Advertisement

எங்கே செல்லும் இந்த பாதை?

'இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக' என, கூறப்பட்ட ஒரு நிகழ்வு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் அரங்கேறியது. மதுரை வழக்கறிஞர் சங்கத்தலைவர் மற்றும் செயலர் மீது, உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து பதிந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை, நேரடியாக மக்கள் காணும்படி செய்தனர். அதை, 'டிவி'க்களில் பார்க்கும் பாமர மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக, விசாரணையின் முக்கிய பகுதிகள், தமிழ் மொழியிலேயே நடத்தப்பட்டன.

நீதிமன்றங்களில் நடக்கும் விவாதங்களை, நேரடியாக ஒளிபரப்பு செய்வது, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல வெளிநாடுகளில், சர்வ சாதாரணம். ஊடகங்கள், தாறுமாறாக வளர்ந்து கிடக்கும் இந்தியாவில், இத்தனை ஆண்டுகள் கழித்து, இப்போதாவது இப்படியொரு சிந்தனை வந்தது, உள்ளபடியே பாராட்டத்தக்கது; அதிலும், சென்னையில் நடத்தப்பட்டது, கூடுதல் மகிழ்ச்சி. 'நீதிமன்றங்களும், மக்களுக்கானவை தான்' என்ற எண்ணத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக, அந்த நேரலை முயற்சி அமைந்திருந்தது. இந்த எண்ணமும், அதற்கான செயலாக்கமும் வரவேற்கத்தக்கது. இதுபோன்று, காலத்திற்கு ஏற்ப தங்களை புனரமைத்துக் கொள்ளும் முடிவுகள் தேவை. அதிலும், சாதாரண மக்களின் கடைசி புகலிடமாக, ஆகப்பெரும் நம்பிக்கையாக உள்ள நீதித்துறையில், இது காலத்தின் கட்டாயம்.இன்னொரு பக்கம் சற்று கூர்ந்து கவனித்தால், ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் நீதித்துறை குறித்த கவலைத் தீயில், பெட்ரோல் ஊற்றுகிறது. வழக்கறிஞர் சமூகத்தின் சில செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை அல்ல என்பதில், யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

எதற்கெடுத்தாலும் நீதிமன்ற புறக்கணிப்பு, உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும், அதற்கொரு போராட்டம் போன்றவை, மக்களை முகம் சுளிக்க வைக்கின்றன. அதற்காக, நீதித்துறையின் ஒட்டு மொத்த அவப் பெயருக்கும், வழக்கறிஞர்கள் மட்டுமே காரணம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது சரியாக இருக்குமா? எங்கிருந்து இதெல்லாம் துவங்கியது என்பதை அறிந்து, அதை வெட்டி வீழ்த்துவது குறித்து சிந்திக்க வேண்டிய தருணமாக அல்லவா பொறுப்பானவர்கள் இதைக் கருத வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியில், நீதிமன்றத்தின் மீது மரியாதையை, நன்னம்பிக்கையை கட்டமைப்பது தான், முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அப்படியானால், சர்ச்சைக்குரிய வழக்குகளை, ஊழல் வழக்குகளை, மக்களை பெரிதும் பாதிக்கிற வழக்குகளை விசாரிக்கும் போது, 'டிவி'க்களில் நேரலைக்கு ஏற்பாடு செய்வதை வழக்கமாக்குங்கள். அதன்பின், நியாய, தர்மத்திலும், தார்மீக உணர்வுகளிலும் தடுமாறுகிற சில வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் கூட, 'மக்கள் நம்மை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்' என்று யோசிப்பர்.

'மற்றவர்கள் நம்மை பார்க்கின்றனர் என்கிற போது, கூடுமானவரை நல்லவர்களாக காட்டிக் கொள்ள வேண்டும்' என்பது மனித உளவியல். குறைந்த பட்சம் அப்படியாவது நடந்து விட்டால், நீதித்துறை மீதான கறையை துடைப்பதற்கான முதற்படியாக நேரலைகள் அமைந்து விடும்.

அதற்கு மாறாக, திரைப்படங்களில் காவல் துறையினரை, நீதித்துறையினரை அசிங்கப்படுத்துவது போல கட்சிகள் வைக்கப்படுவதற்கும், நீதித்துறையின் மாண்பைக் கூறு போட்டு விற்பது போன்ற, ஒரு விசாரணையை நேரடி ஒளிபரப்பாக காட்டுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? தலைக்கவச விவகாரத்தில் மக்களின் பாதுகாப்பு குறித்து, அக்கறை கொண்ட நீதிமன்றத்தின் அத்தனை ஆணைகளும், 200 சதவீதம் நியாயமானது. ஆனால், இதில் காட்டிய அதீத ஆர்வத்தில், அக்கறையில், ஒரே ஒரு பங்கு கூட, தலையே போகிற பல பிரச்னைகளில் காட்டப்படவில்லை என்று, கிராமத்து டீக்கடைகள் முதல் நகரத்து கிளப் வரை, மக்கள் கோபத்தோடு விமர்சிக்கின்றனரே. அப்படி கண்டும் காணாமலும் விடப்பட்டிருக்கும் பிரச்னைகளை, அவர்களே பட்டியலும் போடுகின்றனர்.

கடவுளையே குற்றவாளி கூண்டில் நிறுத்தி பழக்கப்பட்ட சமூகத்தில், நன்மை செய்கிறவர்கள் எல்லாவற்றுக்கும் பதில் கூறிக் கொண்டிருக்க முடியாது. சரிதான். ஆனால், லட்சக்கணக்கான மக்களை நேரடியாக பாதிக்கும் ஒரு பொதுப்பிரச்னையில் நடைமுறை சிக்கல்களை உணராமல், கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டு, முடிவுகளை திணிக்கும் போது தான், 'இதை செய்யும் நீங்கள், எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்லுங்கள்' என்ற தார்மீக கோபம் எழுகிறது. இப்போது, நீதிமன்றத்தின் உத்தரவை மெல்ல மெல்ல, காவல்துறை கைகழுவி விட்டதே! இதற்கு என்ன செய்யப் போகின்றனர்?சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, எம்.ஒய்.இக்பால் அப்போது ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். 'தமிழகத்திலுள்ள, 900 நீதிபதிகளில், 500 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன' என்ற அவரது பட்டவர்த்தனமான அறிவிப்பு, அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீதிபதிகளின் பெயரை குறிப்பிட்டு, வழக்கறிஞர்களே ஊழல் புகாரை முன் வைக்கின்றனர்; கண்டன தீர்மானங்கள் போடுகின்றனர்; அதை, இன்னும் வெட்ட வெளிச்சமாக்க, ஊர்வலம் போகின்றனர்.வழக்கறிஞர்களே, இப்படி கிளம்பி விட்டால், மிச்சமிருக்கும் நீதித்துறையின் மாண்புகள் என்னாவது? உடனடியாக விசராணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். புகாருக்கு ஆளான நீதிபதிகளை, கூண்டில் நிறுத்த வேண்டாம்; குறைந்தபட்சம் கூப்பிட்டாவது விசாரிக்கலாம்.

நீதித்துறை பற்றி, ஒட்டுமொத்தமாக சிந்திக்க வேண்டிய, சரி செய்ய வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது. இனியும் மறைப்பதோ, மறுப்பதோ, இன்னும் புரையோடிப் போகத்தான் வழி காட்டும். புண்ணுக்கு மருந்து போடமல், அதை மறைக்க, புதுச்சட்டை வாங்கிப் போடும் வேலைகளால், யாருக்கு என்ன லாபம். சீர் செய்ய வேண்டிய இடத்திலிருப்பவர்கள், சிந்திக்க வேண்டியது முக்கியம்; செயல்பட வேண்டியது அதைவிட முக்கியம்.
இ - மெயில்: komalrkanbarasangmail.com
- கோமல் அன்பரசன் -
சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement