Advertisement

கலப்படம்... கலப்படம்... நமக்கு பாடம்!

உயிர் வாழ்வதற்காக, உடல் நலம் பேணுவதற்காக நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இல்லை என்றால்... எவ்வளவு விபரீதம் ஏற்படும். 'கலப்படம்... கலப்படம்... எங்கும் எதிலும் கலப்படம்... அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும்' என்ற கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய பாடலிலிருந்து அறியலாம். அவரது வரிகள் இன்றைக்கும் பொருத்தமாக உள்ளன.அனைவரும் காலையில் எழுந்தவுடன் காபியோ, டீயோ குடிக்கவில்லை எனில் தலையே வெடித்தும் விடும் போலிருக்கு என அலுத்து கொள்வதுண்டு. ஆனால் நாம் குடிக்கும் காபி, டீயில் கலப்படம் உண்டு. காபித்துாளுடன் சிக்கிரி கலக்கின்றனர். டீத்துாளுடன், மரத்துாள்களையும், இரும்புத்துாள் மற்றும் சில நேரங்களில் மஞ்சனத்தி இலையை அரைத்து பொடியாக்கி கலப்படம் நடப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
குளித்து முடித்து தலையில் நாம் தேய்க்கும் தேங்காய் எண்ணெயில், விலை குறைந்த வேக்ஸ் ஆயில் கலந்து விற்பனை செய்கின்றனர். இந்த கலப்படத்தை கண்டறிவது மிக கடினம். நல்லெண்ணெயில் முந்திரி எண்ணெய், நெய்யுடன் செயற்கை நெய் கலப்படம் உண்டு. செயற்கை நெய் தயாரிக்க மாட்டுக்கொழுப்பு, சுத்திரிக்கப்பட்ட பாமாயில், சணல் எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மிளகாயின் நிறத்தை முழுச்சிவப்பாக காட்ட 'சூடான் ரெட்' என்ற ரசாயனத்தை மிளகாயுடன் கலக்குகிறார்கள்.
பழம் சாப்பிட்டால் நோய் உடல் நலக்குறைவால் வாடுவோர் பழங்களை சாப்பிட வலியுறுத்துவது உண்டு. ஆனால் தற்போது சந்தையில் விற்கப்படும் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால், நோய்கள் வரும் வாய்ப்புள்ளது. அந்தளவுக்கு பழங்களை இயற்கையாக பழுக்க வைப்பதில்லை. செயற்கையாக பழுக்க வைக்க, கார்பைட், கால்சியம் கார்பைட், ஆர்கானிக், பாஸ்பரஸ் போன்ற ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பழங்களை சாப்பிடுவதால், நெஞ்சு எரிச்சல், வயிற்று போக்கு, அதிக தாகம் எடுத்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படுகின்றன.
கர்ப்பிணிகள் இத்தகைய பழங்களை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு பயன்படும் எண்ணெயில் பாமாயில், பருத்தி விதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவை கலப்படம் செய்யப்படுகிறது. சமையல் எண்ணெய் பாக்கெட்டில் அக்மார்க் முத்திரை கட்டாயம் என உணவு பாதுகாப்பு சட்டத்தில் விதியுள்ளது. 42 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்டில் அக்மார்க் முத்திரை இல்லை என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகள் 2011ன்படி, அனைத்து உணவுப்பொருள் பாக்கெட்களில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் குறியீடு, உரிமம் எண் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அந்த குறியீடு இருப்பதில்லை.
பாலில் கலப்படம்: பாலின் வெண்மைக்கு கால்சியம் மற்றும் புரோட்டின் சத்துக்களுக்கு என ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. தற்போது முழுக்க முழுக்க செயற்கையாக தயாரிக்கப்படும் சிந்தடிக் பால் வந்து விட்டது. பிற உணவு கலப்படத்தை விட, பால் கலப்படம் நம்மை அதிகம் பாதிக்கும். தினமும் குறைந்தது இரு வேளையாவது நாம் பாலையோ, பால் கலந்த உணவுகளையோ அருந்துகிறோம். குழந்தைகள் முதல் நோயுற்ற முதியோர்கள் வரை எல்லோருக்குமான உணவு பால். அதில் கலப்படம் என்பது அச்சத்தை தருகிறது.
உணவு பொருட்களில் என்ன கலப்பட பொருள் சேர்க்கப்படுகிறது என சில புள்ளிவிவரங்களிலிருந்து அறியலாம். பாலில் தண்ணீர் ஸ்டார்ச், அரிசியில் கல், பருப்பில் கேசரி பருப்பு, மஞ்சள் பொடியில் லீடு குரோமேட், தானியா பொடியில் சாணி பொடி மற்றும் ஸ்டார்ச், நல்ல மிளகுவில் காய்ந்த பப்பாளி விதைகள், வத்தல் பொடியில் செங்கல் மற்றும் மரப்பொடி, தேயிலையில் மரப்பொடி மற்றும் உளுந்து தோல், கடுகில் ஆர்ஜிமோன் விதைகள், பச்சை பட்டாணியில் பச்சை சாயம், நெய்யில் வனஸ்பதி போன்ற கலக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் அரிசி :சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுகிறது என்ற செய்தி திடுக்கிட வைக்கிறது. இப்படி எல்லாமா கலப்படம் செய்யமுடியும்? தண்ணீர் பழம் என அழைக்கப்படும் வாட்டர் மெலான் பழத்தையும் கலப்படதாரர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த பழத்தில் சிவப்பு கலர் சாயத்தை, ஊசி மூலம் ஏற்றுகின்றனர். இவ்வாறு காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியிலிருந்து உண்ணும் உணவு, உட்கொள்ளும் பழங்கள், பால், மருந்து என அனைத்தும் கலப்பட பொருட்களாக உலா வருகின்றன.
சட்டம் என்ன செய்கிறது:கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்புத் தரச்சட்டம் 2006 அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தில் கலப்படம் என்ற சொல் நீக்கப்பட்டு, பாதுகாப்பற்ற உணவு பற்றிய விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உணவு பொருளில் கலப்படம் செய்யப்படும் நோக்கத்தில் சேர்க்கப்பட்ட அல்லது தெரியாமல் சேர்த்த பொருட்கள் 'கலப்பட பொருட்கள்' எனப்படும். சட்டங்கள் பல உள்ளன. ஆனால் அது முறையாக கண்காணிக்கப்பட்டு, அமல்படுத்தப்படுகிறதா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. கலப்படத்தை தடுக்க கடுமையான சட்டங்கள் இல்லை. இருக்கும் சட்டத்தையும் முறையாக அமல்படுத்துவதில்லை.
சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பினால் எடுக்கப்பட்ட மாதிரிகளைஆய்வுக்கு உட்படுத்தியதில் 42,290 மாதிரிகளில் 8,469 மாதிரிகள் தரமற்றவை, கலப்படம் செய்யப்பட்டவை என கண்டுபிடிக்கப்பட்டது. கலப்பட உணவு பொருட்கள் மீது 2014-15 சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டதில் கண்டுபிடிக்கப்பட்ட தரமற்ற 8469 மாதிரிகளில், 1256 மாதிரிகளை தயாரித்த நிறுவனங்களே குற்றம் புரிந்தது, உறுதி செய்யப்பட்டது.
நுகர்வோர் கலப்படம் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குறை கூறாமல், முதலில் நாம் தான் நம்மையும், நம் உடல்நலத்தையும் பேணி காப்பாற்றி கொள்ள வேண்டும்.எளிதாக கிடைக்கிறது என்பதற்காக முழுக்க முழுக்க பாக்கெட் உணவுகளுக்கும், 'இன்ஸ்டன்ட்' தயாரிப்புகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதை நிறுத்த வேண்டும். முடிந்தவரை உணவு தயாரிப்பதற்கான பொருட்களை வீட்டிலேயே தயார் செய்வது கொள்வது தான் நல்லது. இல்லை என்றால் மருத்துவமனைகளில் நேரத்தையும் பணத்தையும் செலவிட நேரிடும். நுகர்வோர் ஆகிய நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது.-மு.பிறவிபெருமாள்,நுகர்வோர் ஆர்வலர்,மதுரை, 99941 52952.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement