Advertisement

காவல் தெய்வங்களை கவனிப்போம் ..!

மருத்துவர் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்த போது ஓர் அரிய காட்சியை காண முடிந்தது. அவர் ஓய்வு பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர். அவரது மனைவி, மருத்துவத்துறையில் உயர் பதவியில் இருப்பவர். இவர்களுக்கு பேரன், பேத்தி உண்டு. இருந்த போதிலும், 80 வயது நிரம்பிய தன் தாயை, மிக கவனமுடன் கவனித்துக் கொண்டார்.

பெற்றோரை கவனிக்கும் போது, நாம் அவர்களை தனி அறையில் முடக்காமல், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் அவர்களை பங்கு பெறச் செய்து, அவர்களுக்கு உரிய இடத்தைக் கொடுக்க வேண்டும். இது நமது கடமை. இந்த நண்பர் வீட்டில், நாங்கள் பேசிய பேச்சுக்கள் வயது முதிர்ந்த அம்மாவுக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும், அவர்களும் கலந்து கொண்டார்கள்.

சிலர் வீடுகளுக்கு நாம் விருந்தினராகச் செல்லும் போது, பெற்றோரை 'உள்ளே அறைக்குச் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். 95 வயது நிரம்பிய இறந்த தன் தாய்க்காக, 76 வயது நிரம்பிய மகன் கதறி அழுத சம்பவத்தை பார்த்திருக்கிறேன். பெற்றோர் இறக்கும்போது, கதறி அழுவதே அநாகரிகம் என்று நினைக்கும் மகன்களுக்கு இடையில், இப்படி ஒரு காட்சி. பாசம் வாழ்கிறது

நண்பர் ஒருவர், தனது தந்தைக்கு சாதாரண ரத்த பரிசோதனைகள் செய்ய வேண்டி இருந்தாலும், டில்லியில் இருந்து விமானம் மூலம் வந்துவிடுவார். 'அவசியம் இல்லை தான்; இந்த உலகிற்கு நான் வந்தது அவரால் தான். இது என் கடமை' என்பார்.முதியோர் இல்லங்களில், குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் பெருகி விட்டனர் என்றாலும், இப்படியும் சிலர் இருப்பது, இன்னும் ஈரமும், பாசமும், அன்பும் சமூகத்தில் நிறைந்து இருப்பதை உணர்த்துகிறது.

சர்க்கரை, ரத்த கொதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் என நோய்கள் பாரம்பரியம் சம்பந்தப்பட்டது என விஞ்ஞான முறையில் உறுதி செய்யப்பட்டு விட்டது.நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனைக்கு செல்லும்போது அவர் கேட்கும் முதல் கேள்வி,உங்களின் பெற்றோர்களுக்கோ, சகோதரர்களுக்கோ, மாரடைப்பு, சர்க்கரை நோய் உண்டா என்பது தான்.

தாத்தாவின் மரபணுக்கள், பேரனுக்கு வர நிச்சயம் வாய்ப்பு உண்டு. இதுவே பாரம்பரிய அணுவின் சக்தி.பேரனின் ஒவ்வொரு திசுக்களிலும், தாத்தாவின் பாரம்பரிய அணு இருக்கும் போது, 'தாத்தாவிடம் பேசாதே, உதவி செய்யாதே' எனக் கூறுவது தவறாகும். சுருக்கமாகச் சொன்னால் உங்கள் மகனின் வாழ்நாளை நீட்டிக்க முக்கியமான காரணி, பெற்றோர்களின் வாழ் நாளை அதிகரிப்பதும் ஆகும். இதற்கு சர்க்கரை வியாதியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

நாம் உருவாக்கும் நோய் நமது முதாதையர்கள் நடந்து, ஓடிச் சென்று செய்த வேலைகளை நாம் தற்போது கார், இருசக்கர வாகனங்கள் மூலமாக செய்கிறோம். ஆனால் நமக்குள் இருப்பது நம் தாத்தாவின் பாரம்பரிய அணு. நமது இயற்கைக்கு மாறான பழக்க, வழக்கங்கள் மூலம் பாரம்பரிய அணு மாற்றத்தை ஏற்படுத்துகிறோம். இதே போல் பல நோய்களை நாமே உருவாக்குகிறோம்.எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் காவல் தெய்வம் உண்டு. நம்மை காக்கும் நமது காவல் தெய்வம் பெற்றோர்கள் தான். வயதான பெற்றோரிடம், அதிகமான நேரம் நம்மால் செலவழிக்க முடியாமல் போனாலும், முடிந்த அளவு அவர்களை கவனிக்கும் போது குடும்பம் கோயில் ஆகிறது.

வயது அதிகமாகும் போது உடலில், மனதளவில் பெற்றோர்களுக்கு மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும்படி உங்களை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும்போது அதை கண்டு மகிழ்ச்சிஅடையும் நாம், நம்மை பெற்ற பெற்றோர்களை வயது முதிர்ந்து முடங்கிய நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தவழும் போதும், தள்ளாடும் போதும் பார்த்து எரிச்சல் அடைகிறோம்.
முதியவர்களை பேணி காக்கும் முறைகள் தினமும் ஒரு முறையாவது, அவர்களின் உடல் நலத்தை பற்றி விசாரியுங்கள். வாரத்தில் இரு முறையாவது அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்துங்கள், அவர்களுடைய ஆடைகள் சுத்தமாகவும், மிகவும் இறுக்கம் இல்லாததாகவும் பார்த்து கொள்ளுங்கள். குளிக்கும் அறை, கழிப்பறை வழுக்காமல் இருக்கும்படி பராமரிக்க வேண்டும். 'வெஸ்டர்ன்' கழிப்பறையை பயன்படுத்த பழகி கொடுங்கள்.வேலையை இலகுவாக செய்ய ஏற்பாடு செய்யுங்கள். முதியோர்களுக்கு மூட்டு வியாதி இருக்கும்; உங்கள் அவசரத்திற்காக அவர்களை அவசரப்படுத்தாதீர்கள்.

அன்றாடம் பயன்படுத்தும் ஆடை, கண்ணாடியை தனியாக வைக்க வேண்டும். மாத்திரைகளை அவர்கள் சுலபமாக எடுத்து உட்கொள்ளும் வகையில் காலை, மாலை என தனியாக டப்பாக்களில் எடுத்து வைத்து விட வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் காண்பித்து முழு பரிசோதனை செய்ய வேண்டும். அதிக வெயிலிலோ, குளிரிலோ, வெளியே செல்ல அனுமதிக்க கூடாது.சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்தவர்களின் கால்களை பாதுகாப்பது அவசியம்.

வயிற்று போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். இல்லையென்னறால் சிறுநீரக நோய் ஏற்பட கூடும். வெளியூர் செல்லும் போது அவர்களிடம் தகவல் தெரிவித்து சென்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

முதியோர்களுக்கான உடற்பயிற்சி நடைப்பயிற்சி, நீச்சல், மெதுவாக செய்யப்படும் தசைப் பயிற்சிகள், யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் வயதானவர்களுக்கு மனம் மற்றும் உடல்
வலிமையை கொடுக்கும். 60 வயதிற்கு மேல் காது கேட்கும் தன்மை குறையும். எனவே கேட்கும் திறன் சோதனை மேற்கொள்ள வேண்டும்.காது கேட்கும் கருவி பயன்படுத்தலாம். காது கேட்கும் கருவி பயன்படுத்துவதை தகுதி குறைவாக நினைக்கும் பெரியோர்களும் உண்டு. அவர்களுக்கு அதைப்பற்றி விளக்கிச் சொன்னால் புரிந்து கொள்வர்.

இப்படி முதியோரான பெற்றோர்களை அக்கறையுடன் கவனியுங்கள். அந்த பாசமும், நேசமும் உங்களையும் சந்ததியினரையும் வாழ வைக்கும்.

டாக்டர் ஜெ.சங்குமணிசர்க்கரை நோய் நிபுணர்மதுரை. sangudryahoo.co.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement