Advertisement

தேன்மழை தந்த உவமைக் கவிஞன்

பாரதியாரின் வழியில் நடை பயின்ற கனகசுப்புரத்தினம், 'பாரதிதாசன்' ஆனார்; பாவேந்தர் பாரதிதாசனின் அடிச்சுவட்டில் கவிதை உலகில் உலா வந்த இராஜகோபாலன், 'சுரதா' (சுப்புரத்தினதாசன்) ஆனார்.
பாரதியாரைத் 'தேசியக் கவிஞர்' என்றும், பாரதிதாசனைப் 'புரட்சிக் கவிஞர்' என்றும் போற்றிய தமிழ் உலகம், சுரதாவிற்குப் 'உவமைக் கவிஞர்' எனப் புகழாரம் சூட்டியது.
'தேன்மழை' என்பது அவருடைய சிறந்த கவிதைகளின் தொகுப்பு. 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா - ஆறடி நிலமே சொந்தமடா!' (நீர்க்குமிழி), 'அமுதும் தேனும் எதற்கு - நீ, அருகினில் இருக்கையில் எனக்கு?' (தை பிறந்தால் வழி பிறக்கும்), 'கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே' (நாடோடி மன்னன்), 'வசந்த காலம் வருமோ? நிலை மாறுமோ?' (மறக்க முடியுமா?), 'விண்ணுக்கு மேலாடை' (மேஜர் சந்திரகாந்த்) முதலான புகழ்பெற்ற திரை இசைப் பாடல்கள் சுரதாவின் கை வண்ணத்தைப் பறைசாற்றி நிற்பவை.
கவியுள்ளம் காட்டும் உவமைகள் :ஒரு கவிஞர் கையாளும் உவமைகளைக் கொண்டு, அவரது உள்ளத்தையும் படைப்பாளுமையையும் உணரலாம். ஒரு படைப்பில் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தைக் காட்டுவதில் உவமை பெறும் இடம் முக்கியமானது. ஓர் உதாரணம்:'தமிழர் தங்கள் குழந்தைகளுக்கு செந்தமிழில் பெயரிடுதல் வேண்டும்' என்னும் கருத்தை வலியுறுத்த சுரதா கையாண்டுள்ள ஆற்றல் மிக்க உவமை:
“தாய்மொழியை ஒதுக்கிவைத்துப் பிறநாட்டாரின் தழுவல்மொழிப் பெயரிட்டுக் கொளநினைத்தல்தாய்ப்பாலை வேண்டாது நாய்ப்பால் உண்ணச்சம்மதிக்கும் தன்மையது போன்ற தாகும்.”'கனி இருப்பக் காய் கவர்ந்தற்று' என்பது போல், தாய்ப் பால் இருக்க நாய்ப்பால் உண்ண எவரேனும் சம்மதிப்பார்களா?
அது போல் தான் தாய்மொழியை ஒதுக்கி வைத்து, பிற நாட்டாரின் தழுவல் மொழியில் பெயரிட்டுக் கொள்ள நினைப்பதும்.தமிழ் உணர்வு உவமைகள் உவமையைப் பொறுத்த வரையில், பாரதிதாசனிடம் மேலோங்கிக் காணப்படுவது சமூக உணர்வு என்றால், சுரதாவிடம் சிறந்து விளங்குவது தமிழ் உணர்வு. தமிழ் தொடர்பான செய்திகளைச் சுரதா, தம் உவமைகளில் வாய்ப்பு நேரும் போதெல்லாம் இயன்ற வகையில் எல்லாம் - எடுத்தாண்டுள்ளார். உதாரணமாக,“எப்போதும் இனிப்பவளே! 'ழ'கரம் என்னும்எழுத்தை போல் சிறந்தவளே!”“தனித்தியங்கும் செந்தமிழ் போன்றே யானும் சிறந்தவள்”“ஆய்த வெழுத்தின் அமைப்பே அடுப்பாம்” (தேன்மழை) புத்தம் புதிய உவமைகள் சுரதாவின் உவமைகள் புத்தம் புதியவை; பொருத்தமானவை. இதுவரை எவரும் கையாளாத தனித்தன்மை வாய்ந்தவை; 'உவமைக் கவிஞர்' என்னும் சிறப்புப் பெயரை சுரதாவுக்கு வழங்குவதற்குக் கட்டியம் கூறும் விதத்தில் அமைந்தவை. சுரதாவின் 'தேன்மழை' தொகுப்பில் படிப்பவர் நெஞ்சை அள்ளும் வகையில் உவமைகள் மண்டிக் கிடக்கக் காணலாம்.
ஆண்மைக்கும் வீரத்திற்கும் அடையாளமாக ஆடவர் முகத்தில் விளங்குவது மீசை. மீசையைக் குறிக்கும் விதத்தில் இதுவரை எத்தனையோ பேர் எத்தனையோ உவமைகளைக் கையாண்டுள்ளனர். பாண்டிய மன்னர்களின் மீசையை குறிப்பிட, ஒரு கவிதையில் சுரதா கையாண்டுள்ள உவமை வித்தியாசமானது.
''படுத்திருக்கும் வினாக்குறி போல் மீசை வைத்தபாண்டியர்கள் வளர்த்த மொழி”'படுத்திருக்கும் வினாக்குறி போல்' - கற்பனை வளம் களிநடம் புரிந்து நிற்கும் உவமை இது!'ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம், கூடி முயங்கப் பெறின்' என்னும் காமத்துப் பால் குறட்பாவுக்கு காதல் சுவை சொட்ட சுரதா தீட்டும் உவமை.''ஈரஉடை போல் நான் அவருடலில் ஒட்டிக் கொள்வேன்.” கவிமணிக்கு ஒரு உவமை
கவிமணி வாழ்வாங்கு வாழ்ந்து எழுபத்தெட்டு வயதில் மரணம் அடைந்த போது 'அந்தோ கவிமணி' என்ற தலைப்பில் பாடிய கவிதையில், சுரதா, அப்பர் பெருமானின் நிறைவாழ்வினை உவமையாகக் கையாண்டுள்ளார். “அப்பரைப் போல் எண்பத்தோ ராண்டு வாழ்ந்தேஅங்கத்தில் சுருக்கங்கள் பெற்றி ட்டாலும்எப்பொழுதும் சுருங்காத பெருமை பெற்றாய்!”அப்பர் தெய்வத் தமிழில் முத்திரை பதித்தவர்; கவிமணி குழந்தைக் கவிதையில் தடம் பதித்தவர். 'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்பது போல், இந்த உவமை இரு பெருமக்களையும் இணைத்துள்ளது.
பெருந்தமிழ்ப் புலவர் வேங்கடாசலம் பிள்ளைக்கு, பண்டிதமணி 'கரந்தைக் கவியரசு' என்னும் பட்டம் வழங்கிய போது 'வழங்கத் தகுந்தவர் வழங்கினார்; அதனை ஏற்கத் தகுந்தவர் ஏற்றுக் கொண்டார்' என்பதோடு நில்லாமல், இலக்கண நயம் மிளிரும் ஓர் உவமையைக் கையாண்டுள்ளார்.
“தகுதி மிக்கோர் தருகின்ற பட்டம்பகுதி போன்று நிலைத்து நிற்கும்;தகுதி இலாதார் தருகின்ற பட்டம்சிறப்பிலாப் பட்டமே; காற்றில்பறக்கும் பட்டமே, அடிக்குந் தம்பட்டமே!”கவிஞரின் சாதுரியமான சொல் விளையாட்டினை இங்கே சுவைத்து மகிழ்கிறோம். இலக்கணம் மீறியவர் எழுத்தாளர் பெருமாள் முருகன் குறிப்பிடுவது போல், “தெரியாத ஒன்றை உணர்த்த, நன்கு தெரிந்த ஒன்றைச் சொல்லி விளக்குவது தான் உவமை. சுரதா நன்கு தெரிந்த ஒன்றிற்கு யாருக்குமே தெரியாத ஒன்றை உவமையாக்குவார்... அரிய செய்திகளை உவமையாக்கி, உவமைக்கு உரிய இலக்கணத்தை மீறியவர் என்பதாலேயே அவருக்கு அப்பட்டம் மிகவும் பொருந்துகிறது”.
பாரதியார், பாரதிதாசன் இருவரது வாழ்வையும் வாக்கையும் வாழ்நாள் சாதனையையும் குறிக்கும் வகையில் சுரதா கையாண்டுள்ள அரிய உவமைகள்:“வெடித்தவுடன் விரைந்தோடும் ஆமணக்கின்விதையென்றால் பாரதிக்குப் பொருந்தும்; கீழேஅடித்தவுடன் மேலெழும்பும் பந்தென் றிட்டால்அது புரட்சிக் கவிஞருக்கே பொருந்தும்.”
இங்ஙனம் அரிய செய்திகளை உவமையாக்கிச் சுரதா படைத்துள்ள இடங்கள் 'தேன் மழை' தொகுப்பில் பல உண்டு. 'மலைபோன்று தலைநிமிர்ந்த உவமை தந்தார்' எனப் பாரதிதாசனைப் குறித்துச் சுரதா கூறுவது, ஒரு வகையில் சுரதாவுக்கும் பொருந்தும்.கவிமணி குறித்துச் சுரதா பாடியுள்ள வைர வரிகளையே, சுரதாவுக்கும் அவரது உவமைத் திறத்திற்கும் காணிக்கையாக்கலாம்:“ ஒப்புடையார் உவமேயம் போன்றோர் ஆவர்;உத்தமனே நீ உவமை போன்றோன் ஆவாய்!”சுரதா உவமேயம் போன்றோர் அல்ல; உவமை போன்றோர் ஆவார்.
-பேராசிரியர் இரா.மோகன் எழுத்தாளர், பேச்சாளர்மதுரை. 94434 58286.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement