Advertisement

மரியாதை கெட்ட மக்கள் பிரதிநிதிகள்

இந்திய அரசியல் சாசனத்தின் உயிர்நாடி பார்லிமென்ட். பார்லி மென்ட் செயல்படாவிட்டால், அரசியல் சாசனம் உயிரற்றதாகி விடும். இதை வேறொரு விதத்தில் கூறுவதென்றால், பார்லிமென்ட், மக்கள் மனதைப் பிரதிபலிக்கும் ஆன்மா. அந்த ஆன்மாவிற்கு ஊறு விளைவிப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் தேசத் துரோகிகள்; மக்களின் விரோதிகள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் மனசாட்சியின் காவலர்கள். மக்களின் அபிலாஷைகளையும், ஆசாபாசங்களையும் பிரதிபலிப்பவர்கள். மக்கள் அனுபவிக்கும் இன்பங்களுக்கும், துன்பங்களுக்கும் அவர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்.ஆனால், இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான் என்ற கணக்கில் காங்கிரஸ் கட்சியினர், கடந்த லோக்சபா தேர்தலில் அவர்கள் புரிந்த இமாலய ஊழல்களுக்காக மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட பின்னரும் கூட, தங்கள் தவறுகளை உணரவில்லை. தற்போது மக்கள் நலனுக்காக பார்லிமென்டில் கொண்டு வரப்படவிருக்கும் மிக முக்கியமான சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்களை, பா.ஜ., அரசால் நிறைவேற்ற முடியாதவாறு பார்லிமென்டின் இரு சபைகளிலும், காங்கிரஸ் கட்சி, எம்.பி.,க்கள் கூச்சல் போட்டும், குழப்பம் விளைவித்தும் தடுத்து வருகின்றனர். இவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்னும் தகுதியை இழந்து மக்களின் விரோதிகளாக உருவெடுத்திருக்கின்றனர்.மக்கள் நலத் திட்டங்கள் சம்பந்தமாக மசோதாக்களை பார்லிமென்டில் அரசு தாக்கல் செய்யும். அம்மசோதாக்கள் மீது ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆக்கப்பூர்வமான தங்கள் கருத்துக்களை முன் வைத்து, விவாதித்து, பின்னர் அனைத்து உறுப்பினர் களின் ஒருமித்த ஒப்புதலுடன் அம்மசோதாக்கள் சட்டமாக இயற்றப்படும்.

முந்தைய தங்கள் ஆட்சியின்போது தங்களுக்கு எதிராக, பா.ஜ.,வினர் செய்த அதே செயலைத் தான் தாங்களும் செய்வதாகக் கூறி, பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டிருப்பது உண்மையில், பா.ஜ.,வை பழி வாங்குவதாக ஆகாது; மாறாக, தங்களுக்கு ஓட்டளித்து தங்களை அரியாசனத்தில் அமர்த்தாத இந்திய மக்களைப் பழிவாங்குவதுதான்.கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி, மத்தியிலும், தி.மு.க., தமிழகத்திலும் தங்கள் செல்வாக்கை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், அவ்விரு கட்சிகளும் கூட்டாக இணைந்து இமாலய ஊழல்களில் ஈடுபட்டது தானே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை.

அடிமைகளாக வாழ்ந்த இந்தியர் களுக்கு விடுதலை பெற்றுத் தந்தவர்கள் தாங்கள் தான் என்று மார் தட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி, தங்களுடைய பார்லிமென்ட் முடக்கப் போராட்டத்தைக் கைவிட்டு, மக்கள் நலச் சட்டங்கள் நிறைவேற, பா.ஜ., அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதை மக்கள் மனதார வரவேற்று, காங்கிரஸ் கட்சியின் புனர் வாழ்விற்கும் கை கொடுப்பர் என்பது நிச்சயம்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கப் போகிற சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும் நிலம் கையகப்படுத்தும் மசோதா, சிறு, குறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கான திட்ட வரைவு மசோதா ஆகியவற்றை பார்லிமென்டில் நிறைவேற்றுவதைத் தடுப்பது காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும், தி.மு.க., போன்ற பிற கட்சிகளும் தேசநலனுக்கும், மக்கள் நலனுக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல். மக்கள் நலனில் அக்கறை கொண்டு பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் செய்யும் செயலாக ஆகாது.

ஆண்டுதோறும் கூட்டப்படும் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது சபை அலுவலர்கள் மற்றும் எம்.பி.,க்களின் தினசரி செலவுகள் வகையில் பல லட்சங்கள், மக்கள் வரிப் பணத்திலிருந்து செலவழிக்கப்படுகின்றன. இச்சிறப்புச் சலுகைகளைப் பெறும் மக்கள் பிரதிநிதிகள், தங்களுக்கு படியளக்கும் மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் மக்கள் நலன் சார்ந்த சட்டங்கள் இயற்றப்படாமல் தடுத்து, பார்லிமென்ட் ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தி வருகின்றனர். இந்திய ஜனநாயகம் இன்று குரங்கு கையில் சிக்கிய பூமாலை போன்று, பொறுப்பற்ற, தேச நலனில், மக்கள் நலனில் அக்கறை கொண்டிராத சுயநல அரசியல் வியாபாரிகளிடம் மாட்டி சின்னாபின்னமாகி வருகிறது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எம்.பி.,க்கள் அனைவரும், கட்சி பேதமின்றி ஒற்றுமையுடன் ஓட்டளித்து தங்கள் ஊதியம், பஞ்சப்படி, இன்ன பிற சலுகைகளைப் பெருக்கிக் கொள்வதில் காட்டும் அக்கறையும், ஒற்றுமையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்று சுயநல ஊழல் அரசியல்வாதி கள் மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத, காலத்திற்கு ஒத்துவராத பொருளாதார சிந்தனைகளையுடைய, வன்முறையில் நம்பிக்கை கொண்ட அரசியல்வாதிகளால், இந்திய ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.லட்சக்கணக்கில் ஆண்டுதோறும் தொழிற்கல்வி படித்து முடித்து, கல்லுாரிகளை விட்டு வெளியே வரும் நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லாத நிலை இருக்கிறது. புதிய சிந்தனைகளையுடைய இந்த இளைஞர்களுக்கு எந்த முயற்சியையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை. கோடிக்கணக்கான கிராமப்புற இளைஞர்களும், மற்றவர்களும் வேலை வாய்ப்பின்றி மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இலவசங்களை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இதை நம் அரசியல்வாதிகள் நன்கு அறிந்திருந்தும் பாரா முகத்துடன் இருக்கின்றனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொழில், வர்த்தகம், வேலை வாய்ப்பு, ஏற்றுமதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விளங்குவதால், இவற்றில் பொதுமக்களின் நேரடி பங்களிப்பு அத்தியாவசியமாகிறது. இதற்கு சாலைகள், ரயில் திட்டங்கள் விரிவாக்கம், மாநிலங்களுக்கு இடையே நீர் மற்றும் மின்சார பங்கீடு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரிவுபடுத்துதல் போன்ற திட்டங்களை விரைவில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதைக் கெடுப்பதே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் பிரதான நோக்கமாக இருக்கிறது.தங்கள் கட்சியால் ஏற்றுக் கொள்ளப்படாத அரசால் கொண்டு வரப்படும் மசோதாக்களை எதிர்க்கும் விதமாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்யலாமே தவிர, சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை. கூச்சலிடுவதும், அவைத் தலைவரின் இருக்கையை சூழ்ந்து இருப்பதையும், காங்கிரசும், இடது சாரிகளும், தி.மு.க., போன்ற பிற கட்சிகளும் செய்து வருகின்றன.

தேச பக்தர்களும், சட்ட வல்லுனர்களும், புகழ் பெற்ற மருத்துவர்களும், இன்ஜினியர்களும், அறிவு ஜீவிகளும், மக்கள் தொண்டர்களும் ஒன்றாக அமர்ந்து அலங்கரித்த இந்தியப் பார்லிமென்ட், தற்போது சிறுமதி படைத்த, கொள்கையற்ற, தேச விரோத, மக்கள் விரோத சக்திகள் கூடும் கூடாரமாக ஆகிவிட்டது.மக்களின் நன்மதிப்பையும், மரியாதையையும் சுத்தமாக இழந்து நிற்கும் இந்த ஜனநாயக விரோதிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
krishna_samy2010yahoo.com

-- ஜி.கிருஷ்ணசாமி -
கூடுதல் காவல் துறை
கண்காணிப்பாளர் பணி நிறைவு, எழுத்தாளர், சிந்தனையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement