Advertisement

சுயநலமில்லா பொதுவாழ்க்கை: என் பார்வை

"ஒருவன் விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது தீக்குச்சியை வணங்கிக் கொண்டிருந்தான். ஏன் என்று கேட்டால், எரிவதை விட ஏற்றியது உயர்ந்தது அல்லவா என்றான்” - எழுத்தாளர் புதுமைப்பித்தனின் இந்தச் சொற்சித்திரம், பொதுவாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த அனைவருக்கும் உரியது.கொடி குத்தி, கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி, தியாக உரை நிகழ்த்தி என ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினக் கொண்டாட்டம் நம்மைக் கடந்து செல்கிறது. தேசப்பற்று, தியாகம் குறித்து நிறையவே பேசுகிறோம்."தேசப்படத்திலுள்ள கோடுகள்விடுதலைக்குப் போராடியவீரத்தியாகிகளின்விலா எலும்புக் கூடுகள்!”என்றார் கவிஞர் மு.மேத்தா. போராட்டக் களம், சிறைக்கூடம், அடக்குமுறை, உயிர் தியாகம் இவைதான் தேச விடுதலையைச் சாத்தியமாக்கியது. எல்லாம் தெரிந்த நமக்கு, சுதந்திர இந்தியாவிலும் இந்த தியாகம் தொடர வேண்டும் என்று மட்டும் தெரியாமல் போனது. எது தேசப்பற்று ஒவ்வொருவரும் தன்னளவில் தேசத்தின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து, உட்பட்டு நடந்தாலே போதும். அதுதான் இன்றைய தேசப்பற்று, தியாகம். சாலை விதிகளுக்கும், போக்குவரத்து விதிகளுக்கும் உட்பட்டு வாகனம் ஓட்டினால் அதுவும் ஒருவரின் தேசப்பற்றை உறுதி செய்வதுதான்.சுதந்திரம் என்பது, தான் விரும்பியபடி எல்லாம் வாழ்வது என்று நினைக்கின்றனர். சுதந்திரம் என்பது எப்படியும் இருப்பதல்ல. நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதுதான் சுதந்திரம். இந்தியா ஒரு சுதந்திர நாடு என்றால், இங்கு எப்படியும் வாழமுடியாது. நம் நாட்டிற்கென்று சட்ட திட்டங்கள் உண்டு. அந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து, நான் என் உரிமைகளைப் பெற்று வாழ்வதுதான் எனது சுதந்திரம்.சுதந்திரக்கொடியான தேசியக்கொடி கூட ஒரு கயிற்றுக்கு கட்டுப்பட்டுதான் பறக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
'நான் சுதந்திரக் கொடி, கயிற்றில் கட்டுப்பட மாட்டேன்' என்றால் காற்றின் வீச்சில் அதன் நிலை என்னவாகும்? எனவே தேசத்தின் அனைத்து சட்டதிட்டங்களுக்கும், அனைத்து துறை சார்ந்த விதிமுறைகளுக்கும் மதிப்பளித்து நடத்தலே நமது சுதந்திரம் என்பதை வருங்காலத்தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்.
அடையாளம் என்ன 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பங்கேற்கும் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. ஒரு மாளிகைக்கு வௌ்ளை அடிக்கும் போது, தன்கீழ் பணிபுரியும் ஒருவனிடம், "டேய் .... இந்த தேவை இல்லாத ஆணிகளை எல்லாம் பிடுங்கி எறி” என்று வடிவேலு சொல்ல, "எது தேவை இல்லாத ஆணி?” என்று அவன் கேட்பான்."நீ புடுங்குகிறதெல்லாம் தேவையில்லாத ஆணி தான்” என்று வடிவேலு 'டென்ஷன்' ஆக, அந்த நகைச்சுவைக் காட்சி நகரும்.ஒரு வீட்டிற்கு வெள்ளை அடிக்கும் போது சுவரில் இருக்கும் துருப்பிடித்த ஆணிகளைப் பிடுங்கி விட்டு, அந்தத் துவாரங்களில் சாந்தையோ, சுண்ணாம்பையோ வைத்துப் பூசிவிட்டு வெள்ளை அடிப்பர். எப்படிப்பூசினாலும் அந்த இடம் சற்று தடிமனாய் ஆணி இருந்ததற்கான அடையாளத்தைக் காட்டிக் கொண்டே இருக்கும். ஒரு துருப்பிடித்த ஆணி கூட தான் இருந்ததற்கான அடையாளத்தை விட்டு விட்டுப் போகிறதென்றால், ஆறறிவு படைத்த மனிதன் தான் வாழ்ந்ததற்கான ஓர் அடையாளத்தை விட்டுவிட்டுப் போக வேண்டாமா?
அந்த அடையாளம் ஏதேனும் ஒரு தியாகத்தினால் மட்டுமே சாத்தியமாகும். அந்த தியாகம், சுயநலமற்ற வாழ்வினால் உருவாகும். கடமையைச் செய்யவே காசு கேட்கும் இன்றைய வெகுஜனச் சூழலில், 'சுயநலம் என்பது தேசவிரோதச் செயல்' என்பதை உணர்வுப்பூர்வமாகப் பெற வேண்டும். எது தேசிய அவமானம் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த உலகப் புகழ்பெற்ற திரைப்படம் 'டைட்டானிக்'. 1912ல் நிகழ்ந்த ஒரு கப்பல் விபத்தை மையமாகக் கொண்ட காதல் சித்திரம். அந்தத் திரைப்படத்தில் சொல்லப்படாத உண்மை நிகழ்வொன்று,
'ஃணிச்ண ஒச்ணீச்ணஞுண்ஞு Mச்ண' என்ற டாக்குமெண்டரி படமாக வெளிவந்துள்ளது. பிறருக்காகத் தியாகம் செய்ய வாய்ப்பு இருந்தும், தன்னைக்காக்க சுயநலத்துடன் செயல்பட்டது 'தேசிய அவமானம்' என்பதை அத்திரைப்படம் காட்சிப்படுத்தி உள்ளது.1912ல் வடக்கு அட்லாண்டிக் கடலில் பயணித்த டைட்டானிக் கப்பல், பனிப்பறைகளில் மோதி விபத்து நிகழ்ந்து கடலில் மூழ்கிய பரபரப்பான நேரத்தில், உயிர் பிழைப்பதற்கு கப்பலில் பயணித்த ஒவ்வொருவரும் போராடினர். 1500க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், பயணிகளைக் காப்பாற்ற கப்பலில் இருந்து இறக்கப்பட்ட படகுகளில், கப்பல் கேப்டன் ஆணைப்படி, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முன்னுரிமைத் தரப்பட்டது.
இறுதிப் படகு... போதுமானவர்கள் படகில் குதித்துவிட, படகில் சிறிது இடம் மட்டும் இருக்கிறது. அந்த இடம் மூன்று நான்கு குழந்தைகள் அல்லது ஓரிரு பெண்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் தருமிடம். பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும் என கூட்டம் அலை மோத, மசாபுமி ஹோசனா என்ற ஜப்பானியர் கடைசியாக படகில் குதித்து இடம் பிடித்து உயிர்தப்பி விடுகிறார்.அமெரிக்கப் பத்திரிகைகள் அவரை 'அதிர்ஷ்டக்காரர்' என்று புகழ்ந்தன. ஆனால் ஹோசனாவின் சொந்த நாடான ஜப்பானின் பத்திரிகைகள் அவரைக் கடுமையாக விமர்சித்தன. தனக்குப் பதில் சில குழந்தைகளையோ, பெண்களையோ காப்பாற்றும் வாய்ப்பிருந்தும், ஹோசனா உயிர் தப்பியது, 'கோழைத்தனம்' என்று குற்றம் சாட்டின.
ஜப்பானின் பள்ளிப்பாடங்களில் ஹோசனாவின் படத்துடன் செய்தியை வெளியிட்டு, 'இவர் தேசத்தை அவமானப்படுத்திய சுயநலவாதி' என்றும், 'இவர் போல சுயநலவாதியாக வாழ்வது தேசத்திற்கு அவமானம்' என்றும் பள்ளிப் பிள்ளைகளுக்குப் போதிக்கப்பட்டது. 'இந்த அவமானத்தை விட ஹோசனா பகிரங்கமாக தற்கொலை செய்து கொள்ள வேண்டும்' என்று சில அமைப்புகள் அவரை நிர்பந்தப்படுத்தின.
இதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியினால், தனது இல்லத்தில் தனக்குத் தானே ஒரு சிறை வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, குற்ற உணர்ச்சியினால் 27 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்து 1939ல் ஹோசனா இறந்து போனார்.தியாகம் செய்வது பெருமிதம் தருவது. வாய்ப்பு இருந்தும் பிறருக்காகக் தியாகம் செய்யத் தவறுவது, அவருக்கு அவமானம் மட்டுமல்ல, அது 'தேசிய அவமானம்' என்பதை உணர வேண்டும்.
'சுயநலமில்லா பொதுவாழ்க்கை' என்பதே நமது தேசப்பற்றை உறுதி செய்யும். இனிவரும் சுதந்திர, குடியரசு தினங்கள், இத்தகு தேசப்பற்றாளர்களின் கொண்டாட்டமாகட்டும்!-முனைவர் மு.அப்துல் சமது,தமிழ்த்துறை,ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி,
உத்தமபாளையம்.93642 66001

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement