Advertisement

தமிழ் திரைப்படங்களும், மதுக்கடைகளும்

தமிழகத்தில் குடிகாரர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகம் எங்கே போகிறது என்று நினைக்கும்போது பயமாக உள்ளது. இன்றைய நிலையில் ஆல்கஹால் என்ற பெயரைவிட அத்தனை பேருக்கும் 'டாஸ்மாக்' என்ற பெயர்தான் தெரிந்த
ஒன்றாகிவிட்டது. 'மது குடிப்போம்' என்று சொல்வதில்லை. 'டாஸ்மாக்கிற்குப் போவோம்' என்றுதான் சொல்கிறார்கள். ஊரில் எத்தனை பள்ளிக்கூடம் உள்ளது என்று கேட்ட காலம் போய், எத்தனை 'டாஸ்மாக்' கடைகள் உள்ளன என்று எண்ணினால் 'டாஸ்மாக்' எண்ணிக்கை தான் கூடுதலாக இருக்கும்.இது, இன்றைய இளைய தலைமுறையினரிடையே ஏதோ மிகவும் தேவையானது போலவும், மது இல்லாவிட்டால் வாழ்வில் சந்தோஷப்பட முடியாது என்பது போலவும் மாயையை திரைப்படங்கள் உருவாக்குகின்றன. மதுவின் ஆதிக்கம் திரைப்படத்தில் இல்லை என்றால், படம் ஓடுவதில்லை என்ற முடிவுக்கு பெரும்
பாலான திரைப்பட இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் வந்து விட்டார்கள். அதனால் தான் படத்தில் ஒரு பாடலிலாவது 'பாட்டிலை' காட்டுகிறார்கள். சோகமானாலும், சந்தோஷமானாலும், பிரச்னையானாலும் ஹீரோ சந்திக்கும் இடங்கள், பெரும்பாலான திரைப்
படங்களில் டாஸ்மாக் கடைகள் தான். இவ்வகை செயல்கள் இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை, இயக்குனர்கள் சமுதாயக் கருத்தோடு பார்க்கிறார்களா என்பது பெரிய கேள்விக்குறி.
திரைப்பட தாக்கம்
உலகில் எங்கும் திரைப்படம் என்பது சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவும், வெளிப்பாடாகவும், மாற்றத்திற்கானதாகவும் இருக்கும், இருக்க வேண்டும். ஆனால் இன்றைய தமிழ் திரை உலகில் இது மிகவும் யோசிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. தமிழர் வாழ்வில் கடந்த 60 வருடங்களில் திரைப்படங்களின் ஆதிக்கம் அதிகம். அதுவும் தென் தமிழகத்தில் கேட்கவே வேண்டாம்.
நல்ல திரைப்படங்கள், நல்ல கருத்துக்களை முன்வைத்து வெளியாகி, வெற்றியும் பெறுகின்றன. அண்மையில் வெளியான 'காக்கா முட்டை' என்ற திரைப்படம், நல்ல திரைப்படத்திற்கு எடுத்துக்காட்டு. சமூகத்தில் எங்கு எல்லாம் மாற்றம் தேவைப்படுகிறது என்பதை மிக அழகாக இயக்குனர் படம் பிடித்து காட்டியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு விருதுகள்
கிடைத்தன,
தயாரிப்பு செலவும் குறைவே. அதே நேரத்தில் ரசிகர்களிடமும் வரவேற்பு இருந்தது. இந்த படங்களை பார்த்து, மதுவை காட்டினால் நம் படம் ஓடும் என்ற நம்பிக்கையில் இருந்து, திரைப்பட இயக்குனர்கள் மாற வேண்டும்.
ஹீரோக்கள் மதுவையும், புகையையும் பயன்படுத்தும்போது பெரும்பாலான நம் இளைஞர்கள், இவர்களைத்தான் ரோல் மாடலாக நினைக்கிறார்கள். இவர்கள் வயது அப்படி. அவர்கள் என்ன திரைப்படங்களில் செய்கிறார்களோ, அதை இவர்களும் நிஜ வாழ்க்கையிலும் செய்கிறார்கள்.
நிஜ வாழ்க்கையில் எப்படி? நாம் திரையில் குடிமகனாக பார்க்கும் ஹீரோக்கள் நிஜ வாழ்கையில் குடிப்பதில்லை. அதை அவர்கள் பெருமையாக வெளியே சொல்லவும் செய்கிறார்கள். பணத்திற்காக நான் எதை வேண்டுமானலும் செய்வேன் என்பது சமுதாயம் சார்ந்த தொழிலுக்கு ஏற்றது இல்லை. எம்.ஜி.ஆரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ரிக் ஷாகாரனாகவும், தொழிலாளியாகவும், முதலாளியாகவும், விவசாயியாகவும், மீனவராகவும் முடிந்த அளவுக்கு எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் எந்த திரைப்படத்திலும் ஒழுக்கம் தவறியும், மது குடிப்பது போலவும் நடித்தது கிடையாது. இதை அவர் சமூகத்தின் மீதான அக்கறை காரணமாகத்தானே செய்தார். அவரின் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் அவர் காட்டிய வழியிலே நடந்தனர். எத்தனையோ ரிக் ஷாகாரர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நியாயம், நேர்மை உடையவர்களாகவே வாழ்ந்தார்கள்.
இதற்கு மூல காரணம் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் தான். இவர்தான் சமூக அக்கறை கொண்ட நிஜ ஹீரோவாக இருந்தார். இன்றைய ஹீரோக்கள், இதை சற்று யோசித்து பார்க்க வேண்டும்.
இன்றைய தமிழ் திரைப்படங்களில், நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவர்கள் ஹீரோவாக தகுதியானவர் இல்லை என்பது போலவும், ஹீரோ டாஸ்மாக் கடையில் சுற்றி வருபவர் போலவும்
காட்சிகளை உருவாக்குகிறார்கள். இது சமூகத்தின் சீரழிவுக்கு உதவுகிறது. தேவைப்பட்டால் சென்சார் போர்டு இத்தகைய விஷயங்களில் தலையிட வேண்டும். இன்றைய இளைஞர்களின் மனதிலும் செயலிலும் நல்ல எண்ணங்களை விதைப்பதற்கு திரைப்படம் ஒரு கருவியாக செயல்படுமானால் அது ஆரோக்கியமான விஷயம் தானே.
இயக்குனரின் அனுபவம் இன்றைய இளம் தலைமுறை இயக்குனர் ஒருவர், தன் வாழ்க்கையில் மதுவினால் ஏற்பட்ட பிரச்னையை கூறுகிறார்...''எனக்கு சொந்த ஊர் உசிலம்பட்டி பக்கம். விவசாயம்தான் பரம்பரை தொழில். அப்பா கான்ஸ்டபிள்; அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் போடுவாங்க. 10 வது படிக்கிறதுக்குள்ள நாலு ஸ்கூல் மாறிவிட்டேன். மதுரையில் பாலிடெக்னிக்கில் சேர்ந்த முதல் வருஷம் அப்பா இறந்துவிட்டார். காரணம் குடிப்பழக்கம். அதனாலேயே இந்த நிமிஷம் வரை மது, சிகரெட்டை நான் தொட்டதே இல்லை. இனியும் தொடமாட்டேன். காரணம், யாரோ ஒரு நடுத்தர வயது மனிதர் போதையில் தள்ளாடி நடந்து போறதை பார்த்தா ஒரு தகப்பன், தன் பிள்ளைகளைத் தவிக்கவிடத் தயாராகிட்டு இருக்கிறார்ங்கிற வலி, மனசை அறுக்கும். அதனாலேயே அதெல்லாம் நான் பழகலை''.
மதுவின் வலியையும் தன் வாழ்கையில் அதன் பாதிப்பையும் எவ்வளவு தெளிவாக, இன்றைய தலைமுறை இயக்குனரே சொல்லியுள்ளார். அந்த இயக்குனர் மணிகண்டன். இவர் இயக்கிய திரைப்படம் தான் 'காக்கா முட்டை'.
உலகிலேயே இந்த நூற்றாண்டின் தலைசிறந்த திரைப்படங்களை வரிசைப் படுத்தினால் இதுவும் வரும். உலகமயமாக்கலின் நிஜமாற்றம், சமூகத்தின் ஒவ்வொரு தட்டு மக்களையும் எப்படி மாற்றுகிறது என்பதையும், அடித்தட்டில் இருக்கும் மக்கள் இதனால் என்ன
மாதிரியான வாழ்க்கை வாழ்கிறார்கள், எப்படி எல்லாம் மாற துடிக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது இப்படம். 'அவார்டு' படமாக மட்டும் இல்லாது வியாபாரரீதியாகவும் மிகப் பெரிய படைப்பை கொடுத்துள்ளார்.
உலகமயமாக்கலில் எந்த மாதிரியான தொழில்களுக்கும், வியாபாரத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை அரசிற்கு மிக ஆழமாக, அழுத்தமாக எடுத்துக் கூறியுள்ளார்.
திரைப்படங்களின் வழியாக நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சமூக மாற்றங்களும் நடத்தலாம் என்பதை, இன்றைய தமிழ் திரைப்பட இளந்தலைமுறை இயக்குநர்கள் உணர வேண்டும். டாஸ்மாக்கிற்கு செல்லும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் இல்லாமல் திரைப்படம் தயாரிக்க வேண்டும். இது, சமூக கடமை என திரை உலகம் உணர வேண்டும்.
-முனைவர்.எஸ்.ராஜசேகர்இயக்குனர்ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், மதுரை. 90958 99955

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement