Advertisement

சிரிப்பு வெடிகளுடன் சிறக்கட்டும் வாழ்க்கை!

இது பண்டிகை காலம். தீபாவளி கொண்டாடிய மகிழ்ச்சியில் இருப்பீர்கள். எங்கும் உற்சாகம் நிரம்பி வழிகிறது.

''செடியின் சிரிப்பு பூக்கள்
மேகத்தின் சிரிப்பு மின்னல்
கடலின் சிரிப்பு நுரைகள்
மனிதனின் சிரிப்பு மகிழ்ச்சி''-எனவே இன்று சிரிப்புத்தோரணங்களாகவே தொகுத்து தர இருக்கிறேன். வாழ்க்கைப் பயணத்தில் வழியெல்லாம் நகைச் சுவைகள் பரவிக் கிடக்கின்றன. கண்டு கொண்டவர்கள் களிப்படையலாம். மற்றவர்களுக்கும் சொல்லி சந்தோஷப்படுத்தலாம்.

திருமண சந்தோஷம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று
சொல்வார்கள். ஆனால், இப்போது ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. அதற்கு தான் பிரச்னை வருகின்றன. கல்யாணத்தை கிருஷ்ண பட்சத்தில் வைத்துக் கொள்வது நல்லதா? சுக்ல
பட்சத்தில் வைத்துக் கொள்வது நல்லதா? என ஒருவர் இன்னொருவரிடம் யோசனை கேட்டார். 'இரண்டையும் விட குறைந்தபட்சத்தில் வைத்துக் கொள்வது தான் நல்லது' என்று பதில்
வந்தது.

ஒரு இளைஞர் ஒரு தரகரிடம் வரதட்சணை அதிகமாகக் கிடைக்கக் கூடிய பெண்ணாகப் பார்க்கச் சொல்லியிருந்தார். சில நாட்கள் கழித்து வந்த தரகர் 'ஒரு பொண்ணு பார்த்திருக்கேன்; கொஞ்சம் கருப்பாக இருக்கும், இரண்டு லட்சம் ரூபாய் வரதட்சணை தருவார்கள், இன்னொரு பெண் இருக்கு; இன்னும் கொஞ்சம் கருப்பாக இருக்கும் ஆனால், மூணு லட்சம் ரூபாய் வரதட்சணை கிடைக்கும் எதை ஏற்பாடு செய்யட்டும்' என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞர் என்ன சொன்னார் தெரியுமா? 'இன்னும் கொஞ்சம் கருப்பாவே பாருங்க'. ஒரு தரகரிடம் கையில் பசையுள்ள மாப்பிள்ளையாப் பாருங்க என்று சொன்னதற்கு வால் போஸ்டர் ஒட்டுகிற மாப்பிள்ளையை கையில் பசையோடு கூட்டிக் கொண்டு வந்து விட்டார் தரகர்.

ஒரு பெண்ணுக்கு நுாறு பவுன் நகை போடுவதாக பேசி முடிக்கப்பட்டது. அவை என்னென்ன நகைகளாக இருக்கும் என்று அறிய மாப்பிள்ளை வீட்டாருக்கு ஆசை. கழுத்தில் என்ன
போடுவீங்க? காதுல என்ன போடுவீங்க? என்று கேட்டார்கள். பதில் சொன்ன பெண்ணின் தந்தை 'நீங்க என்ன போடுவீங்க' என்று கேட்டார்.'எல்லாம் சரியா இருக்கான்னு எடை போடுவோம், இல்லேன்னா சண்டை போடுவோம்' என்றார். முறை மாப்பிள்ளை ஒருவர் தன் மாமனாரிடம் வந்து 'மாமா எந்த நகை நட்டுமில்லாமல் உங்க பெண்ணை நான் கட்டிக்கிறேன்.

ஆனால், ஊரு உலகத்துக்காக ஒரே ஒரு நகை மட்டும் பண்ணிப் போட்டாப் போதும். இடுப்புக்கு ஒரு ஒட்டியாணம் போதும்' என்றதும் மாமனார் ஆடிப்போயிட்டார். ஏன்னா பெண்ணின் எடை 150 கிலோ. அது கூட இப்போ வேண்டாம் மாமா வளைகாப்பு சமயத்துல போட்டாப் போதும். மாமனார் தலை சுற்றியது.

இனிக்கும் இல்லறம்: இல்லறத்தில் மகிழ்ச்சி எப்போது வரும்? புடவை பட்டு கொடுத்தால் வருமா? நகை நட்டு கொடுத்தால் வருமா? சீர்வரிசை தட்டு கொடுத்தால் வருமா?
எல்லாவற்றையும் விட கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் வரும்.உங்கள் வீடு எப்படி? மதுரையா? சிதம்பரமா? என்று கேட்பதுண்டு. மனைவி கை ஓங்கியிருந்தால் அது மதுரை, கணவன் கை ஓங்கியிருந்தால் அது சிதம்பரம். ஒருவர் மூன்றாவதாக ஓர் ஊரைச் சொன்னார். 'தஞ்சாவூர்' ஆம், தலையாட்டி பொம்மை.

கணவனை கைக்குள் வைப்பதற்கு, மனைவிக்கு உள்ள ஒரு வித்தை சமையல் கலை. பெண்கள் அதிகம் படிக்க வேண்டும் என்பதற்காக சமையலைக் கற்றுக் கொள்வதில்லை. அதனால் வரும் வினையைப் பாருங்கள்.கல்யாணம் ஆன புதிதில் தனிக்குடித்தனம் போனது தம்பதி. இதை
கொண்டாட முதலில் பால் பாயசம் வை என்றான் கணவன். அவள் இனிமேல் தான்
சமையலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

'சமைத்துப்பார்' என்ற புத்தகத்தைப் பார்த்து சமைக்க தொடங்கினாள். கணவன் ஹாலில் நாளிதழ் படித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் சமையலறையில் பாயாசம் ஒரு தரம், பாயாசம் ரெண்டு தரம், பாயாசம் மூணு தரம் என்று சத்தம் வந்தது. உள்ளே ஓடிய கணவன் பதட்டத்தோடு 'என்ன இது ஏலம் போடுற மாதிரி கத்தின' எனக் கேட்டான். 'புத்தகத்தில் இருக்கிறபடி தான் பண்ணினேன்' என்றாள். கணவன் புத்தகத்தை வாங்கி படித்தான். பாயாசத்தை இறக்கும் போது ஏலம் போட்டு (ஏலக்காய்) இறக்கவும் என்று எழுதப்பட்டிருந்தது. கணவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

உங்களுக்கும் தானே?!:மாமியாரும் மருமகளும் இப்போது ஒரு கருத்துச் சொல்லப்படுகிறது. மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதைவிட மாமியாருக்கும்,
மருமகள் ஆகப்போகிறவர்க்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்தால் நல்லதாம். மாமியாருக்கு கையிலும், மரு மகளுக்கு உதட்டிலும் தேள் கடித்து விட்டது. டாக்டரிடம் போனார்கள். உங்களுக்கு உதட்டில் எப்படி தேள் கொட்டியது என டாக்டர் கேட்டார். 'மாமியாரை கடித்த தேளுக்கு நன்றி சொல்ல முத்தம் கொடுத்தேன், உதட்டில் கொட்டிவிட்டது'. இந்த வஞ்சம் தேவையா?

மாணவப் பருவம் :மாணவப் பருவம் மகத்தானது. ஆனால், பல மாணவர்கள் ஆசிரியருக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஒரு மாணவர் ஆசிரியரைப் பார்த்து இரவு உணவுக்கு வீட்டுக்கு வருமாறு அழைத்தார். என்ன விசேஷம் என்று ஆசிரியர் கேட்ட போது, 'என்னோட அப்பா
ராஜபாளையத்திலிருந்து ஒரு நாய் வாங்கிட்டு வந்திருக்கார், அந்நியர்கள் வந்தால் கடிச்சு
குதறிடுமாம். அது உண்மையா என தெரிஞ்சுக்கத் தான் உங்களை கூப்பிட்டேன்' என்றானாம்.

இப்போதுள்ள மாணவர்களுக்கு ஆற்றலை விட சாமர்த்தியம் தான் அதிகம் இருக்கிறது. தேர்வில் சரித்திரப் பாடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. 'இரண்டாம் குலோத்துங்க அரசன் பற்றி இரண்டு வரி எழுதுக'. பாடத்தை சரியாகப் படிக்காவிட்டாலும் சாமர்த்தியமாகப் பதில் எழுதினான் மாணவன்.

இரண்டாம் குலோத்துங்க அரசன் என்பவன் முதல் குலோத்துங்க அரசனுக்குப் பிறகு பிறந்தவன். மூன்றாம் குலோத்துங்க அரசனுக்கு முன்பு பிறந்தவன். ஆசிரியர் என்ன பாவம் செய்தாரோ? நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றி சிறு குறிப்பு வரைக?-இது கேள்வி. மாணவனின் விடை: அது நாலாயிரம் பாடல்களைக் கொண்டது.

திவ்யமாக இருக்கும் பிரபந்த வகையைச் சேர்ந்தது. கேள்வியிலிருந்தே பதிலை எழுதி விட்டான். கிரிக்கெட் விளையாட்டை பற்றி ஒரு கட்டுரை எழுதுக? -இன்று மழை
பெய்வதால் ஆட்டம் கிடையாது. இத்தகைய சாமர்த்தியத்தை மாணவர்கள் ஆற்றலாக
மாற்றினால் நிரந்தர வெற்றி கிடைக்கும்.

நல்ல மனசு :தீபாவளிக்கு வெடிகள் போட்ட ஒரு சிறுவன் மீதமிருந்த வெடிகளை நாளைக்கு வெடிக்கலாம் என்று நினைத்து, பாட்டியிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொன்னான். மறு நாள் கேட்டான். 'வெடிகளை பிரிட்ஜில் பத்திரமா வைச்சிருக்கேன் எடுத்துக்கோ' என்றாள் பாட்டி.

ஒருவர் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன விசேஷம்? 'பக்கத்து
வீட்டுக்காரருக்கு வெளிநாட்டு லாட்டரியில் ஒரு கோடி விழுந்திருக்காம்'. 'பரவாயில்லையே; அதை நீங்க கொண்டாடுறீங்களே'. 'அதைக் கொண்டாடலை; அந்த சீட்டை அவரு தொலைச்சுட்டாராம், கிடைக்கவேயில்லையாம் அதை தான் கொண்டாடுறேன்'. எவ்வளவு நல்ல மனசு பாருங்க.

ஒருவர் இன்னொருவரிடம் வந்து ஒரு சினிமாவின் பெயரைச் சொல்லி தான் அதில் நடித்திருப்பதாகவும், பார்த்துவிட்டு வந்து நடிப்பைப் பற்றி கருத்து கூறும்படியும் கேட்டுக் கொண்டார். பார்த்துவிட்டு வந்த அவர் உங்களை ஒரு சீன்ல கூட பார்க்க முடியலயே என்றார். 'அந்தப் படத்துல நான் தீவிரவாதியா நடிச்சிருக்கேன், கடைசிவரைக்கும் தலை மறைவாகவே இருப்பேன்'. இவருக்கு தலை சுற்றியது.

இப்படி நம்மைச் சுற்றி சுற்றி வரும் நகைச்சுவை ஏராளம். அவற்றை ரசித்து, சிரித்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம் வாழ்க்கையை!

- முனைவர் இளசை சுந்தரம்
வானொலி நிலைய முன்னாள்
இயக்குனர், மதுரை
98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement