Advertisement

திருத்தப்பட வேண்டிய வாழ்வியல் தடுமாற்றங்கள்

-இந்திய வரலாற்றை உற்று நோக்கி ஆராய்ந்தால், அடிமைத்தனம், உணர்ச்சித்தனம், ஊழல்தனம், ஒன்றுபடாத்தனம், ஒழுங்கற்ற சமுதாய போக்கு, மாணவனை மேம்படுத்தாத கல்விமுறை, வன்முறை கலாசாரம், முறையில்லா அரசியல், நெறியில்லா தேர்தல் முறை போன்ற தடுமாற்றங்கள், நம் நாட்டை வளர்ச்சி பாதையில் இலக்கை அடைய முடியாமல் தடை கற்களாக இன்று வரை உள்ளன.
அடிமைத்தனம் ஐரோப்பியர்கள் யாருக்கும் அடிமைகளாக இருந்ததில்லை. ஆட்சியாளர்களாகவே இருந்துள்ளனர். ஜப்பானியர்கள் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை. ஆளுபவர்களாகவே இருந்துள்ளனர். நம் இந்தியர்கள் மட்டும் அயலாரை ஆள்பவர்களாக இருந்ததில்லை. அடிமையாகவே இருந்துள்ளனர்.
திரைப்பட மோகம் திரைப்பட மோகம் வெறியாக்கியது. காலப்போக்கில் திரைப்பட மோகமே, அரசியல் பதவிகளுக்கு வழித்தடமாக்கப்பட்டது. திரைப்படம், அரசியல், ஆகியவற்றுடன் கூட அண்மைக்காலமாக கிரிக்கெட் முதலான இறக்குமதி விளையாட்டுகளின் மேல் திட்டமிட்டு மோகம் ஊட்டப்பட்டது. திரை, அரசியல், விளையாட்டு, மது முதலானவற்றுள் எளிய மக்களை விழ வைப்பதன் மூலம் பதவிகளையும்,
பவுசுகளையும் தொடர்ந்து நிலை நிறுத்தி கொள்ள முடிகிறது.ஊழல், லஞ்சம், கையூட்டு ஆகியவை விதையிட்டு விருட்சமாக செழித்திருக்கிறது. இதனால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் விபரீதம் நிகழும் நாள் வெகு
தொலைவில் இல்லை.
ஒருமித்த குரல் இல்லை இந்தியர்களின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணம், உரிய பொது விவகாரங்களில் கூட, ஒருமித்த குரல் கொடுக்காமல் இருப்பது தான். ஜாதி, மதம், கட்சி அரசியல் இந்தியர்களை ஒன்றுபடாமல் செய்கிறது. ----
பள்ளி, கல்லுாரி, பல்கலை கழகங்களில் படித்து கொண்டிருப்போரும், படித்து முடித்தோரும் தம் கல்வி காலத்தில் நல்ல நுால்கள் படித்தபடியோ, நல்ல ஆசிரியர்கள் சொன்னபடியோ நடப்பதில்லை. நடக்காமைக்கு பல்வேறு காரணம் இருக்கின்றன. இவர்கள் படித்த, கேட்ட அற உரைக்கும், அறிவுரைக்கும் நேர் முரணாக இவர்கள் வாழும் காலத்து அரசியலும், சமூகமும் இருக்கின்றன. இவர்கள் உண்மை வெல்லும் என்று படித்திருந்தால், இவர்கள் கால அரசியலிலும், சமுதாயத்திலும் பொய் வெல்வதை நேரில் பார்க்கிறார்கள். விளைவு தான் படித்த, செவிமடுத்த நல்ல கருத்துக்களை பின்பற்றாமல் புறக்கணிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
சுதந்திரத்திற்கு முன்பு சுதந்திரத்துக்கு முன்புவரை அர்ப்பணிப்பு உணர்வும், சேவை உணர்வும் கொண்டவர்கள் மட்டுமே, பொது வாழ்க்கையில் இருந்தனர். ஆண்டுகள் ஆக, ஆக சேவை உணர்வு இல்லாதவர்கள் பொது வாழ்வை லாபகரமான வியாபாரமாக மாற்ற தொடங்கினார்கள்.
புதிதாக வளர்ந்த அரசியல் வியாபாரத்திற்கு துணையாக ரவுடிகள் தேவைப்பட்டனர். முறையான அரசுக்கு, முறையான ராணுவம் துணையாக இருப்பதை போல, முறையற்ற அரசியல் போக்கிற்கு, முறையற்ற ரவுடிகள் துணை பக்க பலமாக ஆனது. காலப்போக்கில் அரசியல்வாதிகளுக்கு துணையாக இருந்த ரவுடிகளில் பலர், அரசியல்வாதிகளாக மாற தொடங்கினர். அரசியல்
வன்முறையானது.அரசியல்வாதிகள் அரவணைப்பை பெற்ற நிர்வாகம், அதன் நிர்வாகிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை எளிதாக புறந்தள்ளினர். இச்சூழலில் பொதுமக்களும் அரசியல்வாதிகளை பின்பற்றி வன்முறை ஆயுதங்களை கையில் எடுக்க தொடங்கினர். சாலை மறியல், வாகனங்களை தாக்கி உடைத்தால் அதிகாரிகள் அங்கு வந்து உடனே குறைகளை கேட்க தொடங்குகிறார்கள்.
மக்களின் கோரிக்கைகள் அங்கு முன் வைக்கப்படுகின்றன. பிறகுதான் சாலை மறியல் கலையும். இப்படி வன்முறையும், இடைக்கால தீர்வும் வழக்கங்களாகி விட்டன.
வறுமை, வேலையில்லா
திண்டாட்டம், தொய்வான நிர்வாகம் ஆகியவற்றை ஒழித்து சாதிக்க கூடிய அறிஞர்களும், அவர்தம் கருத்துக்களும் இந்திய ஜனநாயக முறையில் ஒதுக்கப்படுகின்றன. கும்பல் முடிவே, முடிவு என ஆகி விட்டதால், அறிஞர்களின் முடிவு எடுபடுவதில்லை.
நம் ஜனநாயக அமைப்பில் சீழ்பிடித்து நாட்டையே அழிப்பதற்கு முன், நாடாளுமன்றம், சட்டமன்றம், நிர்வாகம், நீதி, தேர்தல் துறைகளில் உரிய திருத்தங்களை அரசியல் சாசனத்தில் செய்து விட வேண்டும்.
- சிங்கப்பூரை பாருங்கள்
எந்த வளமும் இல்லாத சிங்கப்பூரை, 25 ஆண்டுகளில் செல்வம் வளம் மிக்க நாடுகளின் வரிசையில் கொண்டு வந்து நிறுத்திய முதல் பிரதமர் காலஞ்சென்ற 'லீ குவாங் யூ' கூறியது, “சிங்கப்பூர் ஐரோப்பிய நாடு அல்ல, ஆசிய நாடு. ஆசிய நாடுகளுக்கு என தனி மனோ நிலை இருக்கிறது. எனவே எம் நாட்டிற்கு ஏற்றதான, ஜனநாயக முறையை வகுத்து கொண்டோம்.
கட்டுப்பாடுடன் கூடிய ஜனநாயகமே சிறந்தது என நடைமுறைப்படுத்தினோம். எந்த கோட்பாடும், அந்தந்த மண்ணிலிருந்தும், மக்களிடமிருந்தும் வருவிக்கப்பட வேண்டும். அதுவே, மண்ணுடனும், மக்களுடனும் ஒட்டும்” என்றார். நம் நாட்டு தேர்தல் முறை இதன் அடிப்படையில் உள்ளதா என்பதே கேள்வி. மைக்கேல் எச்.ஹார்ட் என்பவர் 'தி ஹண்ட்ரட்' எனும் நுாலை எழுதியுள்ளார். இந்நுாலில், மனித குலம் தோன்றியதிலிருந்து அண்மைக்காலம் வரை வாழ்ந்து, மக்களிடையே தடம் பதித்து மறைந்த 100 பேரை சாதனை அடிப்படையில் வரிசைப்படுத்தி விளக்கியுள்ளார். இப்பட்டியலில் புத்தர், அசோகர், மகாவீர் எனும் மூன்று இந்தியர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.
நாம் கொண்டாடும் காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. காந்தியின் பெயரை சேர்க்க இயலாமைக்குரிய காரணத்தை, அவர் தம் இரண்டாவது பதிப்பில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
'ஒருவர், மனித வரலாற்றில் நிகழ்த்திய தாக்கத்தின் அளவு, தாக்கம் பரவிய அளவு, பின்பற்றிய மக்களின் எண்ணிக்கை, கொள்கை பின்பற்றப்பட்ட கால அளவு, நாடுகளின் பரப்பு
ஆகியன கணக்கில் கொள்ளப்பட்டன. இந்த அடிப்படையில்தான் புத்தர், அசோகர், மகாவீர் இடம் பெறுகின்றனர். காந்தியின் கொள்கைகள் அவர் பிறந்த இந்தியாவில் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நெடுங்காலம் போற்றப்படவில்லை. வேறு நாடுகளிலும் பரவவில்லை' என்கிறார்.
அண்ணல் காந்தியின் சத்திய சோதனைகளை அவர் பிறந்த நாட்டிலேயே நாம் புறக்கணித்து விட்டோம். இதில் நமது அரசியல் முன்னணியில் இருக்கிறது. இதற்கு நம் நாட்டில் மூலை, முடுக்கெல்லாம் திறக்கப்பட்டிருக்கும் மதுபான கடைகளே சாட்சி.
-எம்.பாலசுப்பிரமணியன்,சமூக ஆர்வலர், காரைக்குடி.94866 71830.-

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement