Advertisement

பக்கவாதம் உங்கள் பக்கம் வராது...எப்படி இன்று - சர்வதேச பக்கவாதம் விழிப்புணர்வு தினம்

முதுமையில் ஏற்படுகிற ஆரோக்கியப் பிரச்னைகளில் பக்கவாதம் முக்கியமானது. பக்கவாதம் வந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே முழுவதுமாக குணம் கிடைக்கும். பலரையும் இது படுக்கையில் போட்டுவிடும்.

இவர்களுக்கு கை, கால் செயல் இழந்து விடுவதால் குளிப்பது, உடை உடுத்துவது, உணவு உண்பது போன்ற அன்றாடத் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது மனச்சோர்வும் மன அழுத்தமும் இவர்களைப் பெரிதும் பாதித்து வாழ்க்கையே வெறுத்துவிடும்.

அதேநேரத்தில் இதை எளிதாக தடுத்து விடவும் முடியும். எப்படி?எது பக்கவாதம்:மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து அப்பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால், முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் 'பக்கவாதம்' என்று சொல்கிறோம். மூளையை வலது, இடது என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக வலது பக்கம், பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம் பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.

எப்படி வருகிறது பெருமூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்து அடைத்துக் கொள்ளும்போது, அல்லது இதில் ரத்தக்கசிவு ஏற்படும்போது, அந்தப் பகுதிக்கு ரத்தம் ஓட்டம் தடைபடுகிறது. இதனால் அங்குள்ள மூளை செல்கள் செயலிழந்துவிட, அந்தப் பகுதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உடல் உறுப்புகள் ஓட்டுநர் இல்லாத பேருந்து போல செயலற்றுப்போகும். முக்கியமாக உடலின் ஒரு பக்கத்தில் கை, கால் மற்றும் முகத்தில் பாதிப்பகுதி செயலிழந்துவிடும். ஆகவேதான் இந்த நோய்க்குப் 'பக்கவாதம்' என்று பெயர் வந்தது.
காரணங்கள் பக்கவாதம் வருவதற்கு வயது ஒரு முக்கியக் காரணம். ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் பெற்றோர்களுக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால் அந்தக் குடும்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும் இந்த நோய் வரலாம். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வுக் கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்றன. புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன் ஆகியவை பக்கவாதம் வருவதைத் துாண்டுகின்றன. மூளையில் ஏற்படும் தொற்று, தலைக்காயம் போன்றவற்றாலும் பக்கவாதம் வரலாம்.

முன் அறிவிப்புகள் பக்கவாதம், பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது. ஆனால் நோயாளி நன்றாக யோசித்துப் பார்த்தாரென்றால், முழுமையான பக்கவாதம் வருவதற்கு முன்பு, அவருக்கு முன்னறிவிப்பு செய்வதைப்போல, சில அறிகுறிகள் அவ்வப்போது தோன்றி மறைந்திருக்கும்.

அந்த அறிகுறிகள் இவை: வாய் கோணுதல், வார்த்தைகள் குழறுதல், கால் தடுமாற்றம், பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நொடிகள் பேச்சு நின்றுபோவது, பார்வை திடீரென்று குறைந்து போவது, இரட்டைப் பார்வை ஏற்படுவது, நடந்து செல்லும்போது தலைசுற்றுவது, உணவை வாய்க்குக் கொண்டு செல்லும்போது கை தடுமாறுவது, கையெழுத்துப் போடும்போது கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காதது, வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி.இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தெரிந்தால்கூட மிக விரைவாகச் செயல்பட்டு, பக்கவாதத்துக்குச் சிகிச்சை அளிக்கும் வசதியுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

காரணம், இந்த நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள், தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாக செயலிழந்துவிடும். எந்த அளவுக்குக் காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறார்களோ அந்த அளவுக்கு பக்கவாதப் பாதிப்பு குறையும். இந்தப் பொன்னான நேரத்தை வீணடித்துவிடக்கூடாது.

என்ன பரிசோதனைகள் :ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை, ரத்தக் கொழுப்பு உள்ளிட்ட வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். அவற்றுடன் இசிஜி மூளைக்கான டாப்ளர் ஸ்கேன், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளும் தேவைப்படும். ஸ்கேன் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவருக்கு மூளையில் ரத்தக் குழாய் அடைத்திருக்கிறதா அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பது தெரியும். அதற்கேற்ப சிகிச்சை தரப்படும்.

என்ன சிகிச்சை ரத்தச் சர்க்கரையையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவது, மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்வது, ரத்த உறைவுக்கட்டியைக் கரைப்பது, ரத்தக்கசிவை நிறுத்துவது, ரத்தக் கொழுப்பைக் கரைப்பது, இதயத்தைப் பாதுகாப்பது, சுவாசம் சீராக நடைபெற உதவுவது போன்றவை முதல் கட்டத்தில் செய்யப்படுகின்ற சிகிச்சைகள். சிலருக்கு மூளையில் ரத்த ஒழுக்கைக் கட்டுப்படுத்த அறுவை சிகிச்சையும் தேவைப்படும்.
இயன்முறை மருத்துவர் மூலம் நோயாளியின் செயலிழந்துபோன கை, கால்களுக்குப் பயிற்சிகள் தந்து அவரை நடக்க வைப்பது சிகிச்சையின் அடுத்தகட்டம்.

நோயாளிகள் நம்பிக்கையுடன் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆனால் மக்கள் இதில்தான் தவறு செய்கிறார்கள். மருத்துவ மனையில் நோயாளி இருக்கிறவரை அவரை கவனிக்கிறார்கள். வீட்டுக்கு வந்தபிறகு இந்தப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய யோசிக்கிறார்கள். இதனால் பலரும் படுக்கையிலேயே கிடக்கிறார்கள். படுக்கைப் புண், நுரையீரலில் சளி கட்டுதல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள்.

தடுப்பது எப்படி ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்திருங்கள். ரத்தக் கொழுப்பு அளவுகள் கட்டுக்குள் இருக்கட்டும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்.உடல் எடை வயதுக்கு ஏற்றபடி இருக்கட்டும். மன அழுத்தத்தைத் தவிருங்கள். புகைப்பழக்கம் வேண்டவே வேண்டாம். மது அருந்தாதீர்கள்! நடப்பது, ஓடுவது என ஏதாவது ஒரு உடற்பயிற்சியைத் தினமும் செய்யுங்கள். இனி பக்கவாதம் உங்கள் பக்கம் வராது.

-டாக்டர் கு.கணேசன்பொதுநல மருத்துவர், ராஜபாளையம்.gganesan95gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement