Advertisement

தன் நோய்க்கு தானே மருந்து

'ஊற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார் பேணிக் கொளல்'வந்த நோய் நீக்கி, நோய் வரும்முன் காக்க வல்ல பேறு பெற்றவர்களை
போற்றித்துணையாக கொள்ள வேண்டும் என்கிறது திருக்குறள்.''உடம்பால் அழியின் உயிரார் அழிவர்திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்ேதனே''உடம்புக்கு குறைபாடு ஏற்படின், உள்ளமும் சேர்ந்து மாறுபடும் என்பது திருமூலர் வாக்கு. உயிரிலடங்கும்
உடலனைத்தும் ஈசன் கோயில். உடலில் உயிர்ப்பொருள் இருக்கிறது. அந்த உடலைப் பேணி பாதுகாக்க வேண்டும் என்றால் யோகத்தை பயில வேண்டும்.யோக சாதனைக்குள் நுழைந்து விட்டால், உடம்பினுள் பல உயரிய மாற்றங்கள் ஏற்படும். தெளிவான அமைதியான மனநிலையை பெறுவதே யோகத்தின் குறிக்கோளாகும். யோகிகள் உடம்பு
என்பது உண்மையை அறிந்து கொள்வதற்குரிய சிறந்த சாதனம் என்கின்றனர். வளமாக வயதைக் கடக்க இளமையில் யோகத்தை மேற்கொள்ள வேண்டும்.
யோகத்தின் எட்டு நெறிகள் யோகப் பயிற்சி அனைத்தும் விஞ்ஞானத்தின் செயல் முறையாகும். டாக்டர்களும், உளவியல் வல்லுனர்களும் இதன் மாபெரும் சக்தியை அளவிட முடியாது என்கின்றனர். யோகத்தின் எட்டு நெறிமுறைகளை திருமந்திரம் விளக்கி
காட்டுகிறது.'இயம நியமமே எண்ணிலா வாதனம்நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரங்சயமிகு தாரணை தியானஞ்சமாதிஅயமுறு மட்டாங்கம் ஆவதுமாமே'
இயமம், நியமம், பல வகைப்பட்ட ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவை எட்டுவகை யோக நெறிகள். இதில்
பிராணாயாமம் அல்லது மூச்சுக்கட்டுப்பாடு முக்கியமானது. அகமுக வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணை ஆவது பிராணாயாமமே. பிராணன் என்றால் காற்று, மூச்சு, வளி என்று பொருள். பிராணாயாமம் என்பது பதஞ்ஜலி முனிவரை பொறுத்தவரை காற்றை வெளியே விட்டு உள்ளிழுத்து சிறிது நேரம் அடக்குவதேயாகும்.
பிராணன் என்பது மூச்சல்ல. அது ஒரு சக்தி. பிராணாயாமத்தால் உடலின் வெவ்வேறு இயக்கங்களையும், நரம்பு ஓட்டங்களையும் அடக்கி ஆளலாம். மூலாதாரத்தில் தொடங்கி மூளை வரை செல்லும் முதுகுத்தண்டில் பல சக்கர மையங்கள் உள்ளன. இவை ஒழுங்கான செயல்பாட்டிற்கு வரும். அதன் ஆற்றல் அதிகரிக்கும். அதனால் உடலில் செல்லும் உணர்ச்சி ஓட்டங்களை வசப்படுத்தலாம். பிராணாயாமம் மேற்கொண்டால் மூளையில் அறிவு பூர்வமான பாதை ஏற்பட்டு, புது எண்ணங்களும் தோன்றும். பிராணாயாமம் நுரையீரல்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தி சிறிது சிறிதாக அந்த இயக்கம் உடலில் உள்ள எல்லா தசைகளையும் அடக்கி ஆளும்.
எப்படி செய்வது பிராணாயாமம் செய்யும் இடம் துாய்மையானதாகவும், வசதியாகவும் இருக்கவேண்டும். முதலில் நிமிர்ந்து உறுதியாக உட்கார வேண்டும். முதுகெலும்பு நிமிர்ந்திருக்கும்படி வைத்து கொள்ள வேண்டும். மார்பு, தலை, இவை நேர்கோட்டில் இருக்குமாறு நிமிர்ந்திருக்க வேண்டும். மார்பு வளைந்திருந்தால், உயர்ந்த சிந்தனைகள் தோன்றாது. முக்கியமான தனிமையான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிகாலையும், மாலையும் பயிற்சிக்கு உகந்த வேளையாகும். பயிற்சிக்கு முன்னர் உணவு அருந்துவது நல்லதல்ல. முக்கியமாக நம்பிக்கையோடும், குருவின் துணையோடும் பயிற்சியை துவக்க வேண்டும்.
பிராணாயாமா பயிற்சியை தொடங்குவதற்கு முன் நாடிகள் துாய்மைப்படுத்தப்பட வேண்டும். முதலில் அளவாக மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விட கற்று கொள்வதுதான் முதல் பாடம். காற்றை சுவாசிக்கும் போது அதை வாசிக்க வேண்டும். சுவாசத்தை உள்ளே இழுக்கும் போதும், வெளியே விடும் போதும், முழுக்கவனத்தையும் அதில் செலுத்த வேண்டும். இது உடலை ஒழுங்கு நிலைக்கு கொண்டு வரும். உடல் முழுவதும் ஒருவித லயத்திற்கு வசப்படும். அந்த சுவாசமே நமக்கு நல்ல ஓய்வை தரும். நாடிசுத்தி முதல் வகை முதலில் வலது நாசியை பெருவிரலால் அடைத்து கொண்டு இடது நாசி வழியாக இயன்றவரை காற்றை உள்ளே இழுக்க வேண்டும். சிறிதும் இடைவெளி இன்றி, இடது நாசியை மூடிக்கொண்டு வலது நாசி வழியாக காற்றை உள்ளே வெளியேற்ற வேண்டும். இயன்ற அளவு அதே வலது நாசியின் வழியாக காற்றை உள்ளே இழுத்து, இடது நாசி வழியாக விட வேண்டும். இந்த பயிற்சியை மூன்று முறை அதிகாலை, நண்பகல், மாலை, இரவு என நான்கு காலங்களில் செய்யலாம். இவ்வாறு செய்தால் நாடிகள் துாய்மைடைந்து விடும்.
இரண்டாம் வகை வலது நாசிதுளையை பெரு விரலால் மூடிவிட்டு, இடது நாசித்துளை வழியாக பதினாறு மாத்திரை அளவு மூச்சை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும். இப்படி பல்வேறு பயிற்சிகள் உள்ளன. மாத்திரை என்பது கண் இமைக்கும் நேரம். அல்லது கை நொடிபொழுதை குறிக்கும். திருமந்திரத்தில் பிராணாயாமம் பயிற்சி செய்யும் முறையை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உறுப்புச் சிவக்கும். உரோமங் கறுக்கும் என்று திருமந்திரம் உரைக்கிறது. இந்த பயிற்சிகளால் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம், நன்கு கிடைக்கும். முக்கியமாக சைனஸ், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், நீரிழிவு, மலச்சிக்கல், போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். மூளைக்கு போதமான காற்று கிடைப்பதால், மன அமைதி கிடைக்கும். இதனால் வாழ்க்கையின் பல சிக்கல்களிலிருந்து விடுபடலாம்.
சக்கரமாக ஓடும் காலத்திற்குள் மாட்டிக் கொண்டு மனிதர்கள் தன்னைத்தானே புறக்கணித்து கொள்கின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு என்ற எச்சரிக்கை மணி தேவை. சுவாமி விவேகானந்தர் தனது யோக பயிற்சி பற்றி நுாலில் முத்துச்
சிப்பியானது சுவாதி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது, மழை வரும் காலம் அறிந்து கடலின் மேற்பரப்பிற்கு வந்து, ஒரு துளி மழை நீரை பெற்று, சிப்பியை மூடி கடலுக்கு கீழே சென்று, துளிநீர் முத்தாக மாறும் வரை காத்திருப்பது போல, யோக பயிற்சி செய்பவர்கள்,
பொறுமடையுடன், பலனை அடைவதற்கு காத்திருக்க வேண்டும் என்கிறார்.-முனைவர் ச.சுடர்க்கொடி,காரைக்குடி. 94433 63865.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement