் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். மழைக்காலத்தில் அனைத்து கழிவுநீரும் கடலுக்குள் கலக்கும். அதனை உண்டு வாழும் கடல் உணவுகளை
தவிர்ப்பது நல்லது. அசைவப்பிரியர்கள் கோழி, ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். தடுப்பூசி மஞ்சள்காமாலை, டைபாய்டு நோய்க்கு தடுப்பூசி உள்ளது. காலரா, வயிற்றுப்போக்கிற்கு நீர்ச்சத்து குறையவிடாமல் பாதுகாத்து உடனடி சிகிச்சை பெறுவது அவசியம். மழைக்காலத்தில் பாக்கெட் பால் வாங்கி பயன்படுத்தலாம். சில்லரையாக விற்கப்படும் பாலை, நன்கு காய்ச்சி பயன்படுத்தவும்.
தண்ணீரை கொதிக்க வைத்த பின்னரே குடிக்க வேண்டும். தண்ணீரை கொதிக்க வைக்க முடியாத இடத்தில் இருப்பவர்கள், குளோரினேஷன் செய்து குடிக்க வேண்டும். பிளீச்சிங் பவுடர் கரைசலை ஒரு லிட்டருக்கு 8 சொட்டு விட்டால் போதும். அந்த நீர் சுத்தமானதாக மாறி விடும். அதன் பின் குடிக்கலாம். இது தான், தண்ணீர் சார்ந்த கிருமிகள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா காய்ச்சல்களில் இருந்து தப்பிக்க ஒரே வழி.
நம் நாட்டில் தற்போதைய நிலையில் கொசுக்களை ஒழிப்பது சாத்தியமில்லை. ஆனால் நாம் வாழும் இடத்தில் கொசு வளர விடாமல் தடுத்து விடலாம். “லேம்பா சை ஹாலோத்திரின்” என்ற 'ஸ்பிரே' யை மதில்சுவர்களில் அடித்தல், கொசு தங்கும் இடங்களை அழித்தல், வர விடாமல் தடுத்தல், கொசு பாதுகாப்பு மருந்துகளை உடலில் பூசிக்கொள்ளுதல் பாதுகாப்பு தரும்.
டெங்கு அறிகுறி டெங்கு அறிகுறி முதல் 5 நாளில் என்.எஸ்.1 என்ற சிகிச்சை மூலமும், அதற்கு மேல் ஐ.ஜி.எம்., டெஸ்ட்டிலும் தெரியும்...
டெங்கு பாதித்தவர்கள், நீர்ச்சத்து குறையவிடாமல் சிகிச்சை பெறுவது மிகவும் சிறந்தது. காய்ச்சல் எந்த வகையாக இருந்தாலும், டாக்டர்களின் ஆலோசனை அவசியம். எக்காரணம் கொண்டும் சுயமருத்துவம் கூடாது.
கொசுக்கடியில் இருந்து தப்ப, எளிமையான ஒரு வழியும் உள்ளது. அடர்நிறத்தில் உடைகள் அணிந்தால் கொசு தேடி வந்து கடிக்கும் என்பதும், லைட் கலரில் உடைகள் இருந்தால் கொசு கடிப்பது குறையும் என்பதும் ஆய்வில் நிரூபணம் ஆகி உள்ளது. கொசுக்கடியில் இருந்து தப்ப முழுக்கை சட்டை அணிவதும், லைட் வண்ணங்களில் உடைகள் அணிவதும் ஒரு வகை நடைமுறையாகி விட்டது.
மற்றொரு கொடிய நோய் எலிக்காய்ச்சல். இது எலியின் சிறுநீரில் இருந்து பரவுகிறது. சகதிக்குள் நடப்பவர்களுக்கும், சகதியில் பணிபுரிபவர்களுக்கும் காலில் ஏதாவது ஒரு இடத்தில் சிறு காயமோ, விரிசலோ இருந்தால் அதன் வழியாக எலிக்காய்ச்சல் நோய் கிருமிகள் உடலில் புகுந்துவிடும். இதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம்.
அடுத்தது மழை சகதி, தண்ணீரின் மற்றொரு பிரச்னை பூஞ்சை நோய். இந்நோய் தாக்கினால் உடனடி சிகிச்சை செய்ய வேண்டும்.
என்ன சாப்பிடலாம்? பொதுவாக மழைக்காலத்தில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் வெள்ளைப்பூண்டு, இஞ்சி அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மழை காலத்தில் சாதாரண சளி கூட, பெரும் தொல்லையை ஏற்படுத்தி விடும். எனவே அந்தமாதிரி பாதிப்பு வருபவர்கள், எக்காரணம் கொண்டும் மழையில் நனைய கூடாது. சாப்பிடும் முன், சோப்பு போட்டு கை கழுவுவது அவசியம். இதை நம் குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும்.
மழை காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, வேக வைத்த, எளிதாக ஜீரணமாகும், உடலுக்கு சூடு ஏற்படுத்தும் உணவுகளை உட்கொள்ள பழக வேண்டும். நம் உணவு முறை, வாழ்க்கை முறை, பாதுகாப்பு நடைமுறைகள் மூலம் மழைக்காலத்தில் தாக்கும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
- டாக்டர் சி.பி.ராஜ்குமார்,சர்க்கரைநோய் சிறப்பு நிபுணர்,தேனி. 88700 07020

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement