Advertisement

நல்லுறவை வளர்க்க நயம்பட பேசுவோம்

கால் தடுமாறினால் கையூன்றலாம், நா தடுமாறினால் நஷ்டம் தான்என்று சொல்வதுண்டு, சிலருடைய நாக்கு நல்ல நாக்கு இல்லை.
அது பற்றி ஒரு கவிதை...
''நாக்கு, குகைக்குள் புலிவெளியில் வராமலேவேட்டை நடக்கும்!ஈரமான நாக்குதான் பலரின்இதயங்களை எரித்து விடும்எலும்பில்லாத நாக்குத் தான் பலரின்
எலும்புகளை முறித்து விடும்''இப்படிப்பட்ட நாக்குத் தேவையா? அதை அடக்கி நயம்பட பேசினால் நன்மைகள் கிடைக்கும்.இறைவன் நமக்கு அளித்துள்ள அரிய அன்பளிப்பு பேச்சு. மற்ற உயிரினங்களில் இருந்து பிரித்துக் கட்டுவது இந்த பேச்சாற்றல் தான். நயமான பேச்சால் நயவஞ்சகர்களைக் கூட திருத்தி விடலாம். பண்பான பேச்சால் பாவிகளைக் கூட மாற்றிவிட முடியும். கோழைகளை வீரர்களாக்கி விடலாம். ஏழைகளை எழுச்சியுடன் சிந்திக்க வைக்கலாம். அதனால் தான் பேச்சு நம் வாழ்வில் மூச்சாக இருக்கிறது. மனிதனின் தவறுகளில் பெரும்பாலானவை நாவிலிருந்தே உண்டாகிறது என்கிறார் அரிஸ்டாட்டில்.
நாகாக்க'யாகாவராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்பது திருக்குறள். ஜீவிதமும் மரணமும் நாவைப் பொறுத்தது என்கிறது விவிலியம். நாவை அடக்கி ஆளுங்கள்; அதற்கு அதிகாரத்தைக் கொடுத்து விடாதீர்கள். உங்களின் சிந்தனையில் ஆளுகைக்குள் அது இருக்கட்டும் என்கிறார் குருநானக்.
பயன்படுத்தாத வரை, வார்த்தைகளுக்கு நீங்கள் எஜமானர். பயன்படுத்திய பிறகு, அது உங்களுக்கு எஜமானன் என்கிறார் செனகா என்ற அறிஞர். சத்தமாகப் பேசுவதை விட சத்தியமாகப் பேசுவதே சிறந்தது என்கிறார் காந்தி.
திமிர் பேச்சு
ஒரு மிலிட்டரி ஓட்டலுக்குள் ஒரு ரவுடி நுழைந்தார். சர்வரைப் பார்த்து 'ஏம்பா மூளை இருக்கா?' என்று தெனாவட்டாக கேட்டார். 'எனக்கு சாப்பிட மூளை இருக்கா?' 'உனக்கு தலையிலே மூளை இருக்கா? ' இப்படி இரண்டு அர்த்தம் உண்டு.
சர்வர் உள்ளே சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று போனார். திரும்பி வந்து இதற்கு முன்னாடி வந்தவர்களுக்கெல்லாம் மூளை இருந்தது, உங்களுக்குத் தான் மூளை இல்லை என்று இருபொருள் படும்படி ஒரு போடு போட்டார்.
அடக்கமான பேச்சு: அறிஞர் அண்ணாதுரையை நேருவுக்கு ஒப்பிட்டுப் பேசினார்கள். அண்ணா அடக்கமாகச் சொன்னார். ''அவரோடு என்னை ஒப்பிடாதீர்கள்; அவர் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். நான் கொட்டிக் கிடக்கும் செங்கல்''.
தோழர் ஜீவானந்தம் சென்னை வண்ணாரப் பேட்டை தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த காலம். தன்னுடைய தொகுதி மேம்பாட்டிற்காக செய்ய வேண்டிய காரியங்களை சபையில்
எடுத்துப் பேசி கொண்டிருந்தார். அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி குறுக்கிட்டு 'அவரவர் தொகுதிக்கான தேவைகளை மட்டும் பேசிக் கொண்டிருப்பது குறுகிய மனப்பான்மை.
பொதுப்படையாகப் பேச வேண்டும்' என்று கூறினார்.அப்போது ஜீவா ''பொதுப்படையானதை பேசவும் எங்களுக்குத் தெரியும், அதற்கு முன்னால் எங்கள் தொகுதியின் தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் கடமை. உங்களுக்கு அந்தக் கடமை இல்லை. ஏனெனில் நீங்கள் எந்தத் தொகுதியிலும் போட்டியிட்டு தேர்தெடுக்கப்பட்டு வரவில்லை. குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர்'' என்று சுட்டிக் காட்டியதும் அந்த வாதத் திறமையை ராஜாஜியும் ரசித்தார்.
இழிவுப் பேச்சு
ஏளனப் பேச்சு, கேலிப் பேச்சு, தற்காலிக மகிழ்ச்சியைத் தந்தாலும் சில நேரங்களில் தனக்கே வந்து முடியலாம். அறிஞர் பெர்னாட்ஷாவைப் பிடிக்காத ஒருவர் 'முட்டாள்' என்று திட்டினார். இன்னொருவர் 'பைத்தியக்காரர்' என்று திட்டினார். பெர்னாட்ஷா கோபப்படாமல் அவர்கள் இருவரையும் அருகே அழைத்து, நடுவில் நின்று கொண்டு நீங்கள் குறிப்பிட்ட இருவருக்கும் மத்தியில் நான் இருக்கிறேன் என்றாராம்.
இழிவுப் பேச்சு எதிர் விளைவையும் ஏற்படுத்தி விடும். கணவன் கார் ஓட்ட மனைவி அருகில் அமர்ந்து சென்றார். சாலையில் குறுக்கே சில கழுதைகள் நின்றன. 'பாரு உன் சொந்தக்காரர்கள் வழியை மறிச்சுகிட்டு நிற்கிறாங்க' என்றான் கணவன். 'சொந்தக்காரங்க தான். உங்களை கட்டிகிட்டப் பிறகு உங்கள் வழியில் எனக்கு வந்த சொந்தக்காரர்கள்' என்று மனைவி ஒரு போடு போட்டதும் கணவன் அதிர்ந்து போனான்.
பொய்யானப் பேச்சு

பொய் நீண்ட நேரம் நிலைத்து நிற்காது. ஒரு தந்தை மகனைக் கண்டித்தார். 'காலேஜிற்கு போகாமல் நண்பர்களோடு மேட்னி ஷோ சினிமாவுக்கு போனியாமே' என்றார்.நான் போகவே இல்லை என்று சாதித்தான் பையன். 'பொய் சொல்லாதே, என்னோட நண்பர் உனக்குப் பின்னாடி தான் உட்கார்ந்து படம் பார்த்திருக்கார்'. 'அப்படி இருக்காதுப்பா! ஏன்னா நாங்க உட்கார்ந்து இருந்தது தான் கடைசி வரிசை' என்றான் மகன்

சிலேடைப் பேச்சு

கி.வா.ஜகந்நாதன் சிலேடையாகப் பேசுவதில் வல்லவர். சொற்பொழிவுக்காக ஒரு ஊருக்கு ரயிலில் சென்ற அவர் காலையில் இறங்கிய போது வரவேற்க வந்தவர்கள் மாலை அணிவித்தனர். உடனே அவர் 'காலையிலேயே, மாலை வந்துவிட்டதே' என்றாராம்.
அவர் தங்க ஏற்பாடு செய்த வீட்டில் காலை உணவாக உப்புமா கொடுத்திருக்கிறார்கள். 'இது வேண்டாம் தொண்டையில் குத்தும்' என்றார். அது எப்படி? என்று கேட்ட போது ' ஊசியிருக்கிறதே' என்றாராம்.

உடனடிப் பேச்சு

கண்ணதாசன் ஒரு கல்லுாரியின் முத்தமிழ் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். பேசத் தொடங்கும் போது 'பெரியோர்களே, கல்லுாரித் தாளாளர் அவர்களே, நிர்வாகத்தைச் சார்ந்தவர்களே முதல்வர் அவர்களே, பத்திரிகை நண்பர்களே என அனைவருக்கும் வணக்கம் என்றதும் மாணவர்கள் மத்தியில் சலசலப்பு. விழா நடத்துவதே நாம் தான். நம்மைப் பற்றிக் குறிப்பிடவில்லையே என்ற சலசலப்பு தான் அது. இதைப் புரிந்து கொண்ட கண்ணதாசன் உடனே 'மாணவச் செல்வங்களே உங்களைப் பற்றிக் குறிப்பிடாமல் இருப்பேனா? தொடங்கும் போது 'பெரியோர்களே' என்று சொன்னேனே அது உங்களைத் தான்' என்றதும் ஆரவாரம் அலை மோதியது.


புதுமையான பேச்சு

அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த அகில உலக ஆன்மிக மாநாட்டில் பேசிய விவேகானந்தர் 'லேடிஸ் அன் ஜென்டில்மேன்' என்று வழக்கமாகத் தொடங்கப்படும் முறையை மாற்றி 'சிஸ்டர்ஸ் அன் பிரதர்ஸ்' என்று தொடங்கிய போது அனைவரும் ஆர்வத்துடன் வரவேற்றனர்.இப்படி எத்தனையோ வகையான பேச்சு முறைகள் உண்டு. மொத்தத்தில் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் மென்மையாக பேசுங்கள், அது நன்மை தரும். தெளிவாக பேசுங்கள், அது சிறப்பைத் தரும். மரியாதையாகப் பேசுங்கள், உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பிறரைப் பாராட்டிப் பேசுங்கள், பாராட்டைப் பெறுவீர்கள்.
அடுத்தவர் பேச்சை அமைதியாகக் கேட்டு அப்புறம் பேசுங்கள். தயக்கமின்றி பேசுங்கள், தடையில்லாமல் பேசுங்கள், தக்க சொற்களைத் தேர்வு செய்து பேசுங்கள் தகுதி பெறுங்கள். கனிவாகப் பேசுங்கள், காதலிக்கப்படுவீர்கள். அன்பாக பேசுங்கள், ஆதரிக்கப் படுவீர்கள். சில நேரங்களில் மவுனமாக இருங்கள் மகான் ஆகலாம்.- முனைவர் இளசை சுந்தரம்வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்மதுரை, 98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement