Advertisement

வேட்டுக்கே வேட்டு வைப்போம்!

தீபாவளி, உலகமெங்கும் உள்ள இந்துக்களால், மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இப்பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முன்தினம் வரும். தீபம் - விளக்கு, ஆவளி - வரிசை விளக்கை வரிசையாக வைத்து, சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள், தீபாவளி பண்டிகை என்பது, ஒரு சாரார் கருத்து.

கண்ணபரமாத்மா, நரகாசுரன் என்ற அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று, இன்னொரு சாராரும் கருத்துகின்றனர். புத்தாடைகள், இனிப்பு மற்றும் பலகார வகைகள் கொண்டு, இப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். பல வகையான பட்டாசு வெடித்து மகிழ்வது சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்தமான விஷயம். பட்டாசுகள், தீபாவளி தினத்தன்று தான் அதிகமாக வெடிக்கப்படுகிறது. மற்றபடி, கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சி, அரசியல் கட்சி மாநாடு, தலைவர்கள் செல்லும் பயண வழி, இப்படி மகிழ்ச்சியான தருணங்களிலும்; இறந்தவர்களின் இறுதி ஊர்வலம் போன்ற சோகமான நிகழ்விலும் வெடிக்கப்படுகிறது. பட்டாசு வெடிப்பதும், மத்தாப்பு கொளுத்துவதும், வாண வேடிக்கைகள் செய்வதும், ஒருபுறம் மகிழ்ச்சியானதாக இருந்தாலும், மறுபக்கம், அதில் நிரம்பியுள்ள சோகத்தை, யாரும் கண்டு கொள்வதில்லை. பட்டாசின் பூர்வீகம், சீனா. இப்போதும், கிராமங்களில் சீனி வெடி என்று தான் அழைக்கின்றனர். சீன வெடி, சீனி வெடியாக மருவியுள்ளது.

ஆரம்பகால மனிதன், மிருங்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, வெடி பொருளை பயன்படுத்தினான். பின், சண்டையிடுவதற்கு ஆயுதங்கள் தயாரிப்பில் வெடிப்பொருட்களை பயன்படுத்தப்பட்டது. பின், அது கொஞ்சம் உருமாறி, மனிதனின் வேடிக்கை வினோதங்களுக்காக பட்டாசு, மத்தாப்புகளாக வடிவம் பெற்று வந்தது.பட்டாசு என்பது கந்தகம், பொட்டாசியம், மெக்னீசியம், பேரியம் மற்றும் அலுமினியம் போன்ற அடிப்படை ரசாயனம் மற்றும் அதன் உப உலோகங்களும், வேதிப் பொருட்களும் கலந்து செய்வது. வெடிகள், மத்தாப்புகள், வாணங்கள் மற்றும் சங்கு சக்கரங்கள், இப்படி ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான ரசாயனங்களின் கலவையை கொண்டது. இதை தீயிட்டு கொளுத்துவதால், வேதிவினை புரிந்து, அதிகமான ஓசையுடன் வெடிக்கிறது. இதன் காதை பிளக்கும் ஓசை, கண்ணை பறிக்கும் ஒளி, மூச்சைத்திணற செய்யும் புகை என்று, உடலுக்கு கெடுதலான மூன்று வகை செயல்களை உண்டாக்குகிறது.

ஒரு கிராம் அளவுள்ள வெடி பொருள் வெடித்து, 600 மில்லி லிட்டர் அளவுள்ள வாயுவை உண்டாக்குகிறது. இந்த, 600 மில்லி லிட்டர் அளவு வாயு அல்லது புகை, அதே இடத்தில் உள்ள காற்றில் பரவி, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாசு படுத்தப்படுகிறது.பட்டாசு மற்றும் இதர வெடி பொருட்களை தயாரிக்க பயன்படும், 'கந்தகம்' மனிதனுக்கு ஏற்படும் தோல் நோய்களுக்கு, மேல் பூச்சு மருந்தாக பயன்படுகிறது; பயிர்களுக்கு உரமாக பயன்படுகிறது; மெக்னீசியம் என்ற வேதிப்பொருள், இன்றைய காலகட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இயக்கும் லித்தியம் பேட்டரிகளையும், மற்ற வகை பேட்டரிகளையும், மருந்து தயாரிக்கும் மூலப் பொருட்களை தயாரிக்கவும் பயன்படுகிறது.பட்டாசு வகைகளை வெடிப்பதால், நம் சுற்றுப்புறத்தில் உள்ள காற்று மண்டலம், புகை மற்றும் ஒலியால் மாசுபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன், பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட காயங்களுடனும், கண்ணில் ஏற்பட்ட பார்வை கோளாறு சம்பந்தமாகவும், ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்பட்ட ஒவ்வாமையாலும் மற்றும் பிற உடல் நல கோளாறுகளாலும், நோயாளிகள், மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றனர்.

தீபாவளி காலங்களில், அதிகப்படியான புகையை சுவாசிப்பதால், நிமோனியா மற்றும் சளி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. நுரையீரல் மற்றும் சுவாச பாதையில் நோய் ஏற்படும். காசநோய் உடையவர்கள், வழக்கமாக எடுக்கும் மருந்துகளை விட, இரு மடங்கு மருந்துகளை எடுக்க வேண்டியிருக்கும். காற்றில், நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் சல்பர்டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக, கண் கோளத்தில் வெடிப்புகள் ஏற்படுகின்றன; கண் வெளிச்சவ்வு கார்னியாவில், எரிச்சல் உண்டாக்குகிறது.பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிகப்படியான ஓசை, செவி சவ்வில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பாதிப்பை ஏற்படுத்தும். பிறந்த குழந்தைகளுக்கு, நிரந்தர காது கேளாத தன்மையை உண்டாக்கும். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள், அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.பட்டாசு, புஸ்வாணம் வெடிக்கும் போது ஏற்படும் அதிகப்படியான வெளிச்சம், பார்வையை மங்க செய்து விடும். மின்னலை நேரடியாக பார்த்தாலோ அல்லது வெல்டிங் பட்டறையில் வெல்டிங் செய்யும் போது வெளிச்சத்தை நேரடியாக பார்த்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ, அதேபோன்ற பாதிப்பு ஏற்படும்; சில சமயங்களில், நிரந்தரமாக பார்வையை இழக்கச் செய்து விடும்.

தீபாவளி தினத்திற்கு, நாம் வெடிக்கும் பட்டாசு சத்தத்திற்கு பயந்து, நம் குடியிருப்புக்கு அருகில் மரங்களில் மற்றும் சந்து பொந்துகளில் வசிக்கும் பறவைகளும், விலங்கினங்களும் அன்று படும்பாட்டை பாருங்களேன். நம் வீட்டு வளர்ப்பு நாய்களும், பூனைகளும், கிளிகளும் கூட, சோகத்தில் ஆழ்ந்திருக்கும்.
பட்டாசில் கலந்திருக்கும் உயிர் காக்கும் மருந்து பொருட்களை, நாம் வேடிக்கை விளையாட்டு என்ற பெயரில் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். இதனால், இன்றைய தலைமுறை ஆரோக்கியமாக வாழ்ந்து விட்டு போய் விடும்; ஆனால், எதிர்கால சந்ததியினருக்கு, இந்த வேதிப் பொருட்கள், மருந்து பொருட்கள் கிடைக்காமல் போய் விடும் என்பதை உணர வேண்டும். பட்டாசு வெடிப்பதால் ஒளி, ஒலி மற்றும் புகை மாசு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், டன் கணக்கில் காகித குப்பை சேர்ந்து, இருப்பிடங்களை மாசுபடுத்துகிறோம்.

உயர்ந்த அந்தஸ்தில் உள்ள அதிகாரி, பெரிய பணக்காரர் அல்லது தொழிலதிபர், இவர்களை தீபாவளியன்று காணவரும் கீழ்நிலை அதிகாரிகள், 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவில்லாத மதிப்புள்ள பட்டாசு வகைகளை வாங்கி வந்து அன்பளிப்பாக கொடுப்பர். உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளை வெடிப்பதை தவிர்க்கவும், மனித சமுதாயத்திற்கும், அதை சார்ந்த, பிற உயிர்களுக்கும், மருந்தாக பயன்படும் வேதிப்பொருட்கள் வீணாவதை தடுக்கவும், பட்டாசு பொருட்களுக்காக செலவழிக்கப்படும் பணத்தை, பயனுள்ள வகையில் செலவழிக்கலாம்.பட்டாசுக்காக செலவிடப்படும் பணத்தை, அனாதை இல்லங்கள், முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் ஆகியவற்றிக்கு நன்கொடையாக வழங்கலாம்; சிறை கைதிகளுக்கும், உங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் வசிக்கும் ஏழைகளுக்கு உடைகள், பாத்திரங்கள் மற்றும் வீட்டுக் உபயோக பொருட்களை வாங்கித் தரலாம்; அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஏழைகளுக்கு தேவையான மருந்து பொருட்களை வாங்கி கொடுக்கலாம்; ஏழை பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வாங்கி கொடுக்கலாம்.உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளை வெடிப்பதை தவிர்ப்போம். மனித சமுதாயத்துக்கும், அதை சார்ந்த பிற உயிரினங்களுக்கும், மருந்தாக பயன்படும் வேதிப்பொருட்கள் வீணாவதை தடுப்போம். தீபாவளி பண்டிகை என்றில்லாமல், எந்த நிகழ்ச்சியானாலும், வேட்டுகள் வெடிக்க வேண்டாமென முடிவு செய்து, வேட்டுக்கே வேட்டு வைப்போம்.இ.மெயில்: dev.pandyrediffmail.com

- தேவ்.பாண்டே -
சமூக ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement