Advertisement

கலாம் 'வரலாறு' மட்டுமல்ல; இந்தியாவின் 'எதிர்காலம்': வெ.பொன்ராஜ்

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், 10வது வயதில் 5ம் வகுப்பு படித்த போது, ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பறவை எப்படி பறக்கிறது என பாடம் நடத்தினார். அந்த பாடம் தான், அப்துல்கலாமிற்கு தானும் பறக்க வேண்டும் என்ற லட்சிய விதை விதைக்கப்பட காரணமாக அமைந்தது. அந்த லட்சியம் அவரை உறங்கவும் விடவில்லை.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி., இயற்பியல் படித்தார். சென்னை எம்.ஐ.டி.,யில் ஏரோநாட்டிக்ஸ் படித்தார். அந்த படிப்பிற்கு வேலை வாய்ப்பே இல்லை என்ற சூழலில் படித்தார். வேலைக்காக இன்றி 10 வயதில் விதைக்கப்பட்ட லட்சியத்தை அடைய படித்தார். படிப்பு முடித்ததும், அவருக்கு இருந்த ஒரே வேலை வாய்ப்பு பைலட் தான். பைலட் தேர்வுக்கு சென்ற போது, முதல் தோல்வி. எதிர்காலம் கேள்விக்குறியாக தோன்றியது. சிவானந்த ஆசிரமம் செல்கிறார். அவரது வாடிய முகம் கண்டு சிவானந்தர், 'உனக்கென்று ஏதோ ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. அதை கண்டுபிடித்து, அதை பற்றிச்செல். உன் லட்சியத்தை அடையலாம்' என்றார்.

நனவான சிறுவனின் கனவு:பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையில் அறிவியல் உதவியாளராக சேர்ந்தார். அந்த வேலையில் அவரது ஈடுபாட்டை பார்த்து, தரையில் இருந்து ஓர் அடி உயரத்தில் பறக்கும் இயந்திரத்தை வடிவமைக்கும் பணியை கொடுத்தனர். அதை வெற்றிகரமாக வடிவமைத்து, டாக்டர் எம்.ஜி.கே.மேனனை அதில் ஏற்றி சுற்றி காண்பித்தார் அப்துல்கலாம். இன்றைக்கு 7000 கி.மீ., கடலோர பாதுகாப்பில் கோவர் கிராப்ட் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது என்றால், அந்த பறக்கும் இயந்திரத்தை வடிவமைக்க முதலில் வித்திட்டவர் கலாம். 10 வயது சிறுவனின் பறக்க வேண்டும் என்ற கனவு, பைலட்டாகி பறக்க முடியாதபோதும், பறக்கும் இயந்திரத்தை உருவாக்க காரணமானது.

சாதனைக்கு அடிப்படை :இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் கலாமை அரவணைத்தது. அங்கு இந்தியாவின், சொந்தமான ராக்கெட் வடிவமைக்கும் திட்டம் பிறக்கிறது. 400 ஆண்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்திய இங்கிலாந்திற்கு, தேவையான செயற்கை கோள்களை இந்தியா ஏவுகிறது என்றால், முதல் முயற்சியில் சந்திராயன் -1 வெற்றி பெறுகிறது என்றால், கலாம் லட்சியத்தின் வெற்றி தான் இந்த சாதனைகளுக்கு அடிப்படையான சாதனையாக இருந்தது. இன்றைக்கு 'டிவி', இணையம் நமக்கு அருகாமையில் இருக்கிறது. இதற்கு அடிப்படையாக அமைந்தது, ஒரு 10 வயது சிறுவனது கனவு.பின் ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுகணைத்திட்டத்திற்கு தலைமையேற்கும் வாய்ப்பு கலாமிற்கு வருகிறது. அக்னி, பிரிதிவி, ஆகாஷ், நாக், திரிசூல் போன்ற 5 ஏவுகணைகள் திட்டம் வடிவமைக்கப்பட்டது. இன்று, இந்தியாவின் மையப்புள்ளியில் இருந்து 5000 கி.மீ., சுற்றளவில் எந்த நாடும் இந்தியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால், அதை விண்வெளியிலேயே எதிர்த்து அழித்தொழிக்கும் வல்லமை பெற்ற நாடாக இந்தியா விளங்குகிறது என்று சொன்னால், கலாம் என்ற 10 வயது சிறுவனது லட்சியம் விரிவடைந்ததால் தான்.

தொலைநோக்குத் திட்டம்:இரண்டாம் அணுகுண்டு சோதனையை அப்துல்கலாம் தலைமையில், அணுசக்தி விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தி உலகிற்கு அறிவித்தனர். கலாமின் தொலைநோக்கு திட்டமான 'இந்தியா 2020' தேசத்தின் திட்டம் என பார்லிமென்டில் அறிவிக்கப்பட்டது. பார்லிமென்ட் பார்த்துக் கொள்ளும் என கலாம் சும்மா இருக்கவில்லை. ஒரு லட்சம் மாணவர்களை சந்திப்பேன்; அவர்களிடம் இந்தியா 2020 லட்சியத்தை விதைப்பேன், என புறப்பட்டார். ஆம் சிறுவனது கனவு, இந்தியாவின் கனவாக மாறியது.மாணவர்களிடம் லட்சியக் கனவை விதைத்தபோது, கலாமை இந்தியா 11வது குடியரசுத்தலைவராக வாருங்கள் என்று அழைத்தது.

இளைஞர்களின் இதயங்களில்:உலகத்திலேயே 2.5 கோடி மாணவர்களை, இளைஞர்களை சந்தித்து உரையாடிய ஒரே ஆசிரியர் டாக்டர் அப்துல்கலாம் தான். அதனால் தான் 64 கோடி இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். அவர் உயிர்நீத்த போது, இந்தியாவே அவருக்கு அஞ்சலி செலுத்தியது.அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தித்தார், வளர்ந்த இந்தியா 2020 பிறந்தது. 2005ல் சிந்தித்தார், 2030ல் இந்தியா எரிசக்தி சுதந்திரத்தை பெற்ற நாடாக மாறும் என்ற கொள்கை திட்டத்தை கொடுத்தார். 2050ல் நிலக்கரி இருக்காது, எரிவாயு கிடைக்காது, சூரிய ஒளி மின்சாரம் 24 மணி நேரமும் இந்த பூமிக்கு கிடைக்க வேண்டும் என்ற திட்டத்தை கலாம் கொடுத்தார். அதை அமெரிக்காவின் தேசிய விண்வெளி சொசைட்டி ஏற்று 'கலாம் - NSS விண்வெளி சூரிய ஒளி சக்தி திட்டம்' என்ற திட்டத்தை அறிவித்தது. 2050ல் உலகம் 9 பில்லியன் மக்கள் தொகை கொண்டதாக மாறும் போது, உலகத்திற்கு உணவளிக்கும் நாடுகள் 2 தான். அது சீனாவும், இந்தியாவும். இன்றைக்கு சீனா, 2000 கி.மீ துாரம் நதிகளை இணைத்து அந்த போட்டிக்கு நாங்கள் தயார் என்று உலகிற்கு அறிவித்து விட்டது. இந்தியா இன்னும் சிந்தனை செய்து கொண்டு இருக்கிறது.

கலாமின் கனவு:நதிகள் இணைக்கப்பட்டு அதி திறன் நீர்வழிச்சாலை உருவாக்கப்பட கலாம் விரும்பினார். அது நடந்தால், இந்தியா இயற்கைமுறையில் வேளாண்மையை ஊக்குவித்து, இரண்டாம் பசுமை புரட்சியை செய்து காட்ட முடியும். கலாம் கண்ட கனவு இன்றைய இளைஞர்களின் லட்சியமாக மாறினால், 64 கோடி இந்திய இளைஞர்களுக்கும் மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பு கிடைக்கும். 5 ஆண்டுகள் இந்தியாவை வளமான நாடாக வேண்டுமென்று தொலைநோக்கு பார்வையை கொடுத்து அதை இளைஞர்களிடம், மாணவர்களிடம் விதைத்தார்.கலாம் வரலாறு மட்டுமல்ல; இந்தியாவின் எதிர்காலம். ஆம் அவர்தான் இந்திய இளைஞர்களின் எதிர்காலம். இளைஞர்கள், மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், அந்த துறையில் தலைவர்களாக மாறும் பண்பை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தார்.

உறுதிமொழி:எனவே நண்பர்களே, இளைஞர்களே, இன்று கலாமின் 85வது பிறந்த நாள் விழாவில், உறுதிமொழி எடுங்கள். ''எனக்கு இலவசம் கொடு, லஞ்சம் கொடு, வரதட்சணை கொடு, உயர்கல்வி படிப்புக்கு பணம் கொடு, வேலைக்கு பணம் கொடு'' என கேட்கும் மனநிலையில் இருந்து மாறி, என்னால் முடியும் என்ற நிலைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம் என்ற நிலைக்கு தகுதிப்படுத்தி, 'நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்' என்ற கேள்வியை கேட்கும் தகுதியை நீங்கள் பெற வேண்டும்.இந்த மனநிலைக்கு தன்னை உயர்த்தும் அனைவரும் தலைமைப்பண்பை பெற்றவர்களே. அவர்களால் தான் இந்தியா ஒரு வளமான நாடாக மாறமுடியும்; தமிழகம் வளமான தமிழகமாக மாறும் என கலாம் திடமாக நம்பினார்.
இளைஞர்கள் என்றைக்கு தலைமைப்பண்பை பெற்றவர்களாக மாறுகிறார்களோ, அன்றைக்கு கலாம் கண்ட லட்சிய கனவு நனவாக மாறும். அந்த மாற்றத்தை தன்னுள் நிகழ்த்துவோம் என்று உறுதிமொழி ஏற்கும் அத்தனை மக்களையும், இளைஞர்களையும், மாணவர்களையும் கலாமின் பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
-வெ.பொன்ராஜ்,
அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்
vponrajgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement