Advertisement

இன்னும் நான் பேசுவேன்! -பேராசிரியர் சாலமன் பாப்பையா

அறிவார்ந்தோர் அவையை அலங்கரித்த பட்டிமன்றத்தை, சாதாரண மக்களிடம் எடுத்துச் சென்று பாமரர்களுக்கும் சொந்தமாக்கி, எளிமையான பேச்சு மொழியிலும் வலுவான கருத்துக்களை சொல்ல முடியும் என, பட்டிமன்றத்திற்கு தனிப்பாதையை உருவாக்கிக் கொடுத்தவர் சாலமன் பாப்பையா.பேராசிரியராக அடையாளப்படுத்திக் கொண்டாலும், தமிழறிஞராக திருக்குறளுக்கு இவர் அளித்த விளக்கம், தமிழ் படைப்புலகில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியது. தனது கருத்தில் உறுதியாக இருந்து மக்கள் மன்றத்திலும் முன் வைத்து புதுமை அத்தியாயம் படைத்தார். ஒரு சினிமாவில் நகைச்சுவை காட்சியில் கூட திருக்குறளை எழுதியது யார் என்ற கேள்விக்கு சாலமன்பாப்பையா என்று சொல்லும் அளவிற்கு, சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.மதுரையில் அவருடன் ஓர் நேர்காணல்:* முதுமையிலும் சுறுசுறுப்பாக இயங்குகிறீர்களே?சிறுவயதில் உடம்பு தாக்குப்பிடிப்பது போல் இப்போது இல்லை. அறுபது, எழுபது வயது வரை சமாளித்திடலாம். முக்கியமாக, 70க்கு பின் எப்படி வாழவேண்டும் என யாரும் சொல்லவில்லை. நாமாகவே கற்கவேண்டி உள்ளது.* நினைவில் நிற்கும் கல்லுாரிக் காலம்?நான் மில் தொழிலாளியின் பிள்ளை. கார்ப்பரேஷன் பள்ளியில் படித்தவன். பி.ஏ., பொருளாதாரம் படித்தேன். ஆங்கிலத்தில் பயிற்சியின்மை இருந்ததால், எம்.ஏ., தமிழ் படித்தேன். அங்கே தான் வேடிக்கை. எனக்கு முறையாக தமிழாசிரியர்கள் இலக்கணம் கற்றுத்தரவில்லை. தெரிந்தவர்களும் இல்லை. நன்கு கற்றுத்தந்திருந்தால், இன்னும் நான் முனைப்போடு செயல்பட்டிருக்கலாம்.* பேராசிரியர் பணி லட்சியம் தானா?இலக்கியத்தில் ஆர்வம் இருந்தாலும், தமிழ் இலக்கியங்கள் இந்து சமயத்தோடு தொடர்பு உள்ளதால் தெரியாததை விரும்பி கற்றேன். கல்லுாரியில் 'டியூட்டர்' பணியில் சேர்ந்த போதுசம்பளம் ரூ.140. ஆனாலும் மாணவர்களிடம் நிற்கப் போகிறோம் என்பதற்காக, தினமும் மிடுக்காக ஆடை உடுத்தி செல்வேன். லட்சியத்தோடு தான் பணியில் சேர்ந்தேன்.* தமிழ் மாணவர்களை சமாளிப்பது கடினம் தானே?பணியில் சேர்ந்த போது வாரத்திற்கு 2 வகுப்பு கொடுப்பார்கள். அதுவும் கடினமான பாடமாக இருக்கும். நன்றாக பாடம் நடத்தினால் மாணவர்களை சமாளிக்கலாம். அதே போல் துறை ஆசிரியர்களின் நம்பிக்கை பெறும் கட்டாயமும் இருந்தது. புறநானுாறு வகுப்பில் மாணவர்கள் உற்சாகமாக கேட்பார்கள். ஆனால் திருக்குறள் கற்பிக்கும் போது தடுமாற்றம் இருக்கும். திருக்குறளையும் சுவையாக நடத்த முடியும் என்பதற்காக கதை சொல்லி புதிய பாணியை கையாண்டேன். அதை மாணவர்கள் மிகவும் ரசித்தார்கள்.* பொது மேடைகளில் பேசும் ஆர்வம் வந்தது?முதலில் வேலுாரில் தான் வேலை பார்த்தேன். அக்காலங்களில் தேசிய பாரம்பரியத்தோடு எனக்கு ஈடுபாடு வரத்துவங்கியது. எட்டையபுரத்தில் கலை இலக்கிய பெருமன்ற விழாவில், தோழர் ஜீவானந்தம் எனது பேச்சை கேட்டு வியந்தார். தொடர்ந்து ஒரு வாரம் கோல்கட்டாவிற்கு அழைத்து சென்று பேச வைத்தார்கள். அது சீனா, இந்தியாவின் மீது படையெடுத்த காலமாக இருந்தது. தனி சொற்பொழிவுகளுக்கு மாணவர்களும் வாய்ப்புகள் அளித்தார்கள்.* மக்கள் மனங்களில் பட்டிமன்றம் வந்தது எப்படி?1972ம் ஆண்டு வரை இலக்கியத்தில் புலமை பெற்றவர்களுக்கு தான் பட்டிமன்ற மேடைகள் வழங்கப்பட்டு வந்தன. அதுவும் அறிவுசார்ந்தோர் மேடைகளாக இருக்கும். அதை குன்றக்குடிஅடிகள் எளிய நடையாக்கி, வீதிகளுக்கு கொண்டு வந்தார். அதை தமிழகத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு எடுத்துச் சென்றதில் எனது பங்கும் முக்கியமானது.* மேடைகளில் உங்கள் கதாநாயகர்கள் யார்?கம்பனுக்கு முதலிடம், திருவள்ளுவருக்கு இரண்டாமிடம், பாரதிக்கு மூன்றாமிடம். இவர்களை முன்னிறுத்தி தான் எப்போதும் என் பேச்சு இருக்கும்.* பேச்சாளர்களுக்கு முக்கியமான கட்டுப்பாடுகள்?என்னோடு மேடையில் பேசவரும் பேச்சாளர்கள் ஆண்கள் கண்டிப்பாக வேட்டி அணியவேண்டும். பெண்கள் அதிக நகைகளை அணிந்து வரக்கூடாது. அதை நான் அனுமதிக்க மாட்டேன்.* படித்தது எவை? எழுதியது எவை?சங்க இலக்கியம், காப்பியங்கள், சமய இலக்கியம், பிற்கால இலக்கியம் என பல படித்துள்ளேன். தமிழ் எவ்வளவு பெரிய விஷயம். இலக்கியம் உள்ளே போனால் அதை கடக்க முடியாது. நான் படித்தது, சுண்டு விரலில் நகத்தை கத்திரித்து போட்ட அளவிற்கு தான். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை, வானொலி பேச்சு - உரை மலர்கள், வானொலி நகைச்சுவை பேச்சு, திருக்குறள் மூலமும் உரையும் எழுதியுள்ளேன்.* பேச்சில் சலிப்பு ஏற்படுகிறதா?6,000க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியிருப்பேன். இன்னும் பேச வேண்டும் என்ற ஆர்வம் தான் என்னிடம் இருக்கிறது. பேச்சில் சலிப்பே இல்லை, நினைத்தாலே இனிப்பாகஇருக்கிறது.* சினிமா?அது முடிந்து போன கதை. இனி அந்தப் பக்கம் திரும்புவதே இல்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement