Advertisement

தேவார தேனிசை கற்போம்: என் பார்வை

கலைகள் மிகவும் ஆற்றல்உடையவை. அவற்றின் சிறப்பு அளவிட்டுக் காண்பதற்கு
அரியது. அவை உலக இயல்பையும் மனித உள்ளத்தின் இயல்பையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு மனித உள்ளமும் தனியொரு
உலகமாக விளங்குகிறது. கலைஞனின் உள்ளத்தில் இயங்கும் உலகத்தைக் கலைகள் புலப்படுத்திக் காட்டுகின்றன.ஒலியின் அடிப்படையில் அமைவது இசைக்கலை. அதைக் கேட்டுத்தான் சுவைக்க முடியும். ஒலியை நுட்ப உணர்வால் ஒன்றுடன் ஒன்றாகச் சுவை தரும் வண்ணம் இணைத்து, இன்னிசை எழுமாறு அமைத்துக் காட்டுவதில், இசைக்கலை தோற்றம் பெறுகிறது.
கரடுமுரடாக இருக்கும் ஒலியை மனத்தால் கட்டுப்படுத்தி, அறிவுத்திறனால் ஒழுங்கான முறையமைப்புக்குக் கொண்டுவந்து சீர்ப்படுத்துவதில், இசைக் கலையின் அடிப்படைத் தன்மை அமைந்துள்ளது.இன்பத்திலும் துன்பத்திலும் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு. என்றும் துன்பத்துக்கு ஆறுதலளிக்கும் நன்மருந்தாக இசை பயன்பட்டு வருகிறது. இன்புறும் போது மனிதன் இயற்கையாகப் பாடவும், பாடல் கேட்கவும் விரும்புவதை காண்கிறோம். துன்பம் துடைக்கும் ஆற்றலும் பாடலுக்கு உண்டு.
இந்திய இசையின் சிறப்பு பழமைச் சிறப்புமிக்க தமிழினத்தின் இசை மரபும் கூடப் பழமையுடையது. அனைத்து உயிர்களையும் வயப்படுத்துவது என்னும் பொருளில், இசை என்று பெயரிட்ட தமிழரின் நுண்ணறிவு போற்றுதலுக்குரியது. இந்திய இசை பக்தியை அடிப்படையாகக் கொண்டது. இறை வழிபாட்டில் இசை முக்கிய அங்கம் வகிக்கிறது.
இப்படிப்பட்ட இசை தமிழ்நாட்டில் மொழியோடு இரண்டறக் கலந்துள்ளது. ஆம்! தமிழ் மொழியின் ஓர் அம்சமாகவே இசை விளங்குகிறது. இசை, -இறைவனையும் நம்மையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது. தமிழகத்தில் தேவார இசை சிறப்பான நிலையில் உள்ளது. தேவார இசையைக் கற்றுக்கொண்டு பல்வேறு நிலைகளில் பயன்பெற்றோர் ஏராளம்.
எல்லா வயதினரும் தேவாரம் பாடலாம். ஆனால், குறிப்பாக மாணவர்கள், இளைய வயதினர் தேவாரம் கற்றுக் கொள்வதால் அவர்களது உள்ளம் பண்படையும்; அறிவு கூராகும். எண்ணம் சுத்தமாகும்.
ஆதீனங்களின் பொறுப்பு தேவாரத் திருமுறை இசையை தமிழகத்தில் உள்ள பல்வேறு அறநிலையங்கள் மாணவர்களுக்கு செம்மையான முறையில் கற்றுத்தந்தது. இன்றும் கற்பித்துக்கொண்டிருக்கின்றனர். ஆன்மிகத்தையும், தமிழ்மொழியையும், திருமுறையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழகத்தில் உள்ள ஆதீனங்களுக்கு உண்டு. அவ்வகையில் தருமபுர ஆதீனம் தேவார இசை பாடசாலையை தோற்றுவித்து, ஆசிரியர்களை வைத்து பல்வேறு நிலைகளில் ஓதுவார்களை உருவாக்கியது. அதேபோல திருப்பனந்தாள் ஆதீனமும் தேவார திருமுறையை, பாடசாலை மூலமாக பலருக்கும் கொண்டுசென்றதின் விளைவாக, இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு திருக்கோவில்களில் ஓதுவார்கள் திருமுறை இசையை வளர்த்துவருகின்றனர்.
மதுரை சைவ சித்தாந்த சபை 1952ல் தொடங்கப்பட்ட மதுரை சைவ சித்தாந்த சபை, திருமுறை இசையை பல்லாண்டுகளாக மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 1980ல் அறநிலையத்துறை சார்பில் தேவாரத் திருமுறை பாடசாலை தொடங்கப்பட்டு பொன்
முத்தையா ஓதுவார் இசையில் தலைசிறந்த மாணவர்கள் உருவாகினர். காரைக்குடி அருகில் உள்ள கோவிலுார் ஆதீனத்தில் நாதஸ்வரம், தவில் துறையோடு தேவாரமும் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு, அழகப்பா பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தேவாரம் ஒரு துறையாக விளங்கி வருகிறது. சென்னையில் தமிழ் இசைச் சங்கம், தருமபுர ஆதீன பாட சாலை போன்ற அமைப்புகளும் தமிழிசை தேவாரத்தை வளர்த்து வருகின்றன.
தேவார இசையை முழு நேரமாகக் கற்றுக் கொள்வதற்கு, தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மூன்றாண்டு காலம் படிக்கவேண்டும். 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் யாவரும் தேவாரம் கற்றுக் கொள்ளலாம். மாணவர்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ.400 வீதம் இசைக்கல்வி ஊக்கத்தொகை வழங்குகிறது. அரசு இசைப்பள்ளிகளில் தேவார இசையோடு நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், குரலிசை ஆகிய துறைகளிலும் கற்பிக்கப்படுகின்றது. கற்பதால் என்ன பயன் தேவாரம் கற்றுக்கொள்ள, எழுதப்படிக்கத் தெரிந்தாலே போதும். இசையில் ஆர்வம் வேண்டும். தேவாரம் பாடத் தெரிந்திருந்தால் திருக்கோயில்களில் ஓதுவார் பணியில் சேரலாம். குடமுழுக்கு, திருமணம் போன்ற நிகழ்வுகளில் இசைநிகழ்ச்சி செய்து பொருள் ஈட்டலாம். சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ். கனடா, இலங்கையில் தேவார இசை பயின்றவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தேவார இசையை ஒரு தொழிலாக வைத்துக் கொண்டால் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.
இனிவரும் காலங்களில் இசைத்துறை மிக உயர்வான இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எக்காலத்திலும் பிறரை மகிழ்வித்து தானும் மகிழ்வது இசைத்துறையில் மட்டுமே சாத்தியம். தேவாரம் தமிழ் மந்திரமாகச் சொல்லப்படுகின்றது. தேவாரம் பாடுவதால் நாம் நினைத்தவற்றை பெறமுடியும் என்பது சான்றோர் வாக்கு.
மதுரையில்.. .மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக, ஓதுவார் பயிற்சி பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. உண்டு உறைவிடப்பள்ளியாக இயங்கி வரும் இங்கு, மாணவர்களுக்கு இலவச உணவு, உடை, இருப்பிடம், ஊக்கத்தொகை வழங்கப்பட்டு திருமுறை இசை கற்றுத்தரப்படுகிறது.
ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை பல்வேறு திருமுறை வளர்ச்சிப் பணிகளை தமிழகம் முழுவதும் செய்து வருகிறது. இந்த அமைப்பு சிதம்பரம் நகரில் ஒரு தேவார பாடசாலை நடத்துகிறது.மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி - இசைக் கல்வி அறக்கட்டளை சார்பாக தேவார இசை கற்றுத் தரப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக திருவாவடுதுறை ஆதீன கிளை மடமான
தானகோனேரியப்ப கட்டளை மடத்தில் (மதுரை தானப்பமுதலி தெரு) சனிக்கிழமை தோறும், மாலை நேரத்தில் அனைத்து வயதினருக்கும் கட்டணமின்றி, தேவாரத் திருமுறை பாடல்கள் கற்பிக்கப்படுகின்றன. எனவே வாருங்கள்...தேவார தேனிசை கற்போம்!- 'கலைமாமணி' முனைவர் தி.சுரேஷ் சிவன்இசைத்தமிழ் ஆராய்ச்சியாளர், மதுரை. 94439 30540

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement