Advertisement

பழந்தமிழ் இலக்கியமும், புதுக்கவிதையும்!

'திறந்த வெளிக் கவிதை', 'விலங்குகள் இல்லாத கவிதை', 'கருத்துக்களை தம்மைத் தாமே ஆளக் கற்றுக் கொண்ட புதிய மக்களாட்சி முறை', 'சொற்கள் கொண்டாடும் சுதந்திர தின விழா', 'முரட்டுத் தோல் உரித்த பலாச்சுளை', 'எண்ணத்தை அதன் பிறப்பிடத்திலேயே பிடித்துவிடும் கவிதை' என்றெல்லாம் அழைக்கப்பெறும் புதுக்கவிதை காலத்தின் கோலம்; தேவை; கட்டாயம். அது காலத்தைக் காட்டும், காலத்திற்கு ஏற்ற இலக்கியம்.
'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே' என்னும் விதிக்கு ஏற்பக் காலம் உரிய பருவத்தில் பெற்றெடுத்த படைப்பு புதுக்கவிதை. இதில் பழந்தமிழ் இலக்கியத்தின் தாக்கம் உண்டு; புதுமையும் உண்டு. பழம்புதுமை உண்டு; புதுப்பழமையும் உண்டு. மரபின் செழுமையும் புதுமை விழிப்பும் கொண்ட கவிதையே சிறந்த புதுக்கவிதை.
கவிஞர்களின் புலமை மரபுக் கருத்தினை தற்காலப் போக்கிற்கு, - உலக நடப்பிற்கு -ஏற்ற வகையில் மாற்றிப் பாடும் பாங்கினை, இன்றைய புதுக்கவிஞர்களிடம் காண முடிகிறது. முதலில் மரபுக் கவிதை எழுதி, பிறகு புதுக்கவிதைக்கு மாறிய கவிஞர்களிடம் - இலக்கியப் பயிற்சியும் புலமையும்- மேலோங்கிக் காணப்படுகிறது.
“யாயும் ஞாயும் யாரா கியரோ?எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?செம்புலப் பெயல்நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே”என்பது குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்.புதுக்கவிதை கவிஞர் மீராவின் கவிதையில்“ உனக்கும் எனக்கும் ஒரே ஊர் வாசுதேவ நல்லூர்...
நீயும் நானும் ஒரே மதம்... திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகுப்பும் கூட...உன்றன் தந்தையும் என்றன் தந்தையும் சொந்தக்காரர்கள் - மைத்துனன்மார்கள்எனவே செம்புலப் பெயர் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே”
ஊர் பார்த்து, -உறவு பார்த்து, ஜாதி,- மதம், சொந்தம், சொத்து பார்த்து உருவாகும் இன்றைய நவயுகக் காதலின் இயல்பினைச் சங்க காலத்து குறுந்தொகைப் பாடல் பாணியில் படைத்துக் காட்டியுள்ளார் மீரா. ஒளவையார் கவிதை
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்
ஒரு நாளும் என்நோவு அறியாய்
இடும்பை கூர் நல்வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது' என வயிறு படுத்தும் பாட்டை, - வயிற்றால் மனிதன் படும் பாட்டை - பாடினார் ஒளவையார். ஒளவையாரின் இந் 'நல்வழி'ப் பாடலின் சாயலில் ஷண்முக சுப்பையா என்னும் கவிஞர் 'வயிறு' என்ற தலைப்பில் ஒரு புதுக்கவிதை பாடியுள்ளார்.
“தலையைச் சொறி! நாக்கைக் கடி!
பல்லை இளி! முதுகை வளை!
கையைக் கட்டு! காலைச் சேர்!
என்ன இது? வயிற்றைக் கேள்
சொல்லுமது!”
மனிதன் தன் வயிற்றுப்பாட்டிற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது! எப்படியெல்லாம் வாழ வேண்டியிருக்கிறது! இந்தக் கசப்பான உண்மையை இந்த கவிதை நயமாக எடுத்துக்காட்டுகிறது. ஒரு சாண் வயிறு, ஆறறிவு படைத்த மனிதனைப் படுத்தும் பாட்டைப் பாடுவதில் இரு கவிஞரும் ஒத்துச் செல்கின்றனர்.
இயல்பான நகைச்சுவை இயல்பான நகைச்சுவை உணர்வு கொலுவிருக்கும் ஒரு புதுக்கவிதை பெ.சிதம்பரநாதனின் 'மாமனாரும் சிலப்பதிகாரமும்'. ஒரு மாமனாரின் பார்வையில் சிலப்பதிகாரம் உணர்த்தும் செய்தி எதுவாக இருக்கும்?
“கிளை முறிந்து விழுந்தது போல கோவலன் தலை முறிந்து விழுந்தது.நெடுமரம் போல திடுமென நெடுஞ்செழியன் சாய்ந்தான்.கூவியழுத கோப்பெருந்தேவியும் உயிர் பிரிந்தாள்.
கண்ணகியோ விண்ணுலகு விரைந்தாள்; மாதவியோ மகளோடுசந்நியாசியானாள்.”கோவலன் கள்வன் என்று குற்றம்
சாட்டப்பட்டு கொலையுண்டது, தவறான தீர்ப்பு வழங்கிய பாண்டியன் நெடுஞ்செழியன் மாண்டது. கண்ணகி விண்ணுலகு சென்றது, மாதவி தன் மகள் மணிமேகலையோடு துறவு பூண்டது ஆகிய துயர நிகழ்வுகள் எல்லாம் அடுக்கடுக்காக அடுத்தடுத்து எதனால் நிகழ்ந்தன என மாமனார் தன் மருமகனிடத்தில் இப்படி விளக்குகிறாராம்:
“ எல்லாம் எதனால் என்றுமருமகனிடத்தில் மாமனார் விளக்கினார்:'மனைவியின் நகையை விற்றதால் தானே?'”
(அரண்மனைத் திராட்சைகள்)மரபினை மீறும் கவிஞர்கள் இன்றைய புதுக்கவிஞர்கள் தேவை ஏற்படின் மரபினை மீறுவதற்கும் தயங்குவதில்லை. மரபினைச் சிறகாகக் கொண்டு, தேவைப்படின் மரபினை மீறி உயரப் பறக்கவும் அவர்கள் தவறுவதில்லை. புதுக்கவிதையில் தாலாட்டுகள் இடம்பெறும் பாங்கினை இதற்கு குறிப்பிடலாம்.கவிஞர் வைரமுத்து படைக்கும் தாய் ஒருத்தி தன் மகனுக்கு வித்தியாசமான தாலாட்டைப் பாடுகின்றாள். அதில் 'என் தாலாட்டு இசை என்னும் துாக்க மாத்திரை இல்லாதது; உன் விழிப்புணர்வையே பாடு-பொருளாய்க் கொண்டது' என மொழிகின்றாள்.
சங்க இலக்கியம் தலைமக்களுக்கே முதன்மை இடத்தினைத் தந்தது. காப்பிய இலக்கியமும் தலைவனுக்கே சிறப்பிடம் தந்தது. சமய இலக்கியமோ எல்லாம் வல்ல இறைவனையே போற்றிப் புகழ்ந்ததோடு 'மானுடம் பாடேன்' என்றும் அறிவித்தது. பதினேழாம் நூற்றாண்டில்தான் இலக்கியம் மக்களை நோக்கி நடைபோடத் தொடங்கியது.
இருபதாம் நூற்றாண்டின் விடியலிலே பாரதியார் 'எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு' ஆகியவற்றை உடைய பாடல்களைப் புனைந்து தமிழ் மொழிக்குப் புதிய
உயிரையும் ஊட்டத்தையும் தந்தார்.
இச்சூழலில் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய புதுக்கவிதை சாதாரண மனிதர்களின் சாதாரண உணர்ச்சிகளுக்கும் இடம் தந்தது.
'எவரும் பாட்டுடைத் தலைவராக இருக்கலாம். எதுவும் பாடுபொருளாக அமையலாம்' என்னும் ஒரு புதிய மக்களாட்சி முறையினை - அறிமுகப்படுத்தியது. 'அழகை மட்டுமல்ல அழுக்கையும் மூடி மறைக்காமல் கலை நயத்துடன் வெளியிடலாம்' என்னும் நெறியினை - இலக்கிய உலகில் தோற்றுவித்தது புதுக்-கவிதையே!
கவிஞர் தணிகைச் செல்வனின் 'பழசும் புதுசும்' என்ற கவிதையோடு இக்கட்டுரை நிறைவு பெறுவது பொருத்தமாக இருக்கும்.“பழத்தை யாருக்குக் கொடுப்பது என்றுபார்வதிக்கும் பரமனுக்கும் திண்டாட்டம் வந்ததால்புதுக்கவிதைக்கும் மரபுக் கவிதைக்கும்பந்தயம் வைத்தார்கள்; 'மரபு' மயில் வாகனமேறிஉலகைச் சுற்றி வந்து பார்த்த போது
'புதுசு' பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது”- பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், -பேச்சாளர்மதுரை. 94434 58286

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement