Advertisement

வலி தீர்க்கும் வழி தரும் மருத்துவம் இன்று உலக மயக்கவியல் தினம்

மனிதகுலம் மாண்புற்றிருக்க நோயற்ற வாழ்வு வேண்டும். மனிதனை எந்த நோய் தாக்கினாலும் பெரும்பாலும் 'வலி' தான், அதன் அறிகுறியாக இருக்கிறது. அதனால் தான் வலியை நாம் வெறுக்கிறோம். அடிப்படையில் வலி என்பது இயற்கை அளித்துள்ள ஒரு பாதுகாப்பு அம்சமாகும். காயமுற்ற அல்லது சேதமடைந்த உடல் பாகங்களை அசைவின்றி வைத்திருக்கவும், அதன் காரணமாக சேதமுற்ற பாகம் விரைவாக சீராகவும் உதவும் இயற்கையின் உபாயம் தான் வலி.எவ்வளவு சிறியதாயினும் வலியை தாங்கிக் கொள்ள யாரும் விரும்புவதில்லை. ஆனால், அதிக வலி எப்போது ஏற்பட்டாலும் அது மிக தீவிரமான பக்க விளைவு அல்லது மரணத்தை உண்டாக்கும். எந்த ஒரு அறுவை சிகிச்சையும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டே செய்யப்படுகிறது. என்றாலும் அதனால் உண்டாகும் வலி சரியான வகையில் தவிர்க்கப்பட வில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் போவதுடன், ஆபத்தான விளைவுகளும் ஏற்படும். எனவே அறுவை சிகிச்சை செய்ய 'மயக்கவியல்' அவசியம் தேவை.
வலிநீக்கியல் மருத்துவம் வலி நீக்கியல் மருத்துவம் என்பது, அறுவை சிகிச்சையின் போது நோயாளிக்கு எந்த வலியும் தெரியாத வண்ணம் அதை நீக்கி, அதே நேரம் அவருடைய பிராண சக்திகளான இதயம், மூளை, மற்றும் நுரையீரலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வருவது; அவற்றின் இயக்கங்களில் தேவையான அளவு மாற்றங்களை செய்து, அவை சீராக இயக்குகிறதா என கண்காணித்து, அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்யும்படியான சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது முதல் கட்டம்.
அதன் பின் அறுவை சிகிச்சை முடிந்ததும், தேவையான மாற்றங்களை செய்து நோயாளிகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து, அவர்களின் முக்கிய உறுப்புக்களின் இயக்கங்கள் சரியாக இருக்கிறதா என்பதை கண்காணித்து, பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பது இரண்டாம் கட்டம்.நோயாளிக்கு பாதுகாப்பு இந்த வலி நீக்கியல் மருத்துவ சேவை இல்லை என்றால், ஒரு சிறிய அறுவை சிகிச்சையை கூட செய்ய முடியாது. பல்வேறு அறுவை சிகிச்சை முறைகள் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிக நுட்பமான, அதிக நேரம் ஆகும் சிகிச்சை முறை இது தான். மூளை, கல்லீரல் சிகிச்சை போன்றவைகள் எல்லாம் வலி நீக்கியலின் வளர்ச்சியால் தான் சாத்தியமாகிறது. மேலும், நோயாளிகளுக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கவும் முடிகிறது. வலி நீக்கியல் முன்னேற்றம் அடைந்திருக்காவிட்டால், இன்றைய நவீன அறுவை சிகிச்சை முறைகள் எல்லாம் சாத்தியமற்றவையே.
பண்டைய காலங்களில் தேவையிருந்தாலும் கூட, சிகிச்சைகள் எல்லாம் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டே வந்தன. ஏனெனில், பாதுகாப்பான வலி நீக்கும் அறுவை சிகிச்சை முறைகள் அன்றைய கால கட்டத்தில் இல்லை. வேறு வழி இல்லை என்றால் நான்கு ஆண்கள் நோயாளியை அமுக்கி பிடித்துக் கொள்ள, மருத்துவர் அறுவை சிகிச்சையை தொடருவார். நோயாளி அலறி துடித்து, கூக்குரலிடுவார். அக்காலத்தில் மக்களும் இவ்வகை அறுவை சிகிச்சையை ஏற்றுக் கொண்டனர்.
கண்டுபிடித்தது எப்படி இது போன்ற துன்பங்களை எல்லாம் போக்கும் விதமாக மனித இனத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக 1846 அக்.,16ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மெசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெற்றது.
அந்த காலத்தில் பல் மருத்துவ
மாணவராக இருந்த வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்பவர், வலி நீக்கும் முறைகளில் கொண்ட ஆர்வத்தால்
'ஈதர்' என்ற வேதிப் பொருளை ஆவியாக்கி, அதை நோயாளியை முகரும்படி செய்தால் வலியை முழுமையாக நீக்க முடியும் என கண்டறிந்தார். அதை அன்றைய தினம் எல்லோரும் அறியும்படி செயல் முறை விளக்கம் செய்து காட்டினார்.
கில்பர்ட் ஆப்பாட் என்ற நோயாளியின் கழுத்திலிருந்த கட்டியை ஜான் காலின்வாரன் என்ற அறுவை சிகிச்சை மருத்துவர், உலகிலேயே முதல் முறையாக எவ்வித வலி, அசைவு, கூச்சல் இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார். இதை பார்த்துக் கொண்டிருந்த பிரபல மருத்துவர்கள் அனைவரும், நோயாளி அசையவில்லை ஆனால், முச்சு விடுகிறார், உயிரோடும் இருக்கிறார் என்று கூறி ஆச்சர்யப்பட்டனர். உலகமே இந்த செய்தியைக் கேட்டு அதிசயித்தது.
இந்த செய்தி உலகம் முழுவதும் வேகமாக பரவி, மிக குறுகிய காலத்திலேயே 'ஈதர்' உலகெங்கிலும் பயன்பாட்டிற்கு வந்து, வலியின்றி அறுவை சிகிச்சை நடைபெற முடியும் என்று நிரூபிக்கப்பட்டது. அமெரிக்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வை தொடர்ந்து லண்டனில், 1846 டிசம்பர் 19ல் முதன் முறையாக ஈதர் பயன்படுத்தி மயக்க நிலையில் முதல் அறுவை சிகிச்சை நடந்தது.
இந்தியாவில் 1847 மார்ச் 23ல் கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் முதல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதன் முறையாக ஈதர் பயன்படுத்தி அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவ உலகில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நாள் மனிதகுலத்திற்கு பெரும் நன்மை ஏற்பட்ட நாள் இந்த நாள் தான். இந்த நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டு தோறும் அக்.,16ல் 'ஈதர்' தினமாக கொண்டாடப்படுகிறது. அதுவே இன்று உலக மயக்கவியல் நாளாக கொண்டாடப்படுகிறது.
குளோரோபாம் 1847ல் எடின்பர்க்கை சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்சன் என்ற மகப்பேறு மருத்துவர் 'குளோரோபாம்' என்ற மற்றொரு வேதிப் பொருளை கொண்டு வலி நீக்கம் செய்து விளக்கினார். இந்த குளோரோபாம் இனிமையான மணம் கொண்டதாக இருந்தாலும் ஆபத்தான குணங்கள் கொண்டதாகவும் இருந்தது. பல உயிர்களை பலி கொண்ட மயக்க மருந்து என்ற அவப்பெயர் அதற்கு உண்டு. என்றாலும், பல்லாண்டு அது பயன்பாட்டிலிருந்தது ஆச்சர்யம் தான்.
1925 ஜனவரி 12ல் புனே நகரில், சாரோம் மருத்துவமனையில் மகாத்மா காந்தி அவசரமாக அப்பென்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது, அவருக்கு குளோரோபாம் கொடுக்கப்பட்டது. இன்றும் பல மயக்கவியல் மருத்துவர்களை, குளோரோபாம் மருத்துவர் என்று மக்கள் குறிப்பிடுவதை காண முடியும். அறுவை சிகிச்சையின் போது செய்யும் சேவை தவிர, ஆபத்துகால மீட்பு பணி, அவசர உயிர் பாதுகாப்பு, தீவிர சிகிச்சை, வென்டிலேட்டர் சிகிச்சை, வலியில்லா
பிரசவ சேவை, நீண்ட கால வலி நீக்கம், புற்று நோய் வலி நீக்கம் என்று பன்முக தன்மையுடன் வலி நீக்க சிகிச்சை துறை சிறந்து விளங்குகிறது.- டாக்டர்.எஸ்.ஏகநாதபிள்ளை,
வலிநீக்கவியல் துறை நிபுணர்மதுரை. 98421 68136

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement