Advertisement

பாரதியின் முதல் ரசிகன்!

பாரதியின் இளமைக்காலம் எட்டையபுரம் வீதிகளில் தான் ஆரம்பித்தது. மீதி நாட்கள் சென்னை, புதுவை, மதுரை என கழிந்தன. பாரதியின் தந்தை எட்டையபுரம் அருகில் 'பிதப்புரம்' என்ற ஊரில் பஞ்சாலை வைத்திருந்தார். அதனால் பாரதியின் இளமைக்காலம் சற்று வசதியாகவே இருந்தது.
ஆங்கிலேயர் துாத்துக்குடியில், 'லாயல் மில்' என்ற பஞ்சாலை துவங்கியதும், பாரதியின் தந்தையின் பருத்தி ஆலை நஷ்டத்தில் இயங்கி குடும்பம் நலிவுற்றது.
இளமைக் காலத்தில் பாரதியின் நாவில் சரஸ்வதி குடியிருந்துள்ளார். பாரதி கவிதை புனைந்த தலைப்புகள் ஏராளம். பாஞ்சாலி சபதம், பெண்ணுரிமை, 'ஆகா' என எழுந்தது பார் யுக புரட்சி என பல. கவிதைகளில் எதுகையும், மோனையும், சந்திபிறழாமல் பிறக்கும் சிறப்பு போற்றுதலுக்கு உரியது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாரதியின் கவிதைகள் சாகா வரம் பெற்று நிலைத்திருக்கும்.
பாரதி புனைந்து ஆரம்பகால கவிதைகளை முதலில் கேட்டு ரசிக்கும் பாக்கியம் பெற்றவன், கட்டய மணியக்காரர். இவர் எட்டையபுரத்தில் வாழ்ந்து மறைந்த மனிதன். எழுதப்படிக்க தெரியாத ரசிகன்.
மணியக்காரர்கள் மணியக்காரர்கள் என்ற சமூகத்தினர் வீரதீரச் செயல்களில் சிறந்தவர்கள். இவர்கள், எட்டையபுரம் மன்னர்களிடம் மிக, மிக விசுவாசமாக சேவை செய்தவர்கள். எட்டையபுரம் மன்னர்களுடன், காலையிலிருந்து இரவு அம்சதுாளிகா மஞ்சத்தில் துாங்கச் செல்லும் வரை உடன் இருந்து பணியாற்றியவர்கள்.
உணவு பரிமாறுதல், தாம்பூலம் மடித்து தருதல் முதலியன இவர்கள் வேலை. அந்தளவிற்கு விசுவாசமாக சேவை செய்தவர்கள். இந்த வம்சாவளியில் வந்தவர் தான் இந்த கட்டய மணியக்காரர்.
தேர் திருவிழா
எட்டையபுரம் சிவன் கோயில், பெருமாள் கோயில் தேர் திருவிழாக்கள் சிறப்பு பெற்றவை. எட்டையபுரத்தை சுற்றியுள்ள கிராமத்து மக்கள், இந்த தேர் திருவிழாவை காண எட்டையபுரம் வருவர். மிக சிறப்பாக கொண்டாடப்படும் இந்த தேர் திருவிழா 'சித்ரா பவுர்ணமி' அன்று கொண்டாடப்படும். அதே நாளில் தான் மதுரையிலும் மீனாட்சி தேர்திருவிழா கொண்டாடப்படும்.
தேர்திருவிழாவில் நடக்கும் வீரவிளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்கள் மன்னரிடம் இருந்து பரிசுகள் பெறுவார்கள். இந்த விளையாட்டுகளில் இளவட்டக்கல்லை சாதாரணமாக துாக்கி, முதுகிற்கு பின்புறம் போடுவார் வலிமை மிக்க கட்டயமணியக்காரர்.
பாரதியுடன் நட்பு கட்டய மணியக்காரர் வசதி இல்லாதவர். பாரதியுடன் எப்படியோ நட்பு ஏற்பட்டது. பாரதி எட்டையபுரத்தில் இருந்து எழுதிய பாடல்களை, கட்டய மணியக்காரரிடம் தான் முதலில் படித்து காண்பிப்பாராம். அந்த அளவிற்கு இருவர் நட்பும் இருந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் பாரதி பாடல்களை வீதியில் பலர் பாடுவர். ஆனால் அப்பாடலை வீதியில் முதன்முதல் பாடியவர் கட்டய மணியக்காரர்.
பாரதியின் இயற்பெயர்
'சுப்பையா'. பெரும்பாலும் எல்லோரும் 'பாரதி' என்று தான் அழைப்பர். ஆனால் 'சுப்பையா' என்று கடைசிவரை அழைத்தவர் கட்டயமணியக்காரர். பாரதி, இவரை 'கட்டையா' என்று தான் அழைத்துள்ளார். கவிதை பிறந்த தெப்பக்குளம் பாரதி எட்டையபுரத்தில் இருக்கும் போது, தான் எழுதிய கவிதையுடன், கட்டயமணியக்காரர் தன்னை சந்திக்க வரும் வரை காத்திருப்பார்.
பின் இருவரும் பேசிக்கொண்டே எட்டையபுரம் தெப்பக்குளத்தின் கரையிலிருக்கும் கிருஷ்ணன் கோயில் மண்டபத்தில் அமர்வர்.
அப்போது பாரதி புனைந்த கவிதையினை வாசித்து காட்டுவது வழக்கம். சில நேரங்களில் ராகத்தோடும் பாரதி பாடியுள்ளார்.வழக்கமாக பாரதியை சந்திக்க வரும் கட்டயமணியக்காரர், சில நாட்களாக வரவில்லை. பாரதி, கட்டயமணியக்காரர் இல்லம் சென்று 'கட்டை எங்க போன? ஏன் என்னை பார்க்க வரவில்லை' என கேட்டார்.
அதற்கு மணியக்காரர், 'இங்க தான் இருந்தேன். நான் உன்னுடன் பழகுவதை பார்த்து பலரும் நம்ம ஊரில் என்னை 'காக்கா, காக்கா' என அழைக்கிறார்கள். நீ வசதியானவன். அதனால் உன்னை நான் காக்கா பிடிக்கிறேனாம். உனக்கு என்ன தெரியும்.
உன்னிடம் போய் கவிதை எழுதி, பாரதி படித்துக் காட்டுகிறானே என கேலி செய்கின்றனர்' என்றார். அதற்கு பாரதி சிரித்துக் கொண்டே, 'கட்டை... மதியம் சமையல் செய்து முடித்து நாம் சாப்பிடுவதற்கு முன், முதலில் காக்கைக்குதானே சோறு வைக்கிறோம். நான் சமைத்து முடித்த கவிதைகளை, உன்னிடம் தானே முதலில் படித்துக் காண்பிக்கிறேன். எனவே அவர்கள் உன்னை 'காக்கா, காக்கா' என்று அழைப்பது உயர்வு தானே' என்றார்.
புலிமால் தெரு இவ்வளவு வலிமை உள்ள கட்டயமணியக்காரருக்கு ஒரு குறை இருந்தது. அதில் பாரதிக்கு வருத்தம் உண்டு. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, கட்டய மணியக்காரருக்கு பைத்தியம் பிடித்துவிடும். பின் வெயில் குறைந்தவுடன் பழைய நிலைக்கு வந்து விடுவார். பைத்தியம் பிடித்த அந்த வலுவான கட்டயமணியக்காரரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
முரட்டுத்தனமாக நடந்து கொள்வார். எனவே அவரை இரும்பு சங்கிலியில் பிணைத்து எட்டையபுரம் சிவன் கோவில் பின்புறம் மரத்தில் கட்டி வைத்திருப்பார்கள்.
புலிமால் தெரு என்று பெயர் வரக்காரணம் சுவாரஸ்யமானது. எட்டையபுரம் மன்னர் ஒருவர் புலி வளர்க்க வேண்டுமென்ற ஆசையில் புலி கூண்டு செய்து, அதில் வளர்த்து வந்தார். காலப்போக்கில் வேறு மன்னர்கள் இப்படி புலி வளர்க்க எண்ணமில்லாமல் விட்டு விட்டனர்.
எனவே அந்த தெருவிற் புலிமால் தெரு என்று பெயர் வந்தது.இதை சுட்டிக்காட்டுவதற்கு காரணம் பைத்தியம் பிடிக்கும் மனநிலை இருந்தால், உடனே கட்டயமணியக்காரர் அந்த கூண்டில் தானே போய் இருந்து கொண்டு வெளிப்புறம் பூட்டிவிடுவாராம்.
யாராலும் கட்டுப்படுத்த முடியாத கட்டய மணியக்காரர், அந்நேரம் பாரதி சாப்பாடு கொடுத்தால், அமைதியாக வாங்கி சாப்பிடுவார்.
'இவ்வளவு உடல் உரத்தோடு இருக்கிற, சர்வசாதாரணமாக இளவட்டக்கல்லை துாக்கி போடுகிற உனக்கு, கடவுள் இப்படி ஒரு சோதனையை கொடுத்துள்ளாரே' என்று கட்டயமணியக்காரரை பார்த்து வருத்தப்படுவார் பாரதி.
முயற்சிகள் பல செய்தும் கட்டயமணியக்காரர் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. பாரதியின் தாய்மாமா சாம்பசிவ ஐயர், எட்டையபுரம் மன்னர் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி, பாரதி வீட்டில் தங்கி இருந்து மறைந்தார். அவர் எட்டையபுரம் மக்களிடம் பகிர்ந்து கொண்ட செய்திகளை, அங்குள்ள முதியவர்களிடம் இருந்து நான் தெரிந்து கொண்டது தான் மேற்கண்ட தகவல்கள்.- முனைவர் எட்டையபுரம் கே.கருணாகரப்பாண்டியன்பேராசிரியர் (ஓய்வு) மதுரை. 98421 64097

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement