Load Image
dinamalar telegram
Advertisement

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் கட்சிகளில் குழப்பம் ஆரம்பம்: இந்திய கம்யூ., - ம.ம.க.,வில் கூட்டணியால் சலசலப்பு

Tamil News
ADVERTISEMENT
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதால், எந்த கூட்டணிக்கு செல்வது என்பதில், கட்சிகளில் குழப்பம் ஆரம்பமாகி உள்ளது. இந்திய கம்யூ., மற்றும், ம.ம.க., எனப்படும், மனித நேய மக்கள் கட்சியில், இது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, ஒரு அணி அமைக்கும் எண்ணத்தில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மற்றும், ம.ம.க., இணைந்து, மக்கள் நல கூட்டு இயக்கத்தை ஏற்படுத்தின. இதிலிருந்து, திடீரென விலகிய, ம.ம.க., 'பெரிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி, எம்.எல்.ஏ.,க்களை பெற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது. எனவே, மக்கள் நல கூட்டு இயக்கத்தில் நீடிக்க முடியாது' என, காரணம் கூறியது.இந்நிலையில், எந்த பெரிய கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்துவது என்பதில், ம.ம.க.,வில் குழப்பம் ஏற்பட்டது. '2011 தேர்தல் போல், அ.தி.மு.க., கூட்டணியில் தொடர வேண்டும்' என, எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா விருப்பம் தெரிவித்தார். இதற்கு, ம.ம.க., பொதுச் செயலர் தமீமுன் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால், கட்சி நிர்வாகிகளுக்குள் மோதல் வெடித்தது. ஜவாஹிருல்லா, கட்சியின் பொதுக்குழுவை, சென்னை தாம்பரத்தில், நேற்று காலை கூட்டினார். ஆனால், 'பொதுச் செயலரான எனக்குத் தான், பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் உண்டு. ஜவாஹிருல்லா கூட்டம், சட்டப்படி செல்லாது. நிர்வாகிகள் என் பக்கமே உள்ளனர்' எனக் கூறி, எழும்பூரில் போட்டி பொதுக்குழுவை கூட்டினார், தமீமுன் அன்சாரி.ஒரு கட்சியின், இரு பொதுக்குழு கூட்டங்கள் நேற்று நடந்தன. ஜவாஹிருல்லா கூட்டிய பொதுக்குழுவில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி, பொதுச் செயலர் தமீமுன் அன்சாரி, துணை பொதுச் செயலர் ஆரூண் ரஷீத் ஆகியோரை, பொறுப்புகளிலிருந்து நீக்கினர்.

தமீமுன் அன்சாரி கூட்டிய பொதுக்குழுவில், 'எங்களை நீக்கும் உரிமை, ஜவாஹிருல்லா பொதுக்குழுவுக்கு இல்லை. நாங்கள் தான் உண்மையான, ம.ம.க., எங்கள் பலத்தை, சட்ட ரீதியாக நிரூபிப்போம்' என, அறிவித்தனர். இதனால், ம.ம.க., இரண்டாக உடைந்தது. யார் தலைமையிலான, ம.ம.க., உண்மையானது என நிரூபிக்க, இரு தரப்பினரும், நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போதைக்கு வேண்டாம்:



இதற்கிடையில், மக்கள் நல கூட்டு இயக்கத்தில், துவக்கம் முதல் இருந்து வரும், இந்திய கம்யூ., கட்சியிலும், கூட்டணி விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. 'திருவாரூரில் நடக்கும் மக்கள் நல கூட்டு இயக்க பொதுக் கூட்டத்தில், மக்கள் நல கூட்டணி உதயமாகும்' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த திங்கள் கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே காரணம் என, கூறப்படுகிறது.

சென்னையில், நேற்று முன்தினம் பேட்டி அளித்த, இந்திய கம்யூ., முன்னாள் தலைவர் தா.பாண்டியன், 'தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதம் உள்ளது. இப்போதே, கூட்டணிக்கு என்ன அவசரம்?' என, கேள்வி எழுப்பினார். இதனால், மக்கள் நலகூட்டணியை, இக்கட்சியும் விரும்பவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. இக்கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம், அ.தி.மு.க., அணியில் சேரும் விருப்பம் காணப்படுகிறது. இதேபோல், மார்க்சிஸ்ட்கட்சியிலும், மக்கள் நல கூட்டணியை ஏற்படுத்துவதில், மாற்று கருத்துகள் எழுந்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது: எம்.எல்.ஏ.,க்கள் கருத்து தெரிவிக்கலாம்; ஆனால், அது இறுதி முடிவாகாது. கட்சி தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. 'திருவாரூர் கூட்டத்தில், மக்கள் நல கூட்டணி அறிவிக்கப்படும்' என, வைகோ தான் தெரிவித்தார். ஆனால், அதுபோன்ற செயல் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிப்பது போன்ற பணிகள், கூட்டு இயக்கத்துக்காகவே தவிர, தேர்தல் கூட்டணிக்கானது அல்ல. தேர்தல் வரும்போது, கூட்டணியை தலைமை முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.


பூத் ஏஜன்டுக்கு கூட ஆளில்லை!



மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம், சென்னை, தாம்பரத்தில் நேற்று, கட்சி தலைவர் ரிபாயி தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு பின், ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், பொது செயலராக இருந்த தமீமுன் அன்சாரி, இணை பொதுச் செயலராக இருந்த, ஆரூண் ரஷீத் ஆகியோர் கட்சி பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை. பா.ஜ., அல்லாத கூட்டணியில் இடம் பெறுவோம். பூத் ஏஜன்டுகளை நியமிக்க கூட, மக்கள் நல கூட்டணிக்கு வலிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -



வாசகர் கருத்து (72)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement