Advertisement

செந்தமிழ் வளர்த்த சேதுபதி இன்று பிறந்த நாள்

குலச் சிறப்பும், குடிச் சிறப்பும் கொண்ட சேதுபதிகள் குடும்பத்தில் தோன்றி, நந்தா விளக்காய் விளங்கிய மன்னர் பாஸ்கர சேதுபதி. இவர், மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கும்,
அரசி முத்தாத்தாள் நாச்சியாருக்கும் 3.11.1868ல் பிறந்தார்.சேதுபதிகளில் முதன் முதலில் ஆங்கிலக் கல்வி கற்றவர் மன்னர் சேதுபதி. இவர் சென்னை கிறிஸ்தவ கல்லுாரியில் எம்.ஏ., ஆங்கிலத்தில் உயர்ந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று, ஆங்கில மொழியில் எழுதுவதிலும், பேசுவதிலும் வல்லவராக திகழ்ந்தார். சமய இலக்கியங்கள் கற்றதோடு ஓவியத் துறையிலும் இசை துறையிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். 3.4.1889 ல் ராமநாதபுரம் சமஸ்தானத்தில் மன்னர் பொறுப்பை ஏற்றார்.மன்னர் பாஸ்கர சேதுபதிக்குத் தமிழ் இசையிலும், தமிழ் இலக்கியத்திலும் பயிற்சியும் ஈடுபாடும் மிகுதியாக இருந்தது. தமிழிசைவாணர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்து, அவர்களின் திறமைகளையும், ஆற்றலையும் பலபடப் பாராட்டியும், போற்றியும் பரிசுகள் அளித்தும் ஊக்குவித்து மகிழ்ந்தவர்.
தமிழ் இசை கலைஞர்களை மட்டுமல்லாமல், பிற மாநில கலைஞர்களையும் போற்றியவர். ஒருமுறை மைசூர் சமஸ்தானத்தில் சிறந்து விளங்கிய வீணை வித்துவான் சேஷண்ணாவை அழைத்து, தமது தர்பாரில் வீணை கச்சேரி நடப்பதற்கு ஏற்பாடு செய்தார். வித்துவானும் மன்னர் மீது 'தில்லானா' ஒன்றை அமைத்து இசைத்தார். அவரது இசைப் புலமையை பாராட்டிப் பதினாயிரம் வெண் பொற்காசுகள் வழங்கி கனகாபிஷேகம் செய்து மகிழ்ந்தார். மைசூர் மன்னர் வழங்காத சிறப்பினை மன்னர் பாஸ்கரர் வழங்கி மகிழ்ந்தார்.
பல்லக்கு துாக்கிய மன்னர் சைவத்தையும், தமிழையும் இரு கண்களாக போற்றியவர். ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவினை சிறப்பாக நடத்தி வந்தார்.
தமிழகம் முழுவதும் பல புலவர்கள் அவ்விழாவில் கலந்துகொண்டு, எண்ணிலடங்கா பரிசுகளை பெற்றுள்ளனர். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், பரிதிமாற் கலைஞர் போன்றோர்
கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளனர்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்த புகழுக்கும், பெருமைக்கும் உரியவர் ரா.ராகவ அய்யங்கார். இப்பெரும் புலவரை மதுரை நகரில் முத்துப்பல்லக்கில் அமர வைத்து, அந்த பல்லக்கை மன்னர் பாஸ்கர சேதுபதி சுமந்து சென்றார் எனக் கேட்கும்பொழுது, தமிழுக்கு மன்னர் தந்த சிறப்பு போற்றுதற்குரியது.மேலும், அந்த மகாவித்வானுக்கு ரூ.635ஐ ஆண்டுதோறும் அவர் பெறும் வகையில், ஆவணம் செய்து தமிழுக்கும், தமிழ்ப் புலவர்களுக்கும் பெருமை சேர்த்த நிகழ்வுகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் காணப்படுகிறது.
தமிழ்க் கல்லுாரிகள் இளநிலை வகுப்பில் தமிழ்த் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கம் வழங்கும் வகையில் அறக்கட்டளை அமைத்து தமிழ் நிலைபெறத் துணை நின்றார்.
மதுரை தமிழ்ச் சங்கம் 1893 ல் ஜன., 13ம் நாள் பொங்கல் பண்டிகையன்று தன்னுடைய நாட்குறிப்பில் தன் வாழ்நாளில் 33 சாதனைகளையாவது செய்து முடிக்க இறைவனிடம் வேண்டிக்கொண்டார். அதில், முதன்மையானது 'தமிழின் வளர்ச்சிக்காக தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவுதல்' என்பதாகும். இவரின் இவ்வாசையே மதுரையில் இன்றைய நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாகக் காரணமாக அமைந்தது.இந்த அமைப்பு செயல்பட மன்னர் பாஸ்கர சேதுபதி உதவிகளை வழங்கினார். தாயில்லாச் சேய் போன்று தமிழ்மொழி ஆதரிப்பாரின்றி புறக்கணிக்கப்பட்ட காலத்தில், சேதுபதி செய்த அருந்தவப்பணியே தமிழ்ச் சங்கமாகும்.மன்னர் பாஸ்கர சேதுபதி சைவத்தின் மீது பற்றுக்கொண்டிருந்தாலும், பிற சமயத்தின் கொள்கைகளையும் உணர்ந்திருந்தார். பசுமலை கிறிஸ்தவப் பள்ளியில் கிறிஸ்தவ விவிலியத்தில் உள்ள பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் பற்றி இரண்டு மணிநேரம் ஆங்கிலத்தில் உரையாற்றினார். இந்து சமயச் சான்றோர் ஒருவர், கிறிஸ்தவ சமயக் கோட்பாடுகளின் அடிப்படைகளை வெவ்வேறு பரிமாணங்களின் விளக்கம் அளித்தது அவரின் சமயப் பொதுமைக்கு சான்றாக அமைந்தது.
மனிதத்தை மதித்தவர் 1902ல் மன்னருக்கு மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் பணிசெய்த பணியாளர் காதர் ராவுத்தர் என்பவர், மன்னரிடம் நாகூர் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு போய் வரவேண்டும் என்பதை தன்னுடைய நீண்டநாள் ஆசை என்றும், சென்று வருவதற்கு ரூ.100 பணம் தேவைப்படுகிறது என்று கூறியவுடன் ரூ.2 ஆயிரம் கொடுத்து
குடும்பத்துடன் சென்று திரும்பி வா என்று ஆறுதலாக கூறியவர். இதுபோன்ற செயல்கள், அவர் மதங்களைத் தாண்டி மனிதத்தை உணர்ந்தவர் என்பதைக் காட்டுகிறது.ஆலயங்களுக்கு வழிபட செல்லும் போது ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பொருளை தானமாக கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் கோயிலுக்கு வைரக் கொலுசும், திருப்புல்லானியும்,
ஆதிஜெகந்நாதர் கோயிலுக்கு தாம் அணிந்திருந்த வைரக் கடுக்கனையும் 76 பவுன் தங்கப் பூணுாலையும், வைரக்கிரீடம், ஹஸ்தம் ஆகியவற்றையும் வழங்கினார். மதுரை சொக்கநாதருக்கும், ராமேஸ்வரம் ராஜேஸ்வரி அம்மனுக்கும் தங்க சிம்ம வாகனங்கள் வழங்கினார்.
சிகாகோ நகரில் நடந்த உலகச் சமய மாநாட்டிற்கு வீரத்துறவி விவேகானந்தரை அனுப்பி, அவருடைய உயரிய அறிவாற்றலை உலகோர் அறியும்படி செய்த பெருமை, மன்னர் பாஸ்கர சேதுபதியை சாரும். விவேகானந்தர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வேண்டிய பொருள் உதவி அளித்து, ஆதரித்துப் போற்றிய பெருமைக்குரியவர் மன்னர் பாஸ்கர சேதுபதி.1895 ல் இந்தியா, பாக்கிஸ்தான் வளர்ச்சிக்காக ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தார். மேலும், சென்னை கிறிஸ்தவ கல்லுாரியில் மாணவர் விடுதியும், உயர்நிலைப் பள்ளியும் அமைக்க ரூ.40
ஆயிரமும், முகவையில் தீண்டப்படாதோர் குழந்தைகளின் கல்விக்கு ரூ. 16 ஆயிரமும், மதுரை அமெரிக்கன் மிஷன் மருத்துவமனைக்கு ரூ.6 ஆயிரமும் என்று அவரது நன்கொடைப் பட்டியல் நீள்கிறது.
மறையாத புகழ் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் மன்னர் பாஸ்கர சேதுபதி தங்கியிருந்தார். அப்பொழுது அவருக்கு முதுகில் கட்டி ஏற்பட்டு, 27.12.1903 ல் தன்னுடைய 35வது வயதில் காலமானார்.பாஸ்கர சேதுபதி மன்னரை புகழ்ந்து சேதுபதி கல்லாடக் கலித்துறை, பாஸ்கரபதிகம், பாஸ்கர சேதுபதி இரட்டை மணிமாலை, சேதுபதி நான்மணிமாலை
ஆகிய சிற்றிலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. மன்னர் பாஸ்கர சேதுபதியின் சிறப்பினை பாராட்டி மத்திய அரசு 2004ல் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டு சிறப்பு செய்தது. - ச.மாரியப்பமுரளி, செயலாளர், மதுரைத் தமிழ்ச் சங்கம். 94435 01679.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement