Advertisement

கண்ணதாசனின் நூறு ரூபாய்

கவிதைக்காரன் வீதியிலே... கவிதை சமைத்தால் பாராட்டுவாரோ... சீராட்டுவாரோ... சிறந்த கவிதை பாடிய மாணவனுக்கு நூறு ரூபாய் கொடுத்து கண்ணதாசன் வாழ்த்தியுள்ளார். நூறு ரூபாயின் மலரும் நினைவுகளில் மூழ்கிய மதுரை வீரபாண்டிய தென்னவனுக்கு இப்போது வயது அறுபதை தொட்டு விட்டது. கண்ணதாசன் வாழ்த்தியதற்கு ஏற்ப தமிழில் கவிதைகளை அருவியாய் கொட்டுகிறார்.
மதுரை தியாகராஜர் கல்லூரியில் எம்.ஏ., ஆங்கிலம் முடித்து, ஆங்கிலத்தை ஆட்சி செய்த வீரபாண்டிய தென்னவனுக்கு தமிழும் கைகொடுக்க காரணம், அவரது ஆங்கில பேராசிரியர் சக்திவேல். தென்னவனின் கவிதைச் சாரலில் திளைத்தபோது, மென்னடையில் நம்மிடம் பேசினார்.
கல்லூரி இளநிலை முதலாண்டில் நடந்த விழாவுக்கு காமராஜரும், கண்ணதாசனும் வந்திருந்தனர். இருவரையும் யாரென்று அப்போது எனக்கு தெரியாது. ரெகார்ட் பிளேயரில் தட்டு வடிவ பிளாஸ்டிக் ரெக்கார்டில், 'நீராடும் கடலுடுத்த' பாடல் இருந்தது. சக மாணவன் பவ்வியமாய் தட்டை எடுத்தபோது பதட்டத்தில் கீழே விழுந்து தட்டு உடைந்து விட்டது. உடனே எங்கள் ஆசிரியர்கள், 'நீ போய் இறைவணக்க பாடலை பாடு' என்றனர்.
நான் நேராக கண்ணதாசனிடம் சென்று, 'ஒரு எழுத்து சொல்லுங்க, நான் பாடுகிறேன்' என்றேன். என்னை வித்தியாசமாய் பார்த்தவாறு, 'நாவெடுத்து பாடு' என்றார். அவ்வளவு தான் மேடைக்கு சென்று 'நாவினிலே ஒளியாகி...' என சுயமாக சரளமாக பாட ஆரம்பித்தேன். அந்தப் பாடல் 'வானாகி... மண்ணாகி...' போல் இருந்தது.
காமராஜருக்கு யானையை கொண்டு மாலை அணிவித்து வரவேற்றனர். அந்த மாலையை எனக்கு அணிவித்தார், காமராஜர். கண்ணதாசனோ, 'மிகப்பெரிய கவிஞன் ஒருவனை பார்த்து விட்டேன்' என்று சொல்லி, நூறு ரூபாய் நோட்டை பரிசாக தந்தார். பேராசிரியர் அனுமதியின் பேரில் ரூபாயை பெற்றுக் கொண்டேன்.
அனைத்து கல்லூரிகளுக்கான கவிதை நாடகப் போட்டி மதுரை லேடிடோக் கல்லூரியில் நடந்தது. கடைசி நாடகம் எங்களுடையது. நந்திதேவனாக நானும், காதலியாக
இன்னொரு மாணவனும் நடித்துக் கொண்டிருந்தோம். கதைப்படி நாயகி இறக்கும் போது, நான் மடியில் வைத்து பிடித்திருப்பதை போல காட்சி முடியும். மடியில் பிடித்தபிடி
நின்றபோது, திரை மூடவில்லை. வேறு வழியின்றி 'பூத்த முகம் வாடிவிட்டதோ... ஆத்திரத்தில் இறந்து விட்டாயோ' என கவிதை பாடிக் கொண்டே 'என் கண்ணில் திரை... காணவில்லையே திரை' என அங்கலாய்த்தேன். பார்வையாளர்களுக்கும் புரிந்து பலத்த கைதட்டலுக்கு முதல் பரிசை தந்தனர். எம்.ஜி.ஆர்., வெள்ளி சுழற்கோப்பை எங்களுக்கு தான் கிடைத்தது.
பாரத ஸ்டேட் வங்கியில் உதவி தலைமை காசாளராக இருந்தபோது, தாய் மிகவும் உடல்நலமின்றி இருந்தார். அவருக்காக விருப்ப ஓய்வு பெற்று அந்த பணத்தில் செலவு செய்தேன். வீடு, வேலை எல்லாம் போனது. ஆனாலும் தமிழ் என்னை கைவிடவில்லை. கவிதையின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
1991ல் பாவேந்தன் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் மிகச்சிறந்த 100 கவிஞர்களுக்கு அப்போதைய கவர்னர் பீஷ்ம நாராயண சிங் பரிசு வழங்கினார். அதில் நானும் ஒருவன்.
கவிஞர்களை கொண்டு மதுரை மீனாட்சி கோயிலில் மாதந்தோறும் பவுணர்மி கவிதைகள் என தொடர்ந்து 27 மாதங்கள் அம்மன் பாடல்கள் பாடினோம். மாமதுரை கவிஞர் பேரவை மூலம் இளம் தலைமுறை கவிஞர்களை ஊக்கப்படுத்தி பரிசு வழங்கி வருகிறேன். மதுரை தென்றல் விருது வழங்குகிறேன். அந்தாதி கவிதைகளாக 40 புத்தகங்கள் எழுதியுள்ளேன். தமிழும், இறைவனும் என்னிரு கண்கள், என்றார். இவரிடம் பேச 98421 81462.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement