Advertisement

நல்ல திட்டங்களை நசுக்கிவிட கூடாது!

பார்லிமென்ட் ஆட்சி முறை என்பது, ஜனநாயகத்தின் ஆட்சி. இந்த ஆட்சி முறையில், கிராமத்தில் துவங்கி, மாநிலம், தேசம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் ஆட்சி, அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே நடக்கும்.

இவ்வாறு நடைபெறும் ஆட்சியில், மாநிலங்களிலும், மத்தியிலும் அரசியல் கட்சிகள் தான், மக்கள் விருப்பத்திற்கேற்ப மாறி மாறி ஆட்சி அமைக்கும். இது தான் மக்களாட்சி தத்துவத்தின் நிலைபாடு. மக்களால், மக்களுக்காக என்ற கோட்பாட்டின் உட்பொருள் இதுதான்.
கடந்த, 2006 முதல், 2011 வரை, தமிழகத்தில், நடந்த ஆட்சியில், அண்ணா நுாற்றாண்டு விழாவையொட்டி, கிராமப்புற வளர்ச்சிக்காக, 'அண்ணா மறுமலர்ச்சி திட்டம்' என்று, ஒரு திட்ட வரைவு அங்கீகரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளின் மூலம் நிறைவேற்றப்பட்டது. மாநிலத்தின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, ஐந்தாண்டு திட்டமாக, ஒவ்வொரு ஆண்டும் இத்தனை ஊராட்சிகள் என்று பிரிக்கப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமப்புற வளர்ச்சிக்காக, நிறைய உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று உலகளாவிய அளவில், விளையாட்டுத்துறை சிறந்து விளங்குகிறது. ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு விளையாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கின்றன. ஆனால், அனைத்து போட்டிகளிலும் நகர்ப்புற வீரர்களே இடம் பெறுகின்றனர்.திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தமிழக கிராமப்புறங்களில் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களது தகுதி வளர்க்கப்படவில்லை. அவர்களை எப்படி அடையாளம் காண்பது? யார் பயிற்சி கொடுப்பது?

நேரு யுவகேந்திரா நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகமும் அங்கங்கே முனைகின்றனர். ஆனால், அனைத்து கிராமங்களிலும் பரவலாக முனைப்புடன் செயல்பட்டு, இதுவரை முன்னெடுத்து செல்லக் காணோம்.இந்த நிலையில் தான், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், இதற்கான களம் அமைக்கப்பட்டது. ஒரு ஊராட்சிக்கு ஒரு விளையாட்டுத் திடல், அடையாளம் காணப்பட்ட, அரசு நிலத்தில் மேடு - பள்ளங்களை அகற்றி பூமியை சீர்செய்ய, ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
வாலிபால், பேட்மின்டன், ரிங், டென்னிஸ், கிரிக்கெட், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், பளு துாக்குதல், குண்டு எறிதல் போன்ற அனைத்து பிரிவிற்கும் இடங்கள் தனித்தனியாக ஒதுக்கி, தேவையான அனைத்து உபகரணங்களுக்கும் நிதி ஒதுக்கி, அரசே வாங்கி கொடுத்தது.

ஆண்டுதோறும் விளையாட்டுத் திடல் பராமரிப்புக்கு என, 10 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது. ஆங்காங்கே உள்ள நேரு யுவகேந்திரா நிர்வாகிகள், அருகருகே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை ஈடுபடுத்தி, பயிற்சி முறைகளை மேம்படுத்தி திறன் வளர்க்க உத்தரவிட்டது.விளையாட்டில் விருப்பம் கொண்ட கிராமப்புற மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களிடம் ஒரு மறுமலர்ச்சி காணப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், இதுபோன்ற விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன.

கிராம அளவில் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும், அவர்கள் திறனை வளர்க்கவும் அவ்வாறு கண்டறியப்பட்டு, திறனை வளர்த்து கொண்டவர்களை, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அங்கிருந்து, தேசிய அளவிலும் முனைந்து முன்னெடுத்து செல்லவும் இதை விட, ஒரு சிறந்த அமைப்பை, அரசு ரீதியாக இனி ஒரு போதும் உண்டாக்கி செயல்பட முடியாது.

இப்போது என்ன நடந்திருக்கிறது? ஆட்சி மாறிய பின், அந்த திட்டமே கைவிடப்பட்டது. இது முறைதானா? இது என்ன ஜனநாயகம்? மக்களின் வரிப்பணத்திலேயே ஒரு அரசு மேற்கொள்ளும், இதுபோன்ற மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை மாறிவரும் அரசு, மாற்றி விடும் அல்லது கைவிட்டு விடும் என்பது சரிதானா?

அடுத்து, ஊராட்சி நுாலகங்கள். மிக அற்புதமான திட்டம். ஒவ்வொரு ஊராட்சியிலும், ஒரு நுாலகம் கட்டப்பட்டது. மூன்றிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் வரை, நில அமைப்பிற்கு ஏற்றாற்போல் மதிப்பீடு தயாரித்து, கட்டடங்கள் கட்டப்பட்டன. அதற்கு வேண்டிய தளவாடங்கள் அனைத்தையும், பல்லாயிரக்கணக்கில் செலவு செய்த ஊராட்சிகளுக்கு, அரசே வாங்கி வழங்கியது. அதோடு, ஒவ்வொரு ஊராட்சிக்கும் அரும்பெரும் நுால்கள் அனைத்தும் வாங்கித் தரப்பட்டன. இதற்கு அந்த ஊராட்சிக்குள்ளேயே படித்தவர்கள், பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் ஆகியோரை, அடையாளம் கண்டு, ஊராட்சி நிதியிலிருந்தே ஒரு ஊதியம் நிர்ணயித்து, நுாலகர்களாக பணி நியமனமும் செய்யப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த அமைப்பும் அப்படியே கைவிடப்பட்டது. ஆயிரக்கணக்கான அற்புதமான புத்தகங்களின் கதி என்ன? படிக்கும் பழக்கத்திற்கு மாற்றப்பட்ட ஆர்வமுள்ள பெரியவர்கள், மாணவர்களின் நிலை என்ன? இது ஒரு சமுதாய மனமாற்ற சாதனையாகவே பார்க்கப்பட்டது. தற்போது, அதில் வாழ்வாதார அலுவலக மையங்களும், மற்றவையும் இயங்கி வருகின்றன. நுாலகங்கள் மூடப்பட்டுவிட்டன.

ஊரக விளையாட்டு மையம் மற்றும் ஊரக நுாலகம் ஆகிய இரண்டுமே தொலைநோக்கு திட்டங்கள். கிராமப்புற வளர்ச்சியை மையமாக கொண்ட திட்டங்கள், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டங்கள். ஆனால், இரண்டும் கைவிடப்பட்டு விட்டன. ஒரு ஆட்சியில் கிடைக்கும் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை, அடுத்த ஆட்சியிலும் அப்படியே ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? அது தானே தொடர் வளர்ச்சிக்கான தொலைநோக்கு.
ஒரு கட்சி ஆட்சி செய்கிற அனைத்து நல்லவற்றையும், ஆட்சிகள் மாறும் போது அழித்து விடுவதோ அல்லது ஒழித்து விடுவதோ அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமானால் விளையாட்டாக தோன்றலாம்.

மக்களின் பணம் விரயமாவதையும், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதையும் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆகவே, மக்கள் நலன் சார்ந்த நல்லதிட்டங்களை நசுக்கி விடாமல் தொடர்ந்து செய்யுங்கள். அது தான் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உழவர் சந்தை. இது ஒரு நல்ல திட்டம், கிராம விவசாயிகள் உற்பத்தியோடு இணைந்த ஒரு பொருளாதாரத் திட்டம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறு தானியங்கள், பயிர் வகைகள் மற்றும் காய்கறிகள் சம்பந்தப்பட்டது. காலங்காலமாக விவசாயிகளுக்கும், நுகர்வோருக்குமிடையே, இடைத் தரகு வியாபாரம் தான் நடந்து வந்தது.

கிராமம் சார்ந்த விவசாய பொருளாதாரத்தில், உழவர் சந்தைகள் மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கின. விளைவித்தவர், நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொண்டனர். அதனாலான பணப் பலன்களை அனுபவித்தனர். விவசாயிகள் புதிய உத்வேகம் பெற்றனர்.திட்ட அமலாக்கத்தில் குறைகளிருந்தால் களைந்திருக்கலாம். திட்ட மேம்பாட்டு நிலைகளை மேற்கொண்டிருக்கலாம்; அது வரவேற்கப்பட வேண்டியது. அதை விடுத்து திட்டத்தையே கைவிடுவது ஏன்? ஆக மொத்தத்தில் நடப்பது என்ன? ஒரு அரசு அதன், ஐந்து ஆண்டு கால ஆட்சியில் கொண்டு வந்து, அமலில் உள்ள நல்ல திட்டங்களை கூட, அடுத்து வரும் மாற்று அரசு கைவிடுவதென்பதோ அல்லது உருக்குலைப்பதோ, தம்மை ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு செய்யும் துரோகம். மாநில பொருளாதாரத்திற்கும், வளர்ச்சிக்கும் ஏற்படுத்துகிற அழிவு.

மாறி மாறி ஆட்சிக்கு வருகிறவர்கள், இப்படியே செய்து கொண்டுபோனால் மொத்தத்தில், மாநில வளர்ச்சியும் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதை பார்த்து கொண்டிருக்கும் மக்கள், தொடர்ந்து சகித்து கொள்ள மாட்டார்கள். எனவே, எல்லா கட்சி ஆட்சிகளாலும், கொண்டு வரப்படுகிற மக்கள் மற்றும் சமுதாய நலம் சார்ந்த திட்டங்கள் பாராட்டப்பட வேண்டும்; ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்; தொடரப்பட வேண்டும். அதுதான் மாநில வளர்ச்சியாக பரிணமிக்கும்.
இமெயில்: chidambaranathan76gmail.com

-- வி.சிதம்பரநாதன்
-சிந்தனையாளர்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பணி நிறைவு)

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement