Advertisement

பெண்களின் தீபாவளி

மாதக் கணக்கில் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளிதான். அனைத்து தரப்பு மக்களிடமும் தீபாவளி பரபரப்பும், சந்தோஷமும் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பே தொற்றிக் கொள்கிறது. ஜவுளிக் கடைகளின் தள்ளுபடியாகட்டும், நாளிதழ் சிறப்பிதழாகட்டும் எல்லாம் ரொம்ப அட்வானசாகவே ஆரம்பித்து விடுகிறது. ஒன்று தெரியுமா? இந்தப்பண்டிகையை முறைப்படி கொண்டாட வேண்டிய-வர்கள் பெண்கள்தான். இதற்கான புராண பின்னணி கொஞ்சம் சுவாரஸ்யமானது. சுவாரஸ்யத்திற்கான 'ஒன் லைன்' உங்களுக்குத் தெரிந்தது தான். வில்லனை அழித்த ஹீரோவைக் கொண்டாடுவது தான் தீபாவளி. வில்லன் எவ்வாறு அழிக்கப்பட்டான்? ஏன் அழிக்கப்பட்டான்; அதில் ஹீரோவின் ரோல் என்ன; வில்லனை அழித்தது மட்டும் தானா? என்ற விஷயங்கள் ரசிக்க தகுந்தவை.யார் அசுரர்கள் இந்த உலகத்தை இன்பமயமான பூவுலகமாக்க சிலர் இரவும், பகலும் உழைக்கின்றனர். ஏழை எளியவர்களின் முகங்களில் புன்னகை பூக்க வைக்க, அவர்கள் நாள் தோறும் சிந்தித்துக் கொண்டே இருக்கின்றனர். அனைவரும் நலமாக வாழ விரும்பும் யாவரும் 'தேவர்கள்' என்று புராணம் சொல்கிறது. அதே சமயம் மனதாலும், செயலாலும் தீங்கு நினைத்து ஏழை எளியவர்களை சுரண்டி அவர்களை வதைக்கும் அனைவருமே அசுரர்கள் தான்.ப்ராக்ஜோதிஷபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான் நரகாசுரன். பெயருக்கு ஏற்ற மாதிரி அவன் அசுரன். ஏழை எளியவர்-களையும், பொதுமக்களையும் பொழுது போக்காக துன்புறுத்தி வந்தான். தனக்கு கிடைத்த வரங்களின் பலத்தைக் கொண்டும், தனது ஆயுத பலத்தைக் கொண்டும் கர்வம் பிடித்து அலைந்தான் நரகாசுரன். ரிஷிகளையும், தேவர்களையும், அப்பாவிப் பெண்களையும் கொடுமைப்படுத்தினான். அவர்களை சிறை வைத்தான்.தேவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டார்கள். தங்களை நரகாசுரனிடமிருந்து காத்தருளுமாறு வேண்டினார்கள். ஸ்ரீ கிருஷ்ணரும் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று தேவர்களைப் பாதுகாப்பதற்காக, நரகாசுரனோடு போர் செய்து நரகாசுரனை வதம் செய்தார். அப்படி நரகாசுரனை வதம் செய்த அந்த நாள் தான் தீபாவளி. இது வரைக்கும் சொன்னவை எல்லாம் பழங்கதை தான்.பெண்களின் பங்கு நரகாசுர வதத்தில் சில சிலிர்ப்பான செய்திகள் உண்டு. நரகாசுர வதத்தின் போது கண்ணபிரானின் தேரோட்டியாக சத்யபாமா இருந்தாள். இதன் அர்த்தம் என்னவென்றால் சமூக அநீதிக்கு எதிரான போராட்டத்தில், பெண்களும் சம அளவில் பங்கு பெற வேண்டும் என்பதே. பெண்கள் இணைந்து அநீதிக்கு எதிராக போர் தொடுக்கும் போது தான், அந்தப்போராட்டம் முழுமை பெறுகிறது.அது போலவே அநீதிக்கு எதிரான போராட்டங்களில் சொந்த விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயல்பட வேண்டும். நரகாசுர மோட்சத்தின் போது, நரகாசுரனின் தாய் தனது மகனின் முடிவை, அதர்மம் அழிய வேண்டும் என்பதற்காக விருப்பத்தோடு ஏற்றுக்கொள்கிறாள். 'தன் மகன்' என்ற சொந்த விருப்பத்தைக் காட்டவில்லை.தீபாவளி, பெண்களுக்கானது என்பதற்கு இன்னொரு உதாரணத்தைக் கூறியாக வேண்டும். நரகாசுரனால் அவனுடைய சித்திரவதைக்கு ஆளான 16 ஆயிரம் பெண்கள் சிறைக் கூடங்களில் அல்லல்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் மீட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் செய்து கொள்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.சமூகம் காரணம் நரகாசுரனால் அநீதிக்கு உள்ளான பெண்களை அந்தந்த குடும்பத்தினரே ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களை நெறிபிறழ்ந்தவர்கள் என்று சமூகம் ஒதுக்கித் தள்ளியது. இன்றைக்கும் சீரழிவுக்கு உள்ளான பெண்களை சமூகம் அப்படித்தானே பார்க்கிறது. ஆனால் இந்த சீரழிவுக்கு, பெண்கள் காரணம் இல்லையே; சமூகம்தான் காரணம். அவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது, மறுபடியும் அவர்களுக்கு இழைக்கிற அநீதி அல்லவா? அவர்களுக்கு சமூக அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்ளும் ஆண்கள் வர வேண்டும், உருவாக வேண்டும் என்று வழிகாட்டவே கிருஷ்ண பரமாத்மா அப்பெண்களை ஏற்றுக் கொள்கிறார்.வழுக்கி விழுந்த பெண்களை ஏற்றுக்கொள்பவர்கள், இன்றைக்கும் சமூக சீர்திருத்தவாதியாகத்தானே கருதப்படுகிறார்கள். அப்படியென்றால் இவர்களுக்கெல்லாம் முன்னோடி ஸ்ரீகிருஷ்ணர் அல்லவா? எனவேதான் தீபாவளித் திருநாளில், ஸ்ரீகிருஷ்ணரை பெண்கள் ஏற்றியும், போற்றியும் கொண்டாடுகிறார்கள். அதுபோலவே ஸ்ரீகிருஷ்ணர் காட்டிய வழியில் பெண்களுக்கு உதவ வேண்டியது, ஆண்களின் அதிஉன்னத கடமை.அறிவு விளக்கு தீபாவளி பற்றி இன்னொரு செய்தி. இருள் நீக்கி ஒளி தரும் அகல் விளக்குகளின் வரிசையே தீபாவளித் திருநாள். தீப + ஆவளி என்ற சொல் விளக்குகளின் வரிசையைக்குறிக்கிறது. அறியாமை என்னும் அக இருளை நீக்கவே, அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. சமுதாயத்தில் எவையெல்லாம் இருளாக இருக்கிறதோ, அவையெல்லாம் அறிவென்னும் விளக்கால் அகற்றப்பட வேண்டும்.தீபாவளியைப்பற்றி காஞ்சிப் பெரியவர் பரமாச்சாரிய சுவாமிகள் கூறும் போது “தீபாவளியை 'பகவத்கீதைக்கு தம்பி' என்று சொல்லலாம், ஞான நுால்களில் எப்படி பகவத்கீதை எல்லாவற்றையும் விட தனிச்சிறப்பு வாய்ந்ததோ, அதே மாதிரி பண்டிகைகளில் தீபாவளி சிறந்தது” என்று தெய்வத்தின் குரலாய் ஒலித்திருக்கிறார்.'துலாமாஸ மஹாத்மியம்' என்ற புராணம் ஐப்பசி மாதத்தின் பெருமைகளைக் கூறுகின்ற நுால். அதில் தீபாவளியைப் பற்றிக் கூறும் போது 'தைல லக்ஷீ ஜலே கங்கா' என கூறுகின்றது. கங்கை இல்லாத ஊர்களில் எந்த இடத்தில் இருந்து கொண்டும், தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் கொண்டு, வெந்நீரில் குளித்தால் அன்று கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கிறது.எனவே 'அகல் விளக்கையும்', 'அக விளக்கையும்' அழகாய் ஏற்றுவோம்.--முனைவர் ஆதலையூர் சூரியகுமார்,எழுத்தாளர், மதுரை.98654 02603

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement